வாசகர் பார்வையிலிருந்து எழுதுங்கள்: சொல்கிறார் வாரன் பஃபெட்

உலகின் மிகச் சிறந்த முதலீட்டாளர்களில் ஒருவர், நிதி, தொழில் சார்ந்த சிந்தனையாளர் வாரன் பஃபெட். அவரைப் பார்த்து முதலீட்டுத் துறைக்குள் வந்தவர்கள், வந்துகொண்டிருப்பவர்கள் ஏராளம்.

அது சரி, ‘எழுதுவோம்’ தளத்தில் அவர் ஏன் வருகிறார் என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகத் தன்னுடைய பங்குதாரர்களுக்குச் சிறப்பான கடிதங்களை எழுதிவருகிறார் வாரன் பஃபெட். அவற்றை எல்லாவிதமான மக்களும் படித்துப் பயன் பெறுகிறார்கள். அப்படியானால், எழுத்தாளர்களாகிய நாமும் அவரிடம் கற்றுக்கொள்ள ஓரிரு விஷயங்கள் இருக்குமில்லையா?

‘நான் எழுதும்போது வாசகருடைய பார்வையில் என்னை வைத்துக்கொள்வேன்’ என்கிறார் வாரன் பஃபெட். அதாவது, அவர் வாசகராக இருந்தால் அந்தக் கடிதத்தில் அல்லது கட்டுரையில் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார் என்பதை முதலில் சிந்திக்கிறார், பிறகு, அவை அனைத்தையும் அழகாகத் தொகுத்து எழுதிவிடுகிறார், மக்களும் அதைக் கொண்டாடிப் படிக்கிறார்கள்.

எளிய வழிமுறைதான், ஆனால், பின்பற்றக் கடினமானது, பின்பற்றினால் மிகப் பெரிய வெற்றியைத் தரக்கூடியது: வாசகருடைய பார்வையில் இருந்து எழுதுதல், வாசகரைப் புரிந்துகொள்ளுதல், அவர் எதிர்பார்க்கிறவற்றை நம் படைப்பில் வழங்குதல். இவை அனைத்தையும் வாரன் பஃபெட்டிடம் கற்றுக்கொள்வோம்.

வாரன் பஃபெட் எழுதிய புகழ் பெற்ற பங்குதாரர் கடிதங்களின் தொகுப்பு நூலைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்

***

Keywords: Warren Buffett, Berkshire Hathaway, Investor, Writer, Writers, Authors, Author, Writing, Investment, Advice, Reader, Reader Perspective

உங்கள் கதையில் எத்தனைப் பாத்திரங்கள் இருக்கலாம்?

சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் எழுதும்போது அவற்றில் உள்ள கதாபாத்திரங்கள் (கதை மாந்தர்கள்) எண்ணிக்கையைப்பற்றிப் பலருக்கு ஐயம் எழும். ‘ஒருவேளை நான் நிறையப் பேரைக் கதையில சேர்த்துக் குழப்பறேனோ’ என்று யோசிப்பார்கள். அல்லது, ‘இதுல வர்ற ஆளுங்க போதாதோ’ என்று கவலைப்படுவார்கள்.

உண்மையில், ஒரு கதைக்கு ஏற்ற பாத்திரங்களின் எண்ணிக்கையை எப்படித் தீர்மானிப்பது?

இங்கு எண்ணிக்கையைவிடத் தரம்தான் முக்கியம். அதாவது, ஏராளமான கதை மாந்தர்களைச் சேர்த்து அவர்கள் ஒவ்வொருவரையும் வாசகர் மனத்தில் தங்கச் செய்வதும் சாத்தியம், குறைந்த கதை மாந்தர்களை வைத்துக்கொண்டு வாசகர்கள் அவர்களைச் சிறிதும் கண்டுகொள்ளாதபடி ஆக்குவதும் சாத்தியம். தரம் இருந்தால் எல்லாம் சரியாக அமையும்.

அதனால், உங்கள் கதையை இன்னொரு முறை இந்தக் கோணத்தில் பாருங்கள். அதிலுள்ள ஒவ்வொரு பாத்திரத்தைப்பற்றியும் சில கேள்விகளைக் கேளுங்கள்:

 • இந்தப் பாத்திரம் இந்தக் கதைக்கு முக்கியமா?
 • இதை நீக்கிவிட்டால் என்ன ஆகும்? (எதுவும் ஆகாது என்றால், அது தேவையில்லாத பாத்திரம் என்று பொருள்)
 • இந்தப் பாத்திரத்துக்கு இப்போது நான் தந்திருக்கும் முக்கியத்துவம் போதுமா? அதைக் கூட்டவேண்டுமா அல்லது குறைக்கவேண்டுமா?
 • ஒவ்வொரு பாத்திரத்துக்கும் தேவையான அளவு பின்னணி, அழுத்தம் இருக்கிறதா? அந்தப் பாத்திரத்தின் தன்மையை நான் நன்கு புரிந்துகொண்டிருக்கிறேனா? அதைச் சரியாக எழுத்தில் கொண்டுவருகிறேனா? இந்தப் பாத்திரம் வெளிப்படும் தன்மையில் ஏதும் முரண்கள் இருக்கின்றனவா?
 • இந்தப் பாத்திரம் வாசகர் மனத்தில் உருவாக்கவேண்டும் என்று நான் நினைக்கிற உணர்வு என்ன? அதைக் கதை சரியாகச் செய்கிறதா?
 • நான் ஒரே காட்சியில் பல பாத்திரங்களைச் சேர்த்துக் குழப்பம் உண்டாக்குகிறேனா? ஆம் எனில், அவற்றைப் பல காட்சிகளாகப் பிரிப்பது சாத்தியமா? இயலாது என்றால், பாத்திரங்களுக்குள் குழப்பம் வராதபடி எழுதுவது எப்படி?

இப்படிப் பாத்திரங்களைச் சிந்திப்பதற்காகவே உங்கள் கதையை இன்னொருமுறை புரட்டுங்கள். எழுதுமுன்பே இவற்றைச் சிந்தித்துவிட்டு எழுதத் தொடங்கினால் இன்னும் சிறப்பு.

உங்கள் கதையைப் படிக்கும் வாசகர்களிடமும் உங்கள் பாத்திரங்களைப்பற்றிப் பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்த, பிடிக்காத பாத்திரங்கள் எவை, ஏன் என்று விசாரியுங்கள். இதுவும் உங்களுடைய பாத்திரத் தேர்ந்தெடுத்தலுக்கு உதவும்.

நல்ல பாத்திரங்கள் உங்கள் கதைகளைப் பெரிய உயரங்களுக்குக் கொண்டுசெல்லும். வாசகர்கள் அந்தப் பாத்திரங்களை (உங்களையும்தான்) நன்கு கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட பாத்திரங்களை நீங்கள் உருவாக்கி வெற்றிபெற வாழ்த்துகள்.

***

Keywords: Novels, Novel, Short Stories, Short Story, Shortstories, Shortstory, Novelettes, Novelette, Stories, Story, Fiction, Fictional Stories, Fictional Characters, Characters, Character, Fictional Story Characters, Number of Characters, Character Sketch, Balance

உங்கள் கதை பத்திரிகையிலிருந்து திரும்பிவந்தால் என்ன செய்வீர்கள்?

நிராகரிப்பு என்பது எல்லாருக்கும் வருத்தமான ஒன்றுதான். குறிப்பாக, எழுத்தாளராகிய உங்களுடைய கதையோ கவிதையோ கட்டுரையோ பத்திரிகையிலிருந்து திரும்பி வந்தால் அது மிகுந்த வருத்தத்தை உண்டாக்கும், சோர்வில் தள்ளும், தொடர்ந்து எழுத இயலாதபடி சிரமப்படுத்தும்.

ஆனால், நிராகரிப்பு என்பதும் எழுத்தின் ஒரு பகுதிதான். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எல்லாரும் இதுபோன்ற நிராகரிப்பைக் கடந்துதான் வந்திருக்கிறார்கள். சிலர் அந்த நிராகரிப்பை ஒரு படிக்கல்லாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறியிருக்கிறார்கள்.

ஒருவேளை, உங்கள் படைப்பு நிராகரிக்கப்பட்டால் என்ன செய்யலாம்?

 • முதலில் வரும் வருத்தம் வரட்டும். அது இயல்பான மனித உணர்ச்சிதான். அதை அப்படியே விட்டுவிடுங்கள், தடுக்கவேண்டாம்.
 • வருத்தம் தீர்ந்தபின், அது ஏன் நிராகரிக்கப்பட்டது என்று யோசிக்கலாம். ஒருவேளை அவர்கள் காரணம் சொல்லியிருந்தால் அதைப் புரிந்துகொள்ள முயலலாம்.
 • அந்தக் காரணம் நியாயமாக இருந்தால், அதைச் சரிசெய்ய முயலலாம், நிராகரிப்பு என்பது கற்றுக்கொள்வதற்கான நல்ல வாய்ப்புதான்.
 • அந்தக் காரணம் நியாயமாக இல்லாவிட்டால், அதை மறந்துவிடலாம். ஏதோ காரணத்தால் இந்தப் படைப்பு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான். (சில படைப்புகள் சில இதழ்களுக்குப் பொருந்தாது. அதுகூட நிராகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்ம், அது உங்கள் படைப்பின் பிரச்சனை இல்லை.)
 • ஒருவேளை, எந்தக் காரணமும் வழங்கப்படவில்லை என்றால், உங்களுக்குத் தெரிந்த சில நண்பர்களிடம் அந்தப் படைப்பைக் கொடுத்துப் படிக்கச் சொல்லலாம், பாராட்டைக் கேட்காமல், ‘இதுல என்ன பிரச்சனைன்னு சொல்லி உதவுங்க’ என்று வெளிப்படையாகக் கேட்கலாம். தேவைப்பட்டால் நுண்ணுணர்வு வாசகர்கள் எனப்படும் Sensitivity Readersஐக்கூடப் பயன்படுத்தலாம்.
 • இப்படிப் படித்தவர்கள் சொல்லும் காரணங்களைச் சிந்தித்துப்பார்த்துப் படைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். அந்தப் பிழைகள் மீண்டும் வராதபடி பார்த்துக்கொள்ளலாம்.
 • திருத்தப்பட்ட படைப்பை அதே இதழுக்கு அல்லது இன்னோர் இதழுக்கு அனுப்பிவைக்கலாம். வெற்றி நிச்சயம்.

உங்களுடைய நிராகரிப்புகளை நீங்கள் எப்படிச் சந்திக்கிறீர்கள்? எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவை எல்லா எழுத்தாளர்களுக்கும் பயன்படும்.

***

Keywords: Rejection, Rejected, Handling Rejection, Handling Rejections, Books, Book, Articles, Article, Stories, Story, Novels, Novel, Short Stories, Short Story, Shortstories, shortstory, Returned, Story Returned, Returned Story, Rejected Story, Story Rejected

உங்களுடைய Sensitivity Reader யார்?

உங்களுடைய கதை, கட்டுரை, நூல் போன்றவற்றை எழுதியதும் பிறரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வீர்கள், அவர்கள் சொல்லும் கருத்துகளைச் சிந்தித்து, தேவையான திருத்தங்களைச் செய்வீர்கள், அதன்பிறகுதான் பதிப்பிப்பீர்கள். அது ஒரு நல்ல பழக்கம், உங்கள் படைப்பைச் சிறப்பாக ஆக்குகிற உத்தி.

ஏனெனில், எழுதுகிற நம்முடைய பார்வையும் வாசகருடைய பார்வையும் ஒரேபோல் இருப்பதில்லை. அதனால், நாம் ஒரு குறிப்பிட்ட வகையில் சிந்தித்த படைப்பைப் பிறர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அதன்படி செயல்படுவது நல்லது.

ஆனால், இப்படிப் பிறருடைய கருத்துகளைப் பொதுவாகக் கேட்பதுமட்டும் போதாது, அதில் ஒருவராவது Sensitive Readerஆக இருக்கவேண்டும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

அதென்ன Sensitive Reader?

Sensitive என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகரமுதலி சொல்லும் பொருள் இது:

Quick to detect or respond to slight changes, signals, or influences

தமிழில் இதை நுண்ணுணர்வு என்று கூறலாம். அதாவது, படைப்பில் நுட்பமாக வெளிப்படக்கூடிய, பிறரை நல்லமுறையில் அல்லது கெட்டமுறையில் பாதிக்கக்கூடிய விஷயங்களை அடையாளம் காண்பது.

எடுத்துக்காட்டாக, உங்கள் கதையில் காது கேட்காதவர்களைக் கேலி செய்து ஒரு வரி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எழுதும்போது நீங்கள் அதை ஒரு நகைச்சுவையாக எண்ணியிருக்கலாம். ஆனால், உண்மையில் காது கேட்காத ஒருவர் அதைப் படிக்கும்போது மனம் வருந்தக்கூடும். இதுபோன்றவற்றை அடையாளம் கண்டு சுட்டிக்காட்டுகிறவர்தான் Sensitivity Reader, அதாவது, நுண்ணுணர்வுள்ள வாசகர்.

இங்கு காது கேளாமை என்பது ஓர் எடுத்துக்காட்டுதான். இதேபோல் பெண்களை, குள்ளமானவர்களை, மெதுவாக நடக்கிறவர்களை, ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களைக் கேலி செய்கிற விஷயங்கள் உங்களையும் அறியாமல் உங்கள் படைப்பில் இடம்பெற்றுவிடலாம். எல்லாருக்கும் எழுதுகிற நீங்கள் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பதற்கு ஒரு Sensitivity Reader உதவுவார், பிரச்சனையை உங்களுக்குப் புரியவைத்துத் திருத்துவார்.

அதனால், உங்களுடைய படைப்புகளை வெளியிடுமுன் நுண்ணுணர்வுள்ள வாசகர் ஒருவரிடம் படிக்கக் கொடுங்கள். அப்படி ஒருவர் உங்கள் வட்டத்தில் இல்லை என்றால், அவரைக் கண்டறியுங்கள். அதைவிட முக்கியம், அவர் சொல்லும் கருத்துகளைக் கூர்ந்து கவனித்து, வருங்காலத்தில் உங்கள் எழுத்தில் அந்தப் பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் Sensitive Reader ஆக விரும்புகிறீர்களா? அதைக் கற்றுத்தரும் புத்தகம் ஒன்று இங்கு உள்ளது.

***

Keywords: Readers, Reader, Reviewers, Reviewer, Review, Reading, Reviewing, Comments, Comment, Commenting, Feedback, Feed back, Sensitive, Sensitivity, Sensitive Reader, Sensitivity Reader, Sensitive Reader, Sensitivity Readers, Alpha Reader, Alpha Readers, Beta Reader, Beta Readers

நாட்டுக் காய் Vs கலப்பினக் காய்: நீங்கள் எந்த வகை?

இன்று எங்கள் வீட்டில் நாட்டு மக்காச்சோளம் (அதாவது, உள்ளூர் வகை மக்காச்சோளம்) வேகவைத்திருந்தார்கள். நானும் குழந்தைகளும் அதை ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.

எங்கள் குழந்தைகளுக்கு ‘ஸ்வீட் கார்ன்’ எனப்படும் கலப்பின (ஹைப்ரிட்) மக்காச்சோளமும் பிடிக்கும். எனக்கு அது அவ்வளவாகப் பிடிக்காது. அதனால், அவர்களைக் கொஞ்சம் சீண்டினேன், ‘இந்த நாட்டு மக்காச்சோளம் எவ்ளோ நல்லா இருக்கு, இதை விட்டுட்டு ஏன் ஹைப்ரிட் மக்காச்சோளத்தை விரும்பிச் சாப்பிடறீங்க?’

‘இந்த மக்காச்சோளம் நல்லாதான் இருக்கு. ஆனா, இது எப்பவும் இவ்ளோ நல்லா இருக்காது, சில சமயம் சூப்பரா இருக்கும், சில சமயம் சொதப்பிடும், Consistency இல்லை’ என்றாள் என் மூத்த மகள், ‘ஹைப்ரிட் வெரைட்டியில அது ஒரு வசதி, எப்பவும் ஒரேமாதிரி Consistent சுவை இருக்கும். இது நல்லா இருக்குமோ, இருக்காதோன்னு யோசிக்கவேண்டியதில்லை. நம்பிச் சாப்பிடலாம்.’

என் மகள் சொன்ன இந்தக் கருத்து மக்காச்சோளத்தைப்போலவே எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்:

 • சில எழுத்தாளர்கள் நாட்டு மக்காச்சோளத்தைப்போல் அவ்வப்போது மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள், மற்ற நேரங்களில் சுமாராக எழுதுகிறார்கள். அவர்களுடைய படைப்புகளில் சிறந்தவற்றைத் தேடிப் பிடிப்பது வாசகர்களுக்கு ஒரு வேலை.
 • வேறு சில எழுத்தாளர்கள் கலப்பின மக்காச்சோளத்தைப்போல் எப்போதும் ஒரேமாதிரி எழுதுகிறார்கள். அது சிறப்பா, சிறப்பில்லையா என்பது வேறு விஷயம். அந்த ‘ஒரேமாதிரி எழுதுவது’ என்கிற Consistencyக்கு வாசகர்கள் மதிப்பு அளிக்கிறார்கள். ‘அவர் எழுதின கதையா? நம்பிப் படிக்கலாம்’ என்று நினைக்கிறார்கள், அந்த நம்பிக்கையை அவர் ஒவ்வொருமுறையும் கண்டிப்பாகக் காப்பாற்றிவிடுகிறார். (திரைப்படத்துறையில் ‘Minimum Guarantee இயக்குநர்கள்’ என்று சிலர் உண்டு. அவர்களும் இந்த வகைதான்.)

எழுத்தாளராக நீங்கள் எந்த வகை? அவ்வப்போது மிகச் சிறப்பாக எழுதுகிறவரா? அல்லது எப்போதும் ஒரேமாதிரி தரத்தைப் பராமரிக்கிறவரா?

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Consistency, Quality, என். சொக்கன், என்சொக்கன், சொக்கன், N. Chokkan, nchokkan, N. Sokkkan

ஒரு கதை அல்லது கட்டுரையில் எத்தனைச் சொற்கள் இருக்கலாம்?

கதை, கவிதை, குறுநாவல், நாவல் என அனைத்துக்கும் சொல் வரையறை அமைப்பது நம்முடைய பழக்கமாக இருக்கிறது. சில பத்திரிகைகளும் “இத்தனைச் சொல்லுக்குள் கட்டுரை அனுப்புங்கள்” என்று விதிமுறைகளை வகுக்கிறார்கள்.

உண்மையில், இதுபோன்ற முன் கட்டுப்பாடுகளை வைத்து ஒரு படைப்பு அமைவதில்லை. அந்தந்த விஷயத்தைச் சொல்வதற்கு எத்தனைச் சொற்கள் தேவையோ அத்தனைச் சொற்களை வழங்கினால்தான் அது முழுமை பெறும். தேவைக்கு மேல் எழுதும் சொற்கள் அதைத் தொய்வாக்கும், தேவைக்குக் குறைவாக எழுதினால் புரியாது.

ஆனால், அந்தத் தேவையை எப்படித் தெரிந்துகொள்வது?

இது பழக்கத்தால் வருகிற பயிற்சிதான். தொடக்கத்தில் நாம் எழுதும் அனைத்தையும் நாமே உரக்கப் படித்துப்பார்ப்பதன்மூலம் அதிலிருக்கும் தேவையில்லாத பகுதிகளை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். ஆனால் ஒன்று, நம் எழுத்தை இன்னொருவருடைய பார்வையிலிருந்து பார்க்கவேண்டும், அப்போதுதான் தேவையற்றவை தெரியும், இல்லாவிட்டால் “எல்லாம் நல்லாதான் இருக்கு” என்று எண்ணிவிடுவோம்.

இப்படித் தேவையானவற்றை வைத்துக்கொண்டு மற்றவற்றை வெட்டிப் பழகினால், அதாவது, நம் எழுத்தை நாமே எடிட் செய்து பழகினால், படைப்பின் நீளத்தைவிட முழுமைதான் முக்கியம் என்பது நமக்குத் தெரியும். அப்போது சொல் கணக்கைப் பொருட்படுத்தமாட்டோம்.

இதே பணிக்கு நாம் நம்முடைய நண்பர்களுடைய உதவியையும் நாடலாம். அதாவது, அவர்களிடம் கதையை, கட்டுரையைத் தந்து படிக்கச் சொல்லலாம், ‘சரியா இருக்கா, எங்கயாவது நீளம் கூடக்குறைய இருக்கறதாத் தோணுதா?’ என்று வெளிப்படையாகக் கேட்கலாம், அவர்களுடைய கருத்துகளைக் கூர்ந்து கவனித்து நம் படைப்பைச் செழுமையாக்கலாம்.

முன்பெல்லாம் அச்சு இதழ்களில் சொல் கணக்கு முக்கியமாக இருந்தது. இப்போது டிஜிட்டல் ஊடகங்களில் அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. எனினும், வாசகர்கள் கவனித்துப் படிப்பார்களா என்பது முக்கியம், அதனால் சொல் கணக்கு எப்போதும் நம் மனத்தில் இருக்கவேண்டும். சுருங்க எழுதுவதும் சரியாக எழுதுவதும் நாம் பயிலவேண்டிய கலைகள்.

ஆனால் ஒன்று, போட்டிகள் போன்றவற்றில் கலந்துகொள்ளும்போது அவர்கள் சொல்லும் சொல் கணக்கை மதிப்பது முக்கியம். 500 சொற்களுக்குள் சிறுகதை அனுப்புங்கள் என்று அவர்கள் சொல்லும்போது நாம் 1200 சொற்களில் அனுப்பினால் அது சரியாகாது.

ஆனால், அந்தக் கதைக்கு 1200 சொற்கள் தேவைப்பட்டால் என்ன செய்யலாம்?

 1. அதை வேறொரு பத்திரிகைக்கு அல்லது போட்டிக்கு அனுப்பலாம் (அல்லது)
 2. மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு எடிட் செய்து 500 சொற்களுக்குக் கொண்டுவரலாம். இது போட்டிக்காகச் செய்யும் சமரசம்தான். பின்னர் கதை வெற்றி பெற்றுப் பிரசுரமானபின் முழு வடிவத்தை உங்கள் வலைப்பதிவில் அல்லது நூலில் வெளியிடலாம். ஏனெனில், 1200 சொற்கள் உள்ளதுதான் சரியான அளவு, சரியான கதை என்று எழுத்தாளராகிய நீங்கள் தீர்மானித்திருக்கிறீர்கள்.

***

Keywords: Stories, Story, Novels, Novel, Articles, Article, Nonfiction, Fiction, Editing, Number of words, Words, Word Size, Wordsize, Word Limit, Wordlimit, Size of a story, Size of an article, Story Size, Article Size

எழுத்தாளருக்குத் தேவையான திறமைகள் என்னென்ன?

ஓர் எழுத்தாளர்களுக்கு என்னென்ன திறமைகள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? எங்களுக்குத் தோன்றிய சிலவற்றை இங்கு வழங்கியுள்ளோம். உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்:

 • தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனிக்கும் திறமை
 • அதை எழுத்தில் பதிவுசெய்யவேண்டும் என்கிற ஆர்வம்
 • நல்லவற்றைச் சொல்லவேண்டும் என்கிற சமூகப் பொறுப்பு, அக்கறை
 • உண்மை, நேர்மை
 • கூர்ந்து கவனிக்கும் திறமை
 • நினைவாற்றல்
 • தன்னுடைய வாசகர் யார் என்கிற தெளிவு
 • வாசகர்மீது அக்கறை
 • நல்ல வாசிப்புத் திறன் (நன்கு படித்தவர்களால்தான் நன்கு எழுத இயலும்)
 • எழுத நினைப்பதை ஒழுங்குபடுத்திக் கட்டமைப்புக்குக் கொண்டுவரும் திறமை
 • ஆராய்ச்சித் திறமை (நூல்கள், ஆவணப் படங்கள், பேட்டிகள், இன்னும் பல வகைகளிலிருந்து)
 • நேரடிக் களப்பணி (தொடர்புடைய நபர்களைச் சந்தித்துப் பேட்டி எடுத்தல், நிகழ்வுகள் நடந்த இடங்களைப் பார்வையிட்டுக் குறிப்பெடுத்தல் போன்றவை)
 • (ஓரளவு) பிற மொழித் திறன் (ஆராய்ச்சிக்கு)
 • பொய்ச் செய்திகளைக் கண்டறிகிற, தகவல்களை உறுதிப்படுத்துகிற திறன்
 • குறிப்பெடுக்கும் திறமை
 • நூலைத் திட்டமிடும் திறன்
 • எழுத்துக் கருவிகளைக் கையாளும் திறன் (பேனா/கணினி/செல்பேசி/மென்பொருள்கள் போன்றவை)
 • எழுத்து, மொழி வல்லமை, சொல் வளம்
 • பல்வேறு எழுத்து உத்திகள்
 • இலக்கணத் திறன்
 • தொடர்ந்து எழுதும் ஒழுங்கு
 • பொறுமை (திரும்பத் திரும்ப வெவ்வேறுவிதமாக எழுதுதல், திருத்துதல் போன்றவை)
 • அழகுணர்ச்சி
 • எளிய எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்திப் புரியவைக்கும் திறன்
 • குழப்பமின்றி விளக்குதல், வாதாடுதல் திறன்
 • தொகுத்துச் சொல்லும் திறன்
 • பிழை திருத்தும் திறன்
 • ஈர்ப்பான தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் திறன்
 • பிறருடைய கருத்துகளைக் கேட்டு, அவற்றில் சரியானவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் திறன்
 • நூலை முன்வைக்கும் (Proposing) திறன், நூலின்மீது பிறருக்கு ஆர்வத்தைக் கொண்டுவருதல்
 • பதிப்பு உலகத்தைப்பற்றிய அறிவு
 • (ஓரளவு) சட்ட, பொருளாதார அறிவு
 • (ஓரளவு) சந்தைப்படுத்தல், விளம்பரத் திறன்
 • (ஓரளவு) இலக்கிய, வணிகத் தொடர்புகள்

இவை அனைத்தும் ஒவ்வோர் எழுத்தாளருக்கு இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை, எனினும், எவ்வளவு கூடுதலாக உள்ளதோ, அவ்வளவு நல்லது.

இதில் எந்தெந்தத் திறமைகள் உங்களுக்கு உள்ளன? எவற்றை வளர்த்துக்கொள்ள விரும்புகிறீர்கள்? எழுத்தாளர்களுக்குத் தேவையான மற்ற முக்கியத் திறன்கள் என்று நீங்கள் நினைப்பவை எவை? கமெண்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள், கற்றுக்கொள்வோம்.

***

Keywords: Writing, Planning, Researching, Authors, Writers, Author, Writer, Books, Book, Skills, Skill, Skillset, Author Skills, Writer Skills, Writing Skills

உங்கள் நூல் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?

நம்முடைய படைப்பு ஒன்று யாராலாவது நிராகரிக்கப்பட்டால், அது ஒரு மாற்றமுடியாத தீர்ப்பு என்று எண்ணவேண்டியதில்லை என்கிறார் திரை எழுத்தாளர், இயக்குநர் Brian Koppelman. அதற்குப்பதிலாக, அந்த நிராகரிப்பையும் நம்முடைய படைப்பையும் எதிரெதிரில் வைத்துச் சிந்திக்கவேண்டும் என்கிறார்:

 • இவர் X என்ற காரணத்தால் என்னுடைய படைப்பை நிராகரிக்கிறார்
 • என்னுடைய படைப்பில் X இருக்கிறதா?
 • இல்லை என்றால், அந்த நிராகரிப்பை நாம் நிராகரித்துவிடலாம்
 • இருக்கிறது என்றால், X ஒரு பிரச்சனையா?
 • பிரச்சனையில்லை என்றால், அந்த நிராகரிப்பை நாம் நிராகரித்துவிடலாம். எடுத்துக்காட்டாக, நாம் காமெடிக் கதை எழுதியிருக்கும்போது “அதில் லாஜிக் இல்லை” என்ற காரணத்தால் ஒருவர் நிராகரித்தால், அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை.
 • பிரச்சனைதான் என்றால், இதை நான் சரி செய்ய இயலுமா?
 • சரி செய்ய இயலும் என்றால், சரி செய்து மீண்டும் அவரிடமோ இன்னொருவரிடமோ சமர்ப்பிக்கலாம்
 • சரி செய்ய இயலாது என்றால், அதை ஓரமாக வைத்துவிட்டு, இந்த அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்

இப்படி நிராகரிப்பு என்பது ஒரு (நல்ல) மாற்றத்துக்கு வழிவகுக்கவேண்டும், அதை வெறும் தீர்ப்பாகப் பார்த்து மனம் வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை என்கிறார் பிரயன்.

‘தோல்விதான் வெற்றிக்கு முதல் படி’ என்கிற நம் ஊர்ப் பொன்மொழிகூட இந்த வகைதான் என்று நினைக்கிறேன். திரும்பத் திரும்ப ஒரேமாதிரி செய்து தோற்றுக்கொண்டே இருந்தால் வெற்றி வந்துவிடாது, அந்தத் தோல்வியைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்துப் பாடம் கற்றுக்கொண்டு வேறுவிதமாக முயன்றால்தான் அது வெற்றிக்கு முதல் படி.

***

Keywords: Rejection, Rejections, Failure, Failures, Success, Handling Rejection, Handling Rejections, Rejection Letter, Rejected Script, Rejected Manuscript, Rejected Book, Book Rejected

எழுத்தாளர்கள் விமர்சனங்களைப் பொருட்படுத்தவேண்டுமா?

எழுத்தாளர்களுடைய முன்னேற்றத்துக்கு, அவர்களுடைய எழுத்துகள் சிறப்பாக அமைவதற்கு விமர்சனங்கள் மிகவும் முக்கியம். நூலைப் படித்து அதை இன்னும் சிறப்பாக்குவதற்கு என்ன செய்யலாம் என்று ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்கிற விமர்சகர்களை நாம் கொண்டாடவேண்டும், அவர்களுடைய கருத்துகளைக் கேட்டு, உரியவற்றை மாற்றிக்கொள்ளவேண்டும், மற்றவற்றை மறந்துவிடலாம்.

அதனால்தான், நம்முடைய எழுதுவோம் தளத்திலும் எழுத்துபற்றிய அனைத்துத் தளங்களிலும் விமர்சனங்களைப் பெறுவது, அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. Alpha Readers, Beta Readers என விமர்சகர்களைப் பிரித்து அவர்களுக்கு உங்கள் படைப்புகளை முதலில் படிக்கக் கொடுங்கள் என்று வலியுறுத்துகிறோம். எழுதுபவர், எடிட் செய்பவருக்குத் தெரியாத பல குறைகள், மேம்பாடுகள் இவர்களுக்குத் தெரியக்கூடும், அவை நூலைச் சிறப்பாக்கும்.

புத்தகம் வெளியானபிறகும், அமேசான் போன்ற தளங்களில் அதற்கு எழுதப்படும் விமர்சனங்களை எழுத்தாளர்கள் ஊன்றிக் கவனிக்கிறார்கள். அதிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு தங்களுடைய வருங்காலப் புத்தகங்களில் செயல்படுத்துகிறார்கள்.

எனினும், எல்லா விமர்சனங்களும் இப்படி ஆக்கப்பூர்வமாக அமைவதில்லை. சும்மா வீம்புக்கென்று திட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களை எண்ணி மனம் வருந்திக்கொண்டிருந்தால் எழுதுவதற்கு ஏது நேரம்? புறந்தள்ளிவிட்டுச் செல்லப் பழகவேண்டும்.

இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது, இன்று ட்விட்டரில் படித்த ஒரு சுவையான கருத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்:

பல நேரங்களில், உங்களை விமர்சிக்கிறவர்கள் உங்களைவிடக் குறைவாகப் படைத்துக்கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.

: ஶ்ரீராம்

***

Keywords: Writers, Authors, Criticism, Review, Comments, Feedback, Reviews, Book Review, Book Reviews, Critics, Reviewers, Critic, Reviewer, Feedback Provider, Reader, Alpha Reader, Beta Reader, Readers, Alpha Reader, Beta Readers, Books, Book, Ebooks, Ebook, Creativity

தமிழில் பிழை திருத்தும் மென்பொருள்: வாணி

ஆங்கிலத்தில் நம்முடைய பிழைகளைத் திருத்துகிற பல மென்பொருள்கள் உள்ளன. Microsoft Word உள்ளிட்ட பல எழுதும் மென்பொருட்களில் இதுபோன்ற திருத்தும் மென்பொருள்களும் இணைக்கப்பட்டுள்ளன. Grammarlyபோன்ற தனிப் பிழை திருத்தும் தளங்களும் உள்ளன.

தமிழில் எழுதுவோருக்கு இதுபோன்ற வசதிகள் உண்டா?

கணினி மற்றும் மொழி ஆர்வலரான நீச்சல்காரன் அவர்கள் உருவாக்கியிருக்கும் ‘வாணி‘ என்ற மென்பொருளைப் பயன்படுத்திப் பாருங்கள். உங்களுடைய எழுத்தில் இருக்கக்கூடிய எழுத்துப் பிழைகளைக் கண்டறிந்து அழகாக அடிக்கோடிட்டுக் காண்பிக்கும். நிறைய எழுதுகிறவர்கள், பிழையின்றி எழுதவேண்டும் என்ற ஆர்வம் கொண்ட எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது.

இதுபோன்ற மென்பொருள்கள் எல்லா எழுத்து மென்பொருள்களிலும் வரவேண்டும். அப்போதுதான் தமிழ் எழுத்தில் மலிந்துள்ள பிழைகள் குறையும்.

‘வாணி’ மென்பொருளைப் பயன்படுத்த, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Spellchecker, Spell Checker, Spellchecking, Spell Checking, பிழை திருத்தம், பிழைத் திருத்தம், பிழைதிருத்தம், பிழைத்திருத்தம், மெய்ப்பு, மெய்ப்பு பார்த்தல், Proofreading, Proof Reading, பிழை திருத்துதல், பிழைதிருத்துதல், எடிட்டிங், எடிட்டர், பிழை திருத்துபவர், பிழையின்றி எழுதுவோம், தமிழ் மென்பொருள், Tamil Software