தொடர்கதைகள், நாவல்களுக்கு இடையிலான வேறுபாட்டைப்பற்றிச் சமீபத்தில் பேசினோம். (அந்தக் கட்டுரையைப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்). இப்போது, எழுத்தாளராகிய நீங்கள் இணையத்தில் தொடர்களை எழுதுவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று பார்ப்போம்.
இணையம் என்பது ஒரு பெரிய கடலைப்போன்றது. அங்கு தொடர்களை எழுதுவதற்கும் பல வழிகள் இருக்கின்றன. எனினும், அவற்றில் முக்கியமான, எல்லாரும் பயன்படுத்தக்கூடிய ஏழு வழிகளை இங்கு தொகுத்து அளிக்கிறோம்.
1
உங்கள் வலைப்பதிவு (blog) அல்லது சொந்த வலைத்தளத்தில் தொடர் எழுதலாம். ஒவ்வோர் அத்தியாயத்தையும் தனித்தனியாக நாள்தோறும் அல்லது வாரந்தோறும் வெளியிடலாம், வாசகர்கள் முந்தைய அத்தியாயங்களை எளிதில் படிப்பதற்கு வழி அமைத்துத் தரலாம். இதில் இன்னொரு வசதி, வாசகர்கள் கமெண்ட் (கருத்து) அளிக்கவும் வழி உண்டு.
2
உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர் எழுதலாம். இங்கும் கமெண்ட்ஸ் வசதி உண்டு. ஆனால், முந்தைய அத்தியாயங்களுக்கு இணைப்பு தருவது சற்றுச் சிரமம். அதற்கு நீங்கள் ஹேஷ்டேக் எனப்படும் முறையைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் தொடரின் பெயர் “அன்பே வா” என்று இருந்தால், #AnbeVaa #AnbeVaaSerial #அன்பேவா #அன்பேவாதொடர் என்பதுபோன்ற ஹேஷ்டேக்ஸை உங்கள் அத்தியாயங்களின் கீழ்ப்பகுதியில் அளிக்கலாம். வாசகர்கள் அதைக் க்ளிக் செய்து மற்ற அத்தியாயங்களைப் படிப்பார்கள்.
3
மின்னஞ்சலில் தொடர் எழுதலாம். இது உங்கள் வாசகர்களை நேரடியாகச் சென்று சேரும். ஆனால், இதற்குக் கொஞ்சம் கூடுதல் உழைப்பு தேவை. அதாவது, வாசகர்களுடைய மின்னஞ்சல் முகவரிகளைத் திரட்டுவது, வாசகர்கள் தாங்களே பதிவு செய்ய வழி உண்டாக்கித் தருவது, அவர்களுக்கு மின்னஞ்சல்கள் சரியாகச் சென்றுசேர்வதை உறுதிசெய்வது போன்றவை. இதற்கான வழிகளை (எடுத்துக்காட்டு: மின்னஞ்சல் குழுக்கள், Newsletters எனப்படும் மின்னஞ்சல் கடிதங்கள்) இணையத்தில் தேடிக் கற்றுக்கொள்ளுங்கள், ஒருமுறை கற்றுக்கொண்டால் பலமுறை பலன் உண்டு.
4
மின்னஞ்சலுக்குப் பதில் வாட்ஸாப், டெலக்ராம் போன்றவற்றையும் நீங்கள் தொடர் எழுதப் பயன்படுத்தலாம். அதாவது, உங்கள் தொடருக்கென்று தனிக் குழு தொடங்கலாம், அல்லது, Broadcast எனப்படும் பரப்பல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இங்கும் உங்களுக்கு உடனுக்குடன் கருத்துகள் கிடைத்துவிடும், கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிச் சிறப்பாக்கலாம்.
5
இணையத்தில் Story Forums எனப்படும் கதை மன்றங்கள் பலவும் உள்ளன. இவற்றில் உங்கள் கதையை ஒவ்வோர் அத்தியாயமாக வெளியிடலாம். இந்த மன்றங்களுக்கு ஏற்கெனவே பல்லாயிரம் வாசகர்கள் இருப்பார்கள் என்பதால், உங்கள் தொடர் எளிதில் அவர்களுக்குச் சென்று சேரும். இந்த மன்றங்கள் கருத்து தெரிவித்தல், பிறரிடம் பகிர்ந்துகொள்ளுதல் போன்றவற்றுக்கும் வசதி உண்டாக்கித் தருவார்கள் என்பதால், நீங்கள் தொழில்நுட்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் எழுத்தில் கவனம் செலுத்தலாம்.
6
உங்கள் தொடர் எழுத்து வடிவத்தில்தான் வெளியாகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. இணையத்தின் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்திக்கொண்டு வீடியோ, ஆடியோ (ஒலிப் பதிவு) போன்ற வழிகளிலும் உங்கள் தொடரை வெளியிடலாம். இதற்குக் கொஞ்சம் கூடுதல் உழைப்பு (எடுத்துக்காட்டாக, தொடர் அத்தியாயங்களைப் படித்து ஒலிப் பதிவு செய்தல், வீடியோ உருவாக்குதல் போன்றவை) தேவைப்படும். ஆனால், எழுத்து வடிவத் தொடர்களை நெருங்காத பல புதிய வாசகர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள்.
இந்த வடிவத்தில் மக்கள் கதைகளைப் படிப்பார்களா என்று ஐயமாக உள்ளதா? இங்கு க்ளிக் செய்து Audible இணையத் தளத்தில் உள்ள கதைகளின் பட்டியலைப் பாருங்கள், நம்பிக்கை வந்துவிடும். ஒலிப் புத்தகங்கள் வெற்றியடையும்போது ஒலித் தொடர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.
7
ஒவ்வோர் அத்தியாயத்தையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் Facebook Live போன்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரடியாக ஒளிபரப்பலாம். அதை உங்களுடைய சமூக வலைப்பக்கங்களில் அறிவித்து மக்களுடைய ஆதரவைத் திரட்டலாம். இந்த முறையின் மிகப் பெரிய நன்மை, உங்கள் தொடருக்கான கருத்துகள் உடனுக்குடன் கிடைக்கும்.
இதுபோல் உங்கள் மனத்தில் உள்ள தொடர் யோசனைகளை Comments பகுதியில் எழுதுங்கள். அவை எல்லா எழுத்தாளர்களுக்கும் பயன்படும். சேர்ந்து கற்றுக்கொள்வோம், உங்கள் தொடருக்கு வாழ்த்துகள்.
***
Keywords: Novels, Novel, Serials, Serial, Series, Story Series, Cliffhanger, Facebook, YouTube, Podcasts, Video Serials, Audio Serials, Audio Episodes, Video Episodes, Podcast, Audio Episode, Video Episode, Video Serial, Audio Serial, Facebook, Facebook Live, Email Groups, WhatsApp Groups, Telegram Groups, Forums, Chapters, Chapter, Episodes, Episode