உங்களுடைய நூலுக்காகத் திரட்டிய ஆராய்ச்சித் தகவல்களை எத்தனை நாள் பத்திரமாக வைத்திருக்கவேண்டும்?

ஒவ்வொரு புத்தகத்துக்காகவும் நீங்கள் மிகுந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறீர்கள், ஏராளமான தகவல்களைத் திரட்டுகிறீர்கள், அவை பல பக்கங்களுக்கு, பல கோப்புகளுக்கு நீளலாம். நீங்கள் அந்தப் புத்தகத்தை எழுதும்போது அவை மிகவும் உதவியாக இருக்கும்.

ஆனால், புத்தகத்தை எழுதி வெளியிட்டபின் அந்தத் தகவல்களை என்ன செய்வது? தூக்கி எறிந்துவிடலாமா?

‘ம்ஹூம், வேண்டாம். அந்தக் குறிப்புகளை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள்’ என்கிறார் பல புகழ் பெற்ற நூல்களின் ஆசிரியரான மாக்ஸ் குந்தர். இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்:

 1. அந்தப் புத்தகத்தைப்பற்றிப் பின்னர் யாராவது ஏதாவது கேள்வி கேட்டால், அல்லது, உங்கள்மீது சினம் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், சான்றுகளை எடுத்துக் காண்பிக்க உதவியாக இருக்கும்.
 2. உங்கள் புத்தகத்தைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்குப் பதில் அளிக்க உதவியாக இருக்கும்.
 3. அந்தப் புத்தகத்தைப் பின்னாட்களில் நீங்களே மேம்படுத்தி எழுத, அல்லது அது சார்ந்த இன்னொரு நூலை (வேறொரு கோணத்தில்) எழுத இந்தக் குறிப்புகள் மிகவும் உதவும்.
 4. நீங்கள் இந்தத் தலைப்பில் ஒரு நூல் எழுதியிருப்பதால், பத்திரிகைகள் அதுசார்ந்த சிறு தலைப்புகளில் உங்களிடம் கட்டுரை கேட்கலாம், அப்போது நீங்கள் இந்தக் குறிப்புகளை எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதனால், உங்கள் நூலுக்கான குறிப்புகளை எப்போதும் சேமித்துவையுங்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இது மேலும் எளிதாகிவிட்டது. உங்களுடைய கோப்புகள் இடத்தை அடைக்குமோ என்று கவலைப்படாமல் கூகுள் டிரைவ் அல்லது டிராப்பாக்ஸில் ஏற்றிப் பத்திரமாக வைத்துவிடலாம்.

தொடர்புடைய இணைப்புகள்:

 • இந்தக் குறிப்பு Nonfiction புத்தகங்கள் எழுதுவது எப்படி என்பதுபற்றி மாக்ஸ் குந்தர் எழுதிய “Writing and Selling a Nonfiction Book” என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை.
 • மாக்ஸ் குந்தர் எழுதிய மற்ற நூல்களை இங்கு காணலாம்
 • Nonfiction எழுதுவதுபற்றிய ஒரு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள, இங்கு க்ளிக் செய்யுங்கள்

***

Keywords: Nonfiction, Fiction, Nonfiction Books, Nonfiction Book, Fiction Books, Fiction Book, Research, Book Research, Researching, Data, Notes, Note, Note Taking, Files, Storage, Books, Max Gunther

உங்கள் புனைவல்லாத (Nonfiction) புத்தகத்துக்கான தகவல் ஆவணங்களை (References) எப்படித் தொகுத்து அளிப்பது?

புனைவல்லாத (நான்ஃபிக்‌ஷன்) புத்தகங்கள் அடிப்படையில் உண்மைத் தகவல்கள், நிகழ்வுகளைமட்டும் கொண்டிருக்கவேண்டும். இதை உறுதிசெய்வதற்காக நூலின் பிற்பகுதியில் அந்த நூலின் உருவாக்கத்துக்கு உதவிய பிற நூல்கள், ஆவணப் படங்கள், கடிதங்கள், செய்திக் குறிப்புகள், கட்டுரைகள், பேட்டிகள், அறிக்கைகள் போன்றவற்றைச் சான்றுகளாகப் பட்டியலிடும் வழக்கம் உள்ளது.

இந்தப் பட்டியலால் எழுத்தாளருக்கும் நன்மை (அவருடைய நம்பகத்தன்மை கூடுகிறது), வாசகருக்கும் நன்மை (அந்தத் தலைப்பில் கூடுதல் விஷயங்களைப் படிக்கும் வாய்ப்பு அமைகிறது). பல வாசகர்கள் நூலைப் படித்துவிட்டு References பட்டியலைக் கூர்ந்து கவனிப்பார்கள், அதிலிருந்து தாங்கள் படிக்கப்போகும் அடுத்த நூலைத் தேர்ந்தெடுப்பார்கள்.

எழுத்தாளர்கள் தங்கள் Reference பக்கத்தை எப்படி அமைக்கலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன:

 1. நூலின் பிற்பகுதியில் (பின்னிணைப்பாக) அந்த நூல்முழுவதும் இடம்பெற்ற அனைத்து Reference ஆவணங்களையும் தனித்தனித் தலைப்புகளில் (நூல்கள், கடிதங்கள், செய்திகள், கட்டுரைகள்… இப்படி) தொகுத்து வழங்கலாம்
 2. நூலின் பிற்பகுதியில் (பின்னிணைப்பாக) அந்த நூல் முழுவதும் ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம்பெற்ற Reference ஆவணங்களை அந்தந்த அத்தியாயத் தலைப்பின்கீழ் தொகுத்து வழஙகலாம் (அத்தியாயம் 1 References, அத்தியாயம் 2 References… இப்படி)
 3. இதையே ஒவ்வோர் அத்தியாயத்தின் நிறைவிலும் செய்யலாம் (அத்தியாயம் 1, அதற்கான References, அதன்பிறகு அத்தியாயம் 2, அதற்கான References… இப்படி)
 4. அத்தியாயத்துக்குள் அந்தந்த வரியின்கீழ் அடிக்குறிப்பாக (Footnote) அதற்கான சான்றை வழங்கலாம். இது ஒரு மிகச் சிறந்த உத்தி; ஆனால், மிகுந்த நேரம் எடுக்கும், அதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும்

வழி எதுவானாலும் சரி, சான்றுகளின் பட்டியலை நீங்கள் கண்டிப்பாக வழங்கவேண்டும்; அதை உங்கள் வாசகர் எதிர்பார்க்கிறார், அது உங்கள் கடமையும்கூட. அதனால், உங்கள் நூல் ஆய்வின்போது நீங்கள் பயன்படுத்தும் அத்தனை ஆவணங்களையும் முறையாகக் குறித்துவையுங்கள், உங்கள் நூலில் அவற்றைச் சரியாகத் தொகுத்து வழங்குங்கள்.

***

நான்ஃபிக்‌ஷன் நூல்களை எழுத விரும்புகிறீர்களா? அந்தக் கலையை முறையாகக் கற்றுத்தரும் ஒரு பயிற்சி வகுப்பு இங்கு உள்ளது.

***

Keywords: Nonfiction, Non Fiction, References, Reference, Reference List, References List, Proof, List of References, Appendix

எழுத்தாளருக்குத் தேவையான திறமைகள் என்னென்ன?

ஓர் எழுத்தாளர்களுக்கு என்னென்ன திறமைகள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? எங்களுக்குத் தோன்றிய சிலவற்றை இங்கு வழங்கியுள்ளோம். உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்:

 • தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனிக்கும் திறமை
 • அதை எழுத்தில் பதிவுசெய்யவேண்டும் என்கிற ஆர்வம்
 • நல்லவற்றைச் சொல்லவேண்டும் என்கிற சமூகப் பொறுப்பு, அக்கறை
 • உண்மை, நேர்மை
 • கூர்ந்து கவனிக்கும் திறமை
 • நினைவாற்றல்
 • தன்னுடைய வாசகர் யார் என்கிற தெளிவு
 • வாசகர்மீது அக்கறை
 • நல்ல வாசிப்புத் திறன் (நன்கு படித்தவர்களால்தான் நன்கு எழுத இயலும்)
 • எழுத நினைப்பதை ஒழுங்குபடுத்திக் கட்டமைப்புக்குக் கொண்டுவரும் திறமை
 • ஆராய்ச்சித் திறமை (நூல்கள், ஆவணப் படங்கள், பேட்டிகள், இன்னும் பல வகைகளிலிருந்து)
 • நேரடிக் களப்பணி (தொடர்புடைய நபர்களைச் சந்தித்துப் பேட்டி எடுத்தல், நிகழ்வுகள் நடந்த இடங்களைப் பார்வையிட்டுக் குறிப்பெடுத்தல் போன்றவை)
 • (ஓரளவு) பிற மொழித் திறன் (ஆராய்ச்சிக்கு)
 • பொய்ச் செய்திகளைக் கண்டறிகிற, தகவல்களை உறுதிப்படுத்துகிற திறன்
 • குறிப்பெடுக்கும் திறமை
 • நூலைத் திட்டமிடும் திறன்
 • எழுத்துக் கருவிகளைக் கையாளும் திறன் (பேனா/கணினி/செல்பேசி/மென்பொருள்கள் போன்றவை)
 • எழுத்து, மொழி வல்லமை, சொல் வளம்
 • பல்வேறு எழுத்து உத்திகள்
 • இலக்கணத் திறன்
 • தொடர்ந்து எழுதும் ஒழுங்கு
 • பொறுமை (திரும்பத் திரும்ப வெவ்வேறுவிதமாக எழுதுதல், திருத்துதல் போன்றவை)
 • அழகுணர்ச்சி
 • எளிய எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்திப் புரியவைக்கும் திறன்
 • குழப்பமின்றி விளக்குதல், வாதாடுதல் திறன்
 • தொகுத்துச் சொல்லும் திறன்
 • பிழை திருத்தும் திறன்
 • ஈர்ப்பான தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் திறன்
 • பிறருடைய கருத்துகளைக் கேட்டு, அவற்றில் சரியானவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் திறன்
 • நூலை முன்வைக்கும் (Proposing) திறன், நூலின்மீது பிறருக்கு ஆர்வத்தைக் கொண்டுவருதல்
 • பதிப்பு உலகத்தைப்பற்றிய அறிவு
 • (ஓரளவு) சட்ட, பொருளாதார அறிவு
 • (ஓரளவு) சந்தைப்படுத்தல், விளம்பரத் திறன்
 • (ஓரளவு) இலக்கிய, வணிகத் தொடர்புகள்

இவை அனைத்தும் ஒவ்வோர் எழுத்தாளருக்கு இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை, எனினும், எவ்வளவு கூடுதலாக உள்ளதோ, அவ்வளவு நல்லது.

இதில் எந்தெந்தத் திறமைகள் உங்களுக்கு உள்ளன? எவற்றை வளர்த்துக்கொள்ள விரும்புகிறீர்கள்? எழுத்தாளர்களுக்குத் தேவையான மற்ற முக்கியத் திறன்கள் என்று நீங்கள் நினைப்பவை எவை? கமெண்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள், கற்றுக்கொள்வோம்.

***

Keywords: Writing, Planning, Researching, Authors, Writers, Author, Writer, Books, Book, Skills, Skill, Skillset, Author Skills, Writer Skills, Writing Skills

உங்கள் ஈபுக்கை(மின்னூலை)த் திட்டமிட்டுப் பதிப்பிப்பது எப்படி?

உங்களுடைய ஈபுக், அதாவது, மின்னூலைத் திட்டமிட்டுப் பதிப்பிப்பது எப்படி? சரியாகத் திட்டமிட்டு முறையாக வெளியிட்டுப் புகழ் பெறச் செய்வது எப்படி? அதற்கான இருபது படிநிலைகளைத் (Steps) தொகுத்து வழங்கியுள்ளோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

1

எதைப் பதிப்பிப்பது என்று தீர்மானியுங்கள். ஏற்கெனவே எழுதியதைத் தொகுத்து வெளியிடுகிறீர்களா, அல்லது, புதிதாக எழுதப்போகிறீர்களா?

2

இவ்வகை நூலுக்கு வரவேற்பு இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? நண்பர்களிடம் பேசுங்கள், இணையத்தில் உரையாடுங்கள், தகவல் திரட்டுங்கள், தேவைப்பட்டால் உங்கள் நூல் யோசனையில் மாற்றம் செய்யுங்கள்.

3

நூலை எழுதுங்கள். அல்லது, ஏற்கெனவே எழுதிய பகுதிகளைத் திரட்டுங்கள். எடிட் செய்து மேன்மையாக்குங்கள்.

உங்களுடைய நூல் யுனிகோட் வடிவத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பெரும்பாலான மின்னூல் வெளியீட்டுத் தளங்கள் யுனிகோட் வடிவத்தில்தான் உங்கள் படைப்புகளைப் பெறுகிறார்கள்.

ஒருவேளை உங்கள் படைப்பு யுனிகோடில் இல்லை என்றால், யுனிகோடுக்கு மாற்றுங்கள். அதற்குப் பல மென்பொருள்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக: NHM Converter அல்லது ஓவன்.

4

உங்கள் படைப்பு முழுவதும் ஒரே கோப்பில் இருக்கவேண்டும் (எடுத்துக்காட்டாக, DOCX அல்லது Google Docs வடிவம்). அவ்வாறு தொகுக்கும்போது, அத்தியாயத் தொடக்கங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள், நூலின் தொடக்கத்தில் நூலின் பெயர், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைச் சேருங்கள். வாசகர்களுடன் ஓரிரு வரிகளில் உரையாடும்படியான பகுதி ஒன்றைச் சேருங்கள், அது நல்ல பிணைப்பை உண்டாக்கும்.

5

நூலுக்கு Table of Contents (சுருக்கமாக, TOC, உள்ளடக்கப் பட்டியல்) தேவை. இதற்கு நீங்கள் ஒவ்வோர் அத்தியாயத்தையும் “Heading” என்ற முறையில் அமைக்கவேண்டும். பின்னர் TOCஐ உருவாக்கவேண்டும். இதன்மூலம் வாசகர் விரும்பிய பகுதிக்குத் தாவிச் செல்லலாம்.

TOC உருவாக்கத் தெரியவில்லையா? பிரச்சனை இல்லை. அதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, இந்த வீடியோவைப் பாருங்கள். இதுபோல் இன்னும் பல வீடியோக்கள் உள்ளன, பத்து, பதினைந்து நிமிடத்தில் இதைக் கற்றுக்கொண்டுவிடலாம்.

6

நூலின் படங்களைச் சேர்க்கிறீர்கள் என்றால், அவற்றுக்கான பதிப்புரிமை யாரிடம் உள்ளது என்று பாருங்கள், அவர்களிடம் அனுமதி பெறுங்கள். உரிமை இல்லாத படைப்புகளைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்.

இணையத்தில் காப்புரிமை தேவைப்படாத இலவசப் படங்கள் பலவும் உள்ளன. அவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, Unsplash மற்றும் Pixabay தளங்களைப் பாருங்கள்.

இன்னொரு விஷயம், மின்னூல்களுக்குப் படங்கள் பெரும்பாலும் தேவைப்படாது. மிகவும் தேவைப்படுகிற விளக்கப் படங்கள், வரைபடங்கள் (Maps) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மற்றபடி அவை இடத்தை அடைக்கிற விஷயங்கள்தான்.

7

நீங்கள் எந்தத் தளத்தில் பதிப்பிக்க விரும்புகிறீர்கள் என்று சிந்தியுங்கள். எடுத்துக்காட்டாக, அமேசான் கிண்டில் அல்லது கூகுள் புக்ஸ். அந்தத் தளத்துக்குச் சென்று, அவர்களுடைய விதிமுறைகளைப் படியுங்கள், வீடியோக்களைப் பாருங்கள், பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் பல தளங்களிலும் பதிப்பிக்கலாம். ஆனால், ஒன்றில் தொடங்கி முன்னேறுவது நல்லது.

8

முந்தைய படிநிலையில் நீங்கள் தேர்ந்தெடுத்த தளத்தில் உங்களை ஓர் உறுப்பினராக, அதாவது, பதிப்பாளராகப் பதிவு செய்துகொள்ளுங்கள். குறிப்பாக, உங்களுடைய வங்கித் தகவல்களை இவர்கள் கேட்பார்கள் (புத்தக விற்பனைத் தொகையை அனுப்புவதற்கு). இவை அனைத்தும் கைவசம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்தப் படிநிலைக்குச் சுமார் 1 மணி நேரம் தேவைப்படலாம். ஆனால் மகிழ்ச்சியான செய்தி, இதை நீங்கள் ஒருமுறை (அதாவது, முதல் மின்னூலுக்குமட்டும்) செய்தால் போதும், இரண்டாவது மின்னூலில் தொடங்கி இந்தப் பதிவு தேவைப்படாது.

9

பதிவு செய்த உங்கள் கணக்கில் நுழையுங்கள். புதிய மின்னூல் ஒன்றை உருவாக்குங்கள். மக்கள் விரும்பக்கூடிய, அவர்கள் தேடிக் கண்டறியக்கூடிய தலைப்பைக் கொடுங்கள். துணைத் தலைப்பு இன்னும் சற்று நீளமாக இருக்கலாம்.

10

உங்கள் புத்தகத்தை மக்கள் எப்படியெல்லாம் தேடக்கூடும் என்று சிந்தித்து, ஆராய்ச்சி செய்து Keywords எனப்படும் சொற்களைத் தேர்ந்தெடுங்கள். அவற்றை இங்கு பதிவு செய்யுங்கள்.

எடுத்துக்காட்டாக, எடைக் குறைப்பு பற்றிய ஒரு புத்தகத்தைத் தேடுவோர் Diet, Exercise, BMI போன்ற சொற்களைப் பயன்படுத்தக்கூடும்.

11

உங்கள் புத்தகத்தை வாசகர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்துகிற Blurb எனப்படும் குறிப்பை எழுதுங்கள். இது இரண்டு, மூன்று பத்தி அளவில் இருக்கலாம், அதைவிட நீளமாகவும் செல்லலாம். Bullet Points எனப்படும் பட்டியல் வடிவத்தைப் பயன்படுத்தினால் இன்னும் சுவையாக இருக்கும்.

12

உங்கள் நூலை எந்த வகைகளில் (Categories) வெளியிடுவது என்று தீர்மானியுங்கள். சரியான வகையில் அமைந்த நூல் இன்னும் பலரை இயல்பாகச் சென்று சேரும். ஆகவே, இந்த விஷயத்தில் அவசரப்படாமல் பலவிதமாகச் சிந்தித்து, ஏற்கெனவே இதேபோன்ற தலைப்பில் கிடைக்கும் நூல்களை ஆராய்ந்து ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள்.

9, 10, 11, 12வது படிநிலையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நீங்கள் முன்கூட்டியே சிந்தித்து ஓர் ஆவணத்தில் எழுதி வைத்துக்கொண்டாலும் நல்லது, அப்படியே காபி, பேஸ்ட் செய்துவிடலாம்.

13

உங்கள் நூலைப் பதிவேற்றுங்கள் (Upload செய்யுங்கள்). அது மின்னூல் கருவிகளில் எப்படித் தோன்றுகிறது (Preview) என்று கவனித்து உறுதிப்படுத்துங்கள்.

14

நூலை எந்தெந்த நாடுகளில் வெளியிடுவது என்று தீர்மானியுங்கள். மின்னூல்களில் அஞ்சல் செலவு இல்லை என்பதால் இயன்றவரை கூடுதல் நாடுகளில் வெளியிடலாம், தமிழர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள்.

15

நூலுக்கு என்ன விலை வைக்கலாம் என்று தீர்மானியுங்கள். உங்கள் நூலின் பக்க அளவு, அதன் தனித்தன்மை, ஏற்கெனவே இதேபோன்ற தலைப்பில் சந்தையில் உள்ள நூல்களின் விலை போன்றவற்றைச் சிந்தித்து இந்த விலையைக் கணக்கிடலாம். (ஆனால், இதைப்பற்றி மிகவும் அலட்டிக்கொள்ளவேண்டாம். பின்னாட்களில் எப்போது வேண்டுமானாலும் இதை மாற்றலாம்.)

16

நூலுக்கு அட்டை வடிவமையுங்கள். அதைத் தரவேற்றுங்கள் (Upload செய்யுங்கள்).

பெரும்பாலான மின்னூல் தளங்களில் அட்டைப்படி வட்வமைப்புக்கென்று எளிமையான தனிக் கருவிகளை அளித்திருக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் சில நிமிடங்களில் அட்டை ஒன்றை வடிவமைத்துவிடலாம்.

அல்லது, நீங்கள் ஒரு தொழில்முறை வல்லுனரிடம் சென்று அட்டைப்படத்தை வடிவமைக்கச் சொல்லலாம். அப்படிச் செய்யும்போது, எந்தத் தளத்தில் நூல் வெளியிடுகிறீர்கள் என்று சொல்லிவிட்டால் அவரே அழகாக அந்த வடிவமைப்பில் அட்டைப்படத்தை வழங்கிவிடுவார். (அவரிடம் HQ Version எனப்படும் உயர் தர, மாற்றக்கூடிய அட்டைப்பட வடிவத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள். வருங்காலத்தில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்ய வசதியாக இருக்கும்.)

17

நூலைப் பதிப்பியுங்கள். அது அங்கீகரிக்கப்படும்வரை காத்திருங்கள்.

வாழ்த்துகள், உங்கள் நூல் வெளியாகிவிட்டது. இனி, நீங்கள் அதைச் சந்தைப்படுத்தவேண்டும். (Marketing)

18

உங்களுடைய நண்பர் வட்டம், அவர்களுடைய நண்பர் வட்டத்தில் நூலைப்பற்றிச் சொல்லுங்கள். நூலின் இணைப்பை (URL) வழங்குங்கள். குறிப்பாக, நூலை அவர்கள் ஏன் வாங்கவேண்டும் என்பதைக் கவனமாக விளக்குங்கள்.

19

உங்கள் வாசகர் வட்டத்தை எப்படி விரிவுபடுத்துவது என்று சிந்தியுங்கள். எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் பேசக் கற்பதுபற்றிய ஒரு நூலை மாணவர்களுக்கான Facebook குழுக்களில் மார்க்கெட்டிங் செய்யலாம். இதுபோல் ஏராளமான வழிகள் உள்ளன. இதற்கென்று நீங்கள் சிந்திக்கவேண்டும், உங்கள் நேரத்தைப் பொறுத்து அவற்றைச் செயல்படுத்தவேண்டும்.

20

நூலின் விற்பனையைக் கூர்ந்து கவனியுங்கள். எந்தெந்த மாற்றங்கள்/மார்க்கெட்டிங் நுட்பங்களுக்கு என்ன பலன் இருக்கிறது என்று ஒப்பிடுங்கள். நல்ல மாற்றங்களைத் தொடர்ந்து செய்யுங்கள், பயன்படாத மாற்றங்களை விட்டுவிடுங்கள்.

அதே நேரம், முழு நேர மார்க்கெட்டர் ஆகிவிடாதீர்கள், உங்கள் அடுத்த நூலைத் திட்டமிடுங்கள், வாழ்த்துகள்!

பின்குறிப்பு: இங்கு சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ள 20 படிநிலைகள் ஒவ்வொன்றிலும் பல மணி நேரங்களுக்கு விளக்கும் அளவு விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை நம் “எழுதுவோம்” தளத்தில் அவ்வப்போது விரிவாகப் பேசுவோம். அத்துடன், கிண்டில் நூல்களைப் பதிப்பிப்பதுபற்றி வெளியாகியுள்ள இந்த நூல்களையும் நீங்கள் படிக்கலாம்:

***

Keywords: Kindle, Google Books, EBooks, Ebook, Book, Book Publishing, Ebook Publishing, Kindle Book Publishing, Kindle Ebook Publishing, Google Book Publishing, Step by step instructions, How To Guide, How to publish your ebook, How to publish your first ebook, Tutorial, Book Research, Book Marketing

Terry O’Brein எழுதிய Idioms and Phrases நூல் தள்ளுபடி விலையில்

ஆங்கிலத்தில் Idioms and Phrases எனப்படும் மரபுத்தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவற்றைச் சரியான இடத்தில் பொருத்தமாகப் பயன்படுத்தினால் பல நூறு சொற்களை மிச்சப்படுத்திச் சுருக்கமாக விஷயத்தைப் புரியவைத்துவிடலாம்.

அவ்வாறு ஆங்கிலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற Idioms and Phrasesஐத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார் புகழ் பெற்ற எழுத்தாளர் Terry O’Brein. 200+ பக்கங்கள் கொண்ட அந்த நூலின் கிண்டில் பதிப்பு இன்று ஒருநாள்மட்டும் ரூ 29 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது (வழக்கமான விலை ரூ 150). ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள், மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ரூ 29 தள்ளுபடி விலையில் Idioms and Phrases நூலைப் பெற, இங்கு க்ளிக் செய்யுங்கள்

Terry O’Brein அவர்களுடைய மற்ற நூல்களைக் காண, இங்கு க்ளிக் செய்யுங்கள்

***

Keywords: Idioms, Phrases, Idioms and Phrases, Reference Book, Book Deal, Terry O’Brein, Books, Book, eBook, eBooks, Kindle

தமிழில் குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்களின் பட்டியல்

தமிழில் குழந்தைகளுக்காக எழுதும் எழுத்தாளர்களின் பட்டியல் ஒன்றை விழியன், விஷ்ணுபுரம் சரவணன் (இவர்களும் குழந்தை எழுத்தாளர்கள்தாம்!) இருவரும் தொகுத்துள்ளார்கள். அந்தப் பட்டியலை இங்கு காணலாம்.

நீங்கள் குழந்தைகளுக்காக எழுதுகிறவரா? ஆம் எனில் இந்தப் பட்டியலில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். இளம் வாசகர்களுக்காக இன்னும் பல நூறு படைப்புகள் உருவாகட்டும்.

***

Keywords: Children’s Writing, Kids Writing, Children Writing, Kids books, Kids Literature, Children Literature

நல்ல சிறுகதை எழுதக் கற்றுத்தரும் Writing இதழின் Masterclass

புகழ் பெற்ற “Writing” இதழ் சிறந்த சிறுகதை நுட்பங்களைக் கற்றுத்தரும் Masterclass இதழொன்றை வெளியிட்டுள்ளது. செவ்வியல் (Classic) சிறுகதைகளை எடுத்துக்கொண்டு அவற்றை ஆராய்ந்து அதன்மூலம் கற்றுத்தரும் பாணியில் இந்த இதழ் அமைந்துள்ளது.

இந்தச் சிறப்பிதழை டிஜிட்டல் வடிவில் வாங்குவதற்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Short Story, Short Stories, Shortstory, Shortstories, Story, Stories, Story Writing, Classics, Classic, Learn to write, Learn to write stories, Writing Stories, Authors, Writers, Writing, Master Class, Masterclass

Intuitive Editing (எடிட்டிங் நுட்பங்களைப் பேசும் நூல்: அறிமுகம்)

‘நம் எழுத்தை நாமே எடிட் செய்வது, நமக்கு நாமே மூளை அறுவைச் சிகிச்சை செய்வதைப்போன்றது’ என்கிறது இந்தப் புத்தகத்தின் அறிமுக வாக்கியம். எவ்வளவு உண்மை!

சிறப்பாக எழுதுகிற பலருக்கு இங்கு நன்கு எடிட் செய்ய வருவதில்லை. இதனால், அரைகுறையான ஒரு படைப்பைப் பிரசுரிக்கிறார்கள். அல்லது, எப்போதும் பிறருடைய எடிட்டிங்கை நம்பியிருக்கிறார்கள். இதன்மூலம், அவர்கள் எப்போதும் எடிட்டிங் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதும் இல்லை.

எடிட்டிங் என்பது வெறும் பிழை திருத்தல் இல்லை. ஒரு நூலை மிகச் செம்மையாக ஆக்கி வழங்கக்கூடிய சிறந்த நுட்பம் அது. சரியான எடிட்டரின் கையில் எந்த நூலும் பலமடங்கு மேம்படும், வாசகர்களை எளிதில் சென்று சேரும், வெற்றி பெறும், இவை அனைத்தும் எழுத்தாளருக்குப் பெருமை தருகிறவைதான்!

இதனால், எழுத்துத் துறையில் செயல்படுகிற எல்லாரும் எடிட்டிங் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் நேரம் முதலீடு செய்யவேண்டும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். எழுதும்போது எடிட் செய்வது சிரமமாக இருப்பினும், எழுதியபின் எடிட்டிங்குக்கென்று நேரம் ஒதுக்கி நூலைச் சிறப்பாக்கலாம்.

ஆனால், அந்த நேரத்தில் என்ன செய்வது? எப்படி எடிட் செய்வது?

25 ஆண்டுகளாகப் பதிப்பகத் துறையில் இயங்கிவரும் Tiffany Yates Martin அவர்கள் இதுபற்றி எழுதியுள்ள Intuitive Editing என்ற புத்தகம் இந்தக் கலையின் நுட்பங்களைப் பொறுமையாகவும் விளக்கமாகவும் அறிமுகப்படுத்துகிறது. தங்கள் எழுத்தைத் தாங்களே எடிட்டிங் செய்பவர்களும் சரி, பிறர் எழுத்தை எடிட் செய்யும் தொழில்முறை எடிட்டர்களும் சரி, இந்த நூலின்மூலம் படிப்படியாக இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். கதை, கட்டுரை என அனைத்துக்கும் இந்த நூல் பயன்படும்.

படிப்போம், கற்றுக்கொள்வோம், இன்னும் சிறப்பாக எழுதுவோம்!

Intuitive Editing நூலை வாங்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Editing, Editor, Editors, Selfediting, Self-editing, Self Editing, Professional Editing, Proofreading, Corrections

மொழிபெயர்ப்புக்கு அனுமதி பெறுவது எப்படி?

பிற எழுத்தாளர்களுடைய படைப்புகளை மொழிபெயர்க்கும்போது அவர்களுடைய அனுமதி பெறுவது எப்படி?

டாக்டர் பி. சந்திரமௌலி

பெரும்பாலான எழுத்தாளர்களுக்குச் சொந்த இணையத் தளம் உள்ளது. அல்லது, அவர்களை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பக்கங்களில் கண்டறியலாம். அதன்மூலம் அவர்களுக்கு எழுதி அனுமதி கேட்கலாம். எழுத்தாளர் அல்லது அவருடைய உதவியாளர் ஒருவர் உங்களுக்குப் பதில் அனுப்புவார், அனுமதி வழங்குவார் அல்லது அதற்கான விதிமுறைகளைப் பேசுவார்.

சில எழுத்தாளர்களுடைய மொழிபெயர்ப்புகளை வேறு நபர்கள் (முகவர்கள்) அல்லது அமைப்புகள் கையாளும். அதுபோன்ற நேரங்களில், ‘நீங்கள் அவர்களுடன் பேசுங்கள்’ என்று பதில் வரும்.

ஒருவேளை எழுத்தாளரை இம்முறையில் தொடர்புகொள்ள இயலாவிட்டால், நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் நூலை வெளியிட்ட பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம். ஒருவேளை, உரிமை அவர்களிடம் இருக்கலாம், அல்லது, அவர்கள் எழுத்தாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவலாம்.

எது எப்படியோ, முறைப்படி அனுமதி பெறாமல் எதையும் மொழிபெயர்க்காதீர்கள். நீங்கள் லாபத்துக்காகச் செய்யாவிட்டாலும் அது சட்டப்படி சரியில்லை.

இந்தப் பகுதியில் எழுத்துபற்றிய கேள்வி, பதில்கள் இடம்பெறும். உங்கள் கேள்விகள், ஐயங்களையும் ezhudhuvom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

Keywords: Translation, Translations, Translator, Translation Rights, Translation Right, Copyright, Permission, Authors, Writers, Books, மொழிபெயர்ப்பு

Farlex International வழங்கும் (ஆங்கில) இலக்கண நூல் வரிசை

புகழ் பெற்ற Farlex International அமைப்பு இன்றைய எழுத்துக்குத் தேவையான ஆங்கில இலக்கண நூல்களை வெளியிட்டுவருகிறது. The Complete English Grammar Rules, The Complete English Spelling & Pronunciation Rules, The Complete English Punctuation Rules என்ற தலைப்பில் அமைந்த இவர்களுடைய மூன்று நூல்களும் ஆங்கிலத்தில் எழுதுவோருக்கு மிகவும் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றுடன் வேறு சில சிறு நூல்களையும் Farlex International அமைப்பு வெளியிட்டுள்ளது.

தமிழிலும் இதுபோன்ற முழுமையான தொகுப்பு நூல்களுக்கான தேவை உள்ளது. ஏற்கெனவே பல சிறந்த தமிழ் இலக்கண நூல்கள் இருப்பினும், Complete Collection வரிசையில் இவ்வகை Reference நூல்கள் கிடைத்தால் தேவையானவற்றை ஒரே இடத்தில் தேடுவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் வசதியாக இருக்கும். சரியான வல்லுனர்களின்மூலம் இவை தொகுக்கப்பட்டால் தமிழில் எழுத வருகிறவர்களுக்கும் தொழில்முறை மெய்ப்பு திருத்துநர்கள் (Proofreaders), Editors போன்றோருக்கும் மிகவும் பயன்படும்.

Keywords: Grammar, Rules, English, Books, Book Introduction, Editing, Editors, Proofreading, Proofreading, Proof Reading, Proof Readers, Proofreaders