உங்கள் கட்டுரைகளுக்குத் துணைத்தலைப்புகள் தேவையா?

கட்டுரைகள் சிலவற்றில் துணைத்தலைப்புகள் (Subheadings) இடம்பெறுவதைப் பார்க்கிறோம். புனைவல்லாத (Nonfiction) நூல்களின் அத்தியாயங்களுக்குள்ளும் இந்தத் துணைத்தலைப்புகள் இடம்பெறுகின்றன. இவை எதற்காக? இவற்றைக் கண்டிப்பாகச் சேர்க்கவேண்டுமா?

முதலில், துணைத்தலைப்புகள் என்பவை ஒரு கட்டுரையை அல்லது அத்தியாயத்தைச் சிறு பகுதிகளாகப் பிரிக்கின்றன. இதன்மூலம், ஒரு நீண்ட கட்டுரையையோ அத்தியாயத்தையோ படிக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் வாசகர் எளிதில் ஒவ்வொரு துணைத்தலைப்பாகப் படித்துக்கொண்டு செல்லலாம்.

எழுதுபவருக்கும் இதில் நன்மை உண்டு. நீண்ட கட்டுரைகள், அத்தியாயங்களை எழுதும்போது சோர்வு இல்லாமல் எழுதுவதற்கு அவற்றைத் துணைத்தலைப்புகளாகத் திட்டமிடலாம், துணைத்தலைப்புகள் ஒவ்வொன்றையும் ஒரு சிறு கட்டுரையாகக் கருதிக்கொண்டு எழுத்தை முன்னெடுத்துச்செல்லலாம். அது அவர்களுக்குத் தனிப்பட்டமுறையில் ஊக்கத்தை அளிக்கும்.

அதே நேரம், துணைத்தலைப்புகள் பொருளுள்ளவகையில் அமையவேண்டும். எடுத்துக்காட்டாக, ஆளுமை ஒருவரைப்பற்றிய கட்டுரையில் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, முதல் வெற்றி போன்ற துணைத்தலைப்புகள் அமையலாம். அது அந்தக் கட்டுரையை இன்னும் தெளிவாக வழங்கி உதவும். அப்படியில்லாமல் ஒவ்வொரு பத்திக்கும் ஒரு துணைத்தலைப்பை வழங்கினால் அது தேவையற்ற ஒன்றாகத் துருத்திக்கொண்டு தெரியும். அதனால், சரியான சமநிலையைப் பின்பற்றவேண்டும்.

உங்கள் கட்டுரைகள், அத்தியாயங்களில் துணைத்தலைப்புகளைப் பயன்படுத்துகிறீர்களா? அதுபற்றிய உங்கள் கருத்துகளை, எடுத்துகாட்டுகளை, உத்திகளை Comments பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

***

Keywords: Subtitles, Subheadings, Sub titles, Sub headings, Sub title, Sub heading, Subtitle, Subheading, Titles, Title, Nonfiction, Non Fiction, Non-fiction, Nonfiction, Articles, Article, Non Fiction Books, Non-fiction Books, Nonfiction Books, Non Fiction Book, Non-fiction Book, Nonfiction Book

எழுத்தாளருக்குத் தேவையான திறமைகள் என்னென்ன?

ஓர் எழுத்தாளர்களுக்கு என்னென்ன திறமைகள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? எங்களுக்குத் தோன்றிய சிலவற்றை இங்கு வழங்கியுள்ளோம். உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்:

 • தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனிக்கும் திறமை
 • அதை எழுத்தில் பதிவுசெய்யவேண்டும் என்கிற ஆர்வம்
 • நல்லவற்றைச் சொல்லவேண்டும் என்கிற சமூகப் பொறுப்பு, அக்கறை
 • உண்மை, நேர்மை
 • கூர்ந்து கவனிக்கும் திறமை
 • நினைவாற்றல்
 • தன்னுடைய வாசகர் யார் என்கிற தெளிவு
 • வாசகர்மீது அக்கறை
 • நல்ல வாசிப்புத் திறன் (நன்கு படித்தவர்களால்தான் நன்கு எழுத இயலும்)
 • எழுத நினைப்பதை ஒழுங்குபடுத்திக் கட்டமைப்புக்குக் கொண்டுவரும் திறமை
 • ஆராய்ச்சித் திறமை (நூல்கள், ஆவணப் படங்கள், பேட்டிகள், இன்னும் பல வகைகளிலிருந்து)
 • நேரடிக் களப்பணி (தொடர்புடைய நபர்களைச் சந்தித்துப் பேட்டி எடுத்தல், நிகழ்வுகள் நடந்த இடங்களைப் பார்வையிட்டுக் குறிப்பெடுத்தல் போன்றவை)
 • (ஓரளவு) பிற மொழித் திறன் (ஆராய்ச்சிக்கு)
 • பொய்ச் செய்திகளைக் கண்டறிகிற, தகவல்களை உறுதிப்படுத்துகிற திறன்
 • குறிப்பெடுக்கும் திறமை
 • நூலைத் திட்டமிடும் திறன்
 • எழுத்துக் கருவிகளைக் கையாளும் திறன் (பேனா/கணினி/செல்பேசி/மென்பொருள்கள் போன்றவை)
 • எழுத்து, மொழி வல்லமை, சொல் வளம்
 • பல்வேறு எழுத்து உத்திகள்
 • இலக்கணத் திறன்
 • தொடர்ந்து எழுதும் ஒழுங்கு
 • பொறுமை (திரும்பத் திரும்ப வெவ்வேறுவிதமாக எழுதுதல், திருத்துதல் போன்றவை)
 • அழகுணர்ச்சி
 • எளிய எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்திப் புரியவைக்கும் திறன்
 • குழப்பமின்றி விளக்குதல், வாதாடுதல் திறன்
 • தொகுத்துச் சொல்லும் திறன்
 • பிழை திருத்தும் திறன்
 • ஈர்ப்பான தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் திறன்
 • பிறருடைய கருத்துகளைக் கேட்டு, அவற்றில் சரியானவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் திறன்
 • நூலை முன்வைக்கும் (Proposing) திறன், நூலின்மீது பிறருக்கு ஆர்வத்தைக் கொண்டுவருதல்
 • பதிப்பு உலகத்தைப்பற்றிய அறிவு
 • (ஓரளவு) சட்ட, பொருளாதார அறிவு
 • (ஓரளவு) சந்தைப்படுத்தல், விளம்பரத் திறன்
 • (ஓரளவு) இலக்கிய, வணிகத் தொடர்புகள்

இவை அனைத்தும் ஒவ்வோர் எழுத்தாளருக்கு இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை, எனினும், எவ்வளவு கூடுதலாக உள்ளதோ, அவ்வளவு நல்லது.

இதில் எந்தெந்தத் திறமைகள் உங்களுக்கு உள்ளன? எவற்றை வளர்த்துக்கொள்ள விரும்புகிறீர்கள்? எழுத்தாளர்களுக்குத் தேவையான மற்ற முக்கியத் திறன்கள் என்று நீங்கள் நினைப்பவை எவை? கமெண்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள், கற்றுக்கொள்வோம்.

***

Keywords: Writing, Planning, Researching, Authors, Writers, Author, Writer, Books, Book, Skills, Skill, Skillset, Author Skills, Writer Skills, Writing Skills

உங்கள் ஈபுக்கை(மின்னூலை)த் திட்டமிட்டுப் பதிப்பிப்பது எப்படி?

உங்களுடைய ஈபுக், அதாவது, மின்னூலைத் திட்டமிட்டுப் பதிப்பிப்பது எப்படி? சரியாகத் திட்டமிட்டு முறையாக வெளியிட்டுப் புகழ் பெறச் செய்வது எப்படி? அதற்கான இருபது படிநிலைகளைத் (Steps) தொகுத்து வழங்கியுள்ளோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

1

எதைப் பதிப்பிப்பது என்று தீர்மானியுங்கள். ஏற்கெனவே எழுதியதைத் தொகுத்து வெளியிடுகிறீர்களா, அல்லது, புதிதாக எழுதப்போகிறீர்களா?

2

இவ்வகை நூலுக்கு வரவேற்பு இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? நண்பர்களிடம் பேசுங்கள், இணையத்தில் உரையாடுங்கள், தகவல் திரட்டுங்கள், தேவைப்பட்டால் உங்கள் நூல் யோசனையில் மாற்றம் செய்யுங்கள்.

3

நூலை எழுதுங்கள். அல்லது, ஏற்கெனவே எழுதிய பகுதிகளைத் திரட்டுங்கள். எடிட் செய்து மேன்மையாக்குங்கள்.

உங்களுடைய நூல் யுனிகோட் வடிவத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பெரும்பாலான மின்னூல் வெளியீட்டுத் தளங்கள் யுனிகோட் வடிவத்தில்தான் உங்கள் படைப்புகளைப் பெறுகிறார்கள்.

ஒருவேளை உங்கள் படைப்பு யுனிகோடில் இல்லை என்றால், யுனிகோடுக்கு மாற்றுங்கள். அதற்குப் பல மென்பொருள்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக: NHM Converter அல்லது ஓவன்.

4

உங்கள் படைப்பு முழுவதும் ஒரே கோப்பில் இருக்கவேண்டும் (எடுத்துக்காட்டாக, DOCX அல்லது Google Docs வடிவம்). அவ்வாறு தொகுக்கும்போது, அத்தியாயத் தொடக்கங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள், நூலின் தொடக்கத்தில் நூலின் பெயர், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைச் சேருங்கள். வாசகர்களுடன் ஓரிரு வரிகளில் உரையாடும்படியான பகுதி ஒன்றைச் சேருங்கள், அது நல்ல பிணைப்பை உண்டாக்கும்.

5

நூலுக்கு Table of Contents (சுருக்கமாக, TOC, உள்ளடக்கப் பட்டியல்) தேவை. இதற்கு நீங்கள் ஒவ்வோர் அத்தியாயத்தையும் “Heading” என்ற முறையில் அமைக்கவேண்டும். பின்னர் TOCஐ உருவாக்கவேண்டும். இதன்மூலம் வாசகர் விரும்பிய பகுதிக்குத் தாவிச் செல்லலாம்.

TOC உருவாக்கத் தெரியவில்லையா? பிரச்சனை இல்லை. அதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இந்த வீடியோவைப் பாருங்கள். இதுபோல் இன்னும் பல வீடியோக்கள் உள்ளன, பத்து, பதினைந்து நிமிடத்தில் இதைக் கற்றுக்கொண்டுவிடலாம்.

6

நூலின் படங்களைச் சேர்க்கிறீர்கள் என்றால், அவற்றுக்கான பதிப்புரிமை யாரிடம் உள்ளது என்று பாருங்கள், அவர்களிடம் அனுமதி பெறுங்கள். உரிமை இல்லாத படைப்புகளைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.

இணையத்தில் காப்புரிமை தேவைப்படாத இலவசப் படங்கள் பலவும் உள்ளன. அவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, Unsplash மற்றும் Pixabay தளங்களைப் பாருங்கள்.

இன்னொரு விஷயம், மின்னூல்களுக்குப் படங்கள் பெரும்பாலும் தேவைப்படாது. மிகவும் தேவைப்படுகிற விளக்கப் படங்கள், வரைபடங்கள் (Maps) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மற்றபடி அவை இடத்தை அடைக்கிற விஷயங்கள்தான்.

7

நீங்கள் எந்தத் தளத்தில் பதிப்பிக்க விரும்புகிறீர்கள் என்று சிந்தியுங்கள். எடுத்துக்காட்டாக, அமேசான் கிண்டில் அல்லது கூகுள் புக்ஸ். அந்தத் தளத்துக்குச் சென்று, அவர்களுடைய விதிமுறைகளைப் படியுங்கள், வீடியோக்களைப் பாருங்கள், பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் பல தளங்களிலும் பதிப்பிக்கலாம். ஆனால், ஒன்றில் தொடங்கி முன்னேறுவது நல்லது.

8

முந்தைய படிநிலையில் நீங்கள் தேர்ந்தெடுத்த தளத்தில் உங்களை ஓர் உறுப்பினராக, அதாவது, பதிப்பாளராகப் பதிவு செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, உங்களுடைய வங்கித் தகவல்களை இவர்கள் கேட்பார்கள் (புத்தக விற்பனைத் தொகையை அனுப்புவதற்கு). இவை அனைத்தும் கைவசம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்தப் படிநிலைக்குச் சுமார் 1 மணி நேரம் தேவைப்படலாம். ஆனால் மகிழ்ச்சியான செய்தி, இதை நீங்கள் ஒருமுறை (அதாவது, முதல் மின்னூலுக்குமட்டும்) செய்தால் போதும், இரண்டாவது மின்னூலில் தொடங்கி இந்தப் பதிவு தேவைப்படாது.

9

பதிவு செய்த உங்கள் கணக்கில் நுழையுங்கள். புதிய மின்னூல் ஒன்றை உருவாக்குங்கள். மக்கள் விரும்பக்கூடிய, அவர்கள் தேடிக் கண்டறியக்கூடிய தலைப்பைக் கொடுங்கள். துணைத் தலைப்பு இன்னும் சற்று நீளமாக இருக்கலாம்.

10

உங்கள் புத்தகத்தை மக்கள் எப்படியெல்லாம் தேடக்கூடும் என்று சிந்தித்து, ஆராய்ச்சி செய்து Keywords எனப்படும் சொற்களைத் தேர்ந்தெடுங்கள். அவற்றை இங்கு பதிவு செய்யுங்கள்.

எடுத்துக்காட்டாக, எடைக் குறைப்பு பற்றிய ஒரு புத்தகத்தைத் தேடுவோர் Diet, Exercise, BMI போன்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடும்.

11

உங்கள் புத்தகத்தை வாசகர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்துகிற Blurb எனப்படும் குறிப்பை எழுதுங்கள். இது இரண்டு, மூன்று பத்தி அளவில் இருக்கலாம், அதைவிட நீளமாகவும் செல்லலாம். Bullet Points எனப்படும் பட்டியல் வடிவத்தைப் பயன்படுத்தினால் இன்னும் சுவையாக இருக்கும்.

12

உங்கள் நூலை எந்த வகைகளில் (Categories) வெளியிடுவது என்று தீர்மானியுங்கள். சரியான வகையில் அமைந்த நூல் இன்னும் பலரை இயல்பாகச் சென்று சேரும். ஆகவே, இந்த விஷயத்தில் அவசரப்படாமல் பலவிதமாகச் சிந்தித்து, ஏற்கெனவே இதேபோன்ற தலைப்பில் கிடைக்கும் நூல்களை ஆராய்ந்து ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள்.

9, 10, 11, 12வது படிநிலையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நீங்கள் முன்கூட்டியே சிந்தித்து ஓர் ஆவணத்தில் எழுதி வைத்துக்கொண்டாலும் நல்லது, அப்படியே காபி, பேஸ்ட் செய்துவிடலாம்.

13

உங்கள் நூலைப் பதிவேற்றுங்கள் (Upload செய்யுங்கள்). அது மின்னூல் கருவிகளில் எப்படித் தோன்றுகிறது (Preview) என்று கவனித்து உறுதிப்படுத்துங்கள்.

14

நூலை எந்தெந்த நாடுகளில் வெளியிடுவது என்று தீர்மானியுங்கள். மின்னூல்களில் அஞ்சல் செலவு இல்லை என்பதால் இயன்றவரை கூடுதல் நாடுகளில் வெளியிடலாம், தமிழர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள்.

15

நூலுக்கு என்ன விலை வைக்கலாம் என்று தீர்மானியுங்கள். உங்கள் நூலின் பக்க அளவு, அதன் தனித்தன்மை, ஏற்கெனவே இதேபோன்ற தலைப்பில் சந்தையில் உள்ள நூல்களின் விலை போன்றவற்றைச் சிந்தித்து இந்த விலையைக் கணக்கிடலாம். (ஆனால், இதைப்பற்றி மிகவும் அலட்டிக்கொள்ளவேண்டாம். பின்னாட்களில் எப்போது வேண்டுமானாலும் இதை மாற்றலாம்.)

16

நூலுக்கு அட்டை வடிவமையுங்கள். அதைத் தரவேற்றுங்கள் (Upload செய்யுங்கள்).

பெரும்பாலான மின்னூல் தளங்களில் அட்டைப்படி வட்வமைப்புக்கென்று எளிமையான தனிக் கருவிகளை அளித்திருக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் சில நிமிடங்களில் அட்டை ஒன்றை வடிவமைத்துவிடலாம்.

அல்லது, நீங்கள் ஒரு தொழில்முறை வல்லுனரிடம் சென்று அட்டைப்படத்தை வடிவமைக்கச் சொல்லலாம். அப்படிச் செய்யும்போது, எந்தத் தளத்தில் நூல் வெளியிடுகிறீர்கள் என்று சொல்லிவிட்டால் அவரே அழகாக அந்த வடிவமைப்பில் அட்டைப்படத்தை வழங்கிவிடுவார். (அவரிடம் HQ Version எனப்படும் உயர் தர, மாற்றக்கூடிய அட்டைப்பட வடிவத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். வருங்காலத்தில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்ய வசதியாக இருக்கும்.)

17

நூலைப் பதிப்பியுங்கள். அது அங்கீகரிக்கப்படும்வரை காத்திருங்கள்.

வாழ்த்துகள், உங்கள் நூல் வெளியாகிவிட்டது. இனி, நீங்கள் அதைச் சந்தைப்படுத்தவேண்டும். (Marketing)

18

உங்களுடைய நண்பர் வட்டம், அவர்களுடைய நண்பர் வட்டத்தில் நூலைப்பற்றிச் சொல்லுங்கள். நூலின் இணைப்பை (URL) வழங்குங்கள். குறிப்பாக, நூலை அவர்கள் ஏன் வாங்கவேண்டும் என்பதைக் கவனமாக விளக்குங்கள்.

19

உங்கள் வாசகர் வட்டத்தை எப்படி விரிவுபடுத்துவது என்று சிந்தியுங்கள். எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் பேசக் கற்பதுபற்றிய ஒரு நூலை மாணவர்களுக்கான Facebook குழுக்களில் மார்க்கெட்டிங் செய்யலாம். இதுபோல் ஏராளமான வழிகள் உள்ளன. இதற்கென்று நீங்கள் சிந்திக்கவேண்டும், உங்கள் நேரத்தைப் பொறுத்து அவற்றைச் செயல்படுத்தவேண்டும்.

20

நூலின் விற்பனையைக் கூர்ந்து கவனியுங்கள். எந்தெந்த மாற்றங்கள்/மார்க்கெட்டிங் நுட்பங்களுக்கு என்ன பலன் இருக்கிறது என்று ஒப்பிடுங்கள். நல்ல மாற்றங்களைத் தொடர்ந்து செய்யுங்கள், பயன்படாத மாற்றங்களை விட்டுவிடுங்கள்.

அதே நேரம், முழு நேர மார்க்கெட்டர் ஆகிவிடாதீர்கள், உங்கள் அடுத்த நூலைத் திட்டமிடுங்கள், வாழ்த்துகள்!

பின்குறிப்பு: இங்கு சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ள 20 படிநிலைகள் ஒவ்வொன்றிலும் பல மணி நேரங்களுக்கு விளக்கும் அளவு விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை நம் “எழுதுவோம்” தளத்தில் அவ்வப்போது விரிவாகப் பேசுவோம். அத்துடன், கிண்டில் நூல்களைப் பதிப்பிப்பதுபற்றி வெளியாகியுள்ள இந்த நூல்களையும் நீங்கள் படிக்கலாம்:

***

Keywords: Kindle, Google Books, EBooks, Ebook, Book, Book Publishing, Ebook Publishing, Kindle Book Publishing, Kindle Ebook Publishing, Google Book Publishing, Step by step instructions, How To Guide, How to publish your ebook, How to publish your first ebook, Tutorial, Book Research, Book Marketing

தலைப்பு: உங்கள் படைப்பின் முகம்

கதை, கட்டுரை, கவிதை, புத்தகம் என்று எதுவானாலும் சரி, நல்ல தலைப்பு முக்கியம். ஏனெனில், அதுதான் உங்கள் படைப்பின் முகம்.

கடைவீதியில் நடக்கும் மக்கள் ஒரு கடையின் வாசலைப் பார்த்து உள்ளே நுழைவார்கள். அதுபோல, வாசகர்கள் பலரும் தலைப்பைப் பார்த்துவிட்டுதான் அந்த விஷயத்தைப் படிக்கலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கிறார்கள்.

ஒரு நல்ல தலைப்பு, பொருத்தமான தலைப்பு எப்படியெல்லாம் இருக்கலாம்?

 • அந்தப் படைப்பு என்ன விஷயத்தைச் சொல்கிறது என்பதைத் தலைப்பு சுருக்கமாக விளக்கலாம். எடுத்துக்காட்டாக, “நூறு வயது வாழ்வது எப்படி?”
 • தலைப்பு ஆர்வத்தைத் தூண்டலாம். எடுத்துக்காட்டாக, “ஆயிரம் ரூபாய் முதலீட்டில் மிகப் பெரிய பிஸினஸ் சாம்ராஜ்யத்தை உருவான கதை.”
 • தலைப்பு ஒரு சொல் விளையாட்டாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, கிரிக்கெட் ஊழலைப்பற்றிய ஒரு கட்டுரைக்குக் “கிரிக்-கெட்டுவிட்டதா?” என்று தலைப்பு வைக்கலாம்
 • தலைப்பில் இயல்பாக எதுகை, மோனை இருந்தால் நல்லது. ஆனால் அதற்காகத் தனியே மெனக்கெடவேண்டியதில்லை. அப்படிச் செய்தால் செயற்கையாகிவிடும். எடுத்துக்காட்டாக, “இனிமையான இந்தோனேஷியா” என்று ஒரு பயணக் கட்டுரைக்குப் பெயர் வைக்கலாம், “ஜம்மென்ற ஜப்பான்” என்று வைத்தால் அவ்வளவாகப் பொருந்தாது
 • கதை, கவிதைகளுக்குச் சற்று கவித்துவமான தலைப்பு வைக்கலாம். திரைப்படப் பாடல்கள், இலக்கிய வரிகளைக்கூடப் பயன்படுத்தலாம், அவற்றைச் சற்று மாற்றியும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, எழுத்தாளர் ராஜேஷ்குமாருடைய சுயசரிதையின் தலைப்பு “என்னை நான் சந்தித்தேன்

ஆக, தலைப்பு வைப்பதில் உங்களுக்கு நிறைய சுதந்தரம் உண்டு. ஆனால், உள்ளே என்ன இருக்கிறது என்ற குழப்பத்தைமட்டும் உண்டாக்கிவிடக்கூடாது. அவ்வளவுதான்.

உங்களுக்குப் பிடித்த தலைப்புகளைக் கமென்ட்ஸில் சொல்லுங்கள்; நன்கு தலைப்பு வைக்கக் கற்றுக்கொள்வோம்.