இணையத்தில் ஒரு நகைச்சுவைத் துணுக்கைப் பார்த்தேன்:
ஒருவர்: நான் உங்களைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்.
இன்னொருவர்: சட்டையைத் திறந்து காண்பிக்கிறார். உள்ளே அவருடைய டிஷர்ட்டில் ஒரு QR Code இருக்கிறது.
முதல் நபர்: அந்த QR Codeஐ ஸ்கேன் செய்து படிக்கிறார்
இது ஒரு நகைச்சுவைக் கற்பனைதான். ஆனால், இன்றைய சூழ்நிலையில் ஒருவர் தன்னைப்பற்றி முழுக்கத் தெரிவிப்பதற்கான ஓர் இணைய முகவரியைத் தயாராக வைத்திருப்பது நல்லது. அதை டிஷர்ட்டில் அச்சிடாவிட்டாலும், தேவையான இடங்களில் நீட்டவேண்டியிருக்கும்.
குறிப்பாக, எழுத்தாளர்கள் தங்களைப்பற்றிய தகவல்களை ஓர் இணையப் பக்கத்தில் (Author Profile Page) பதிவுசெய்து வைக்கலாம். அது சொந்த இணையத் தளமாக இருந்தால் நல்லது, இல்லாவிட்டாலும் பரவாயில்லை WordPress, Blogger, Facebook போன்ற இலவசத் தளங்களில் ஒரு பக்கமாகவும் இருக்கலாம். எல்லாத் தகவல்களும் ஒரே இடத்தில் என்பதுதான் இங்கு முக்கியம்.
எல்லாத் தகவல்களும் என்றால் என்னென்ன தகவல்கள்?
- உங்கள் முழுப் பெயர்
- உங்கள் புனைபெயர்
- என்னமாதிரி நூல்களை எழுதுகிறீர்கள்
- எவ்வளவு நாளாக எழுதிவருகிறீர்கள்
- உங்களுடைய நூல்களின் பட்டியல்
- உங்கள் நூல்கள் எங்கு கிடைக்கும்
- நீங்கள் வாங்கியுள்ள விருதுகள், மற்ற பாராட்டுகள்
- நீங்கள் இணையத்தில் எங்கெல்லாம் எழுதிவருகிறீர்கள் (ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை)
- வேறு எந்த வழிகளில் வாசகர்கள் உங்களுடன் தொடர்பில் இருக்கலாம் (யூட்யூப் சானல் போன்றவை)
- உங்களைத் தொடர்புகொண்டு பேசுவதற்கான மின்னஞ்சல் முகவரி (கட்டாயம்)
- உங்களைத் தொடர்புகொண்டு பேசுவதற்கான தொலைபேசி எண் (தேவைப்பட்டால்)
- தெளிவான ஒரு புகைப்படம்
இது ஒரு சிறு எடுத்துக்காட்டுதான். இதுபோல் பல விஷயங்களை நீங்கள் சேர்க்கலாம். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் இதை வெளியிட இயன்றால் இன்னும் நல்லது. அவ்வப்போது புதிய தகவல்களைச் சேர்த்து, பழைய தகவல்களை நீக்கி மேம்படுத்தினால் அதைவிட நல்லது.
அதன்பிறகு, வாசகர்கள், பதிப்பாளர்கள், பிற மொழி வெளியீட்டாளர்கள் என்று யாரைச் சந்தித்தாலும் நீங்கள் இந்த இணைய முகவரியைக் கொடுக்கலாம், உங்களுடைய Visiting Cardல், மின்னஞ்சல் Signatureல் இதைச் சேர்க்கலாம். மக்கள் வேண்டியதைப் படித்துத் தெரிந்துகொள்வார்கள், உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
இன்றே உங்களுடைய முழுமையான இணையத் தகவல் பக்கத்தை உருவாக்கத் தொடங்குங்கள்!
பின்குறிப்பு: இவ்வாறு நீங்கள் உருவாக்குகிற உங்கள் இணையப் பக்கத்தை ஆராய்ந்து, அதிலுள்ள பிழைகள், முன்னேற்ற வாய்ப்புகளைக் கண்டறியும் ஓர் இலவசச் சேவையைப்பற்றித் தெரிந்துகொள்ள, இங்கு க்ளிக் செய்யுங்கள்.
***
Keywords: Author Bio, Writer Bio, Author Resume, Writer Resume, Author Details, Writer Details, Author Profile, Writer Profile, Your Web Page, Your Web Identity