பிழையைக் கண்டுபிடித்தால் பத்துப் பைசா

வரும் நவம்பர் 7 குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களுடைய நூற்றாண்டு தொடங்குகிறது. அதைக் கொண்டாடும்வகையில் ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ இணைப்பிதழில் ஒரு பக்கம் முழுக்க அவருடைய கதை, பாடல்கள், அவரைப்பற்றிய பேட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அழ. வள்ளியப்பா அவர்களுடைய மகள் எழுத்தாளர் தேவி நாச்சியப்பன் ஒரு சுவையான விஷயம் சொல்கிறார்.

அழ. வள்ளியப்பா தன்னைப் பார்க்க வரும் குழந்தைகளிடம் தன்னுடைய படைப்புகளைத் தந்து படிக்கச் சொல்வாராம், அதில் ஏதாவது பிழைகளைக் கண்டுபிடித்தால் ஒவ்வொரு பிழைக்கும் பத்துப் பைசா பரிசு தருவதாகச் சொல்வாராம்.

அன்றைக்குப் பத்துப் பைசா என்பது பெரிய விஷயம். அதனால் குழந்தைகள் ஆர்வத்துடன் பிழைகளைத் தேடுவார்களாம். ஆனால், அழ. வள்ளியப்பா எழுத்தில் பிழைகள் இருக்காது என்பதால், அவர்களுக்கு அந்தப் பத்துப் பைசா எட்டாக் கனிதான். எனினும், அழ. வள்ளியப்பா அவர்களுடைய இந்த விளையாட்டால் நாங்கள் எல்லாரும் தமிழைப் பிழையின்றி எழுதக் கற்றுக்கொண்டோம் என்கிறார் தேவி நாச்சியப்பன்.

***

அழ. வள்ளியப்பா அவர்களுடைய 30க்கும் மேற்பட்ட நூல்களை இலவசமாகப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Writing, Writers, Authors, Editing, Grammar, Errors, Error, Mistakes, Mistake, Corrections, Correction, Editors, Editor, Author, Writer

மொழி சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் தரும் “அருஞ்சொல்” தளம்

புகழ் பெற்ற எழுத்தாளர் சமஸ் தொடங்கியிருக்கும் “அருஞ்சொல்” தளம் செய்திகளின் அடிப்படையில் கருத்துகளை விவாதிக்கும் தளமாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. அதுபற்றிச் சமஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு விஷயம் நம் கவனத்தை ஈர்க்கிறது:

பல்வேறு தரப்பினருக்கும் மொழி சார்ந்து அயல்பணி முறையில் பிரதியை செப்பனிட்டுத் தரும் ‘அருஞ்சொல் எடிட்’

தமிழில் எடிட்டிங் எனப்படும் மொழிச் செப்பனிடுதலுக்குத் தேவையான முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதுதான் உண்மை. அதனால் தமிழில் பிழை மலிந்த எழுத்துகளும் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில் சமஸ் போன்ற எழுத்தாளர்கள் இதற்கு முக்கியத்துவம் தந்து தனிச் சேவை ஒன்றைத் தொடங்குவது இந்த முக்கியப் பணிக்குப் பெரும் ஆதரவாக இருக்கும், பிழை இல்லாத நல்ல எழுத்துக்கு வரவேற்பைக் கொண்டுவரும்.

ஒவ்வொருவரும் தங்கள் எழுத்தைப் பிழையின்றி எழுத முயல்வதுதான் சரி. அதற்கு வாய்ப்பு அல்லது அதற்கேற்ற திறமை இல்லாதபோது, உரிய திறமையாளர்களுடைய சேவையைப் பயன்படுத்திக்கொண்டு திருத்தி வெளியிடவேண்டும். நம் எழுத்து பிழையின்றி இருப்பதுதான் நமக்குப் பெருமை என்ற உணர்வு வரவேண்டும்.

***

நம் “எழுதுவோம்” தளமும் தேவையுள்ள எழுத்தாளர்களுக்குத் தொழில்முறை எடிட்டிங் சேவையை வழங்குகிறது. உங்கள் நூல்களை பிழையின்றி எடிட்டிங் செய்து தர, எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்: ezhudhuvom@gmail.com

***

தொடர்புடைய நூல்கள்:

***

Keywords: Tamil, Thamizh, Tamizh, Thamil, Ilakkanam, இலக்கணம், பிழை, பிழையின்றி, பிழையின்றி எழுதுதல், பிழை திருத்தல், பிழைத் திருத்தல், பிழை திருத்தம், பிழைத் திருத்தம், பிழைத்திருத்தம், பிழைதிருத்தம், பிழைதிருத்தல், பிழைத்திருத்தல், நல்ல தமிழ், நல்ல தமிழ் எழுதுவோம், எடிட்டிங், எடிட், எடிட்டர், Editing, Editor, Professional Editing, Freelance Editing, Freelance Editor, Freelance Editors, Editors

ஏதேனும், எவையேனும்: இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

Any என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன: ஏதேனும், எவையேனும் ஆகிய இந்த இரு சொற்களும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஒரேமாதிரிதான் உள்ளன. ஆனால், இவற்றினிடையில் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. எழுதும்போது அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்:

 • ஏதேனும் என்ற சொல் ஒருமைக்கு உரியது. எடுத்துக்காட்டாக, ‘ஐந்து பந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.’
 • எவையேனும் என்ற சொல் பன்மைக்கு உரியது. எடுத்துக்காட்டாக, ‘ஐந்து பந்துகளில் எவையேனும் மூன்றைத் தேர்ந்தெடுங்கள்.’

இந்த வேறுபாட்டை நினைவில் வைத்துக்கொள்ள ஓர் எளிய வழி இருக்கிறது:

 • ஏதேனும் என்ற சொல் ‘எது’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. ‘எது’ என்பது ஒருமைக்கு உரிய சொல். அதனால், ‘ஏதேனும்’ என்பதையும் ஒருமையோடு சேர்த்துப் பயன்படுத்தவேண்டும்.
 • எவையேனும் என்ற சொல் ‘எவை’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. ‘எவை’ என்பது பன்மைக்கு உரிய சொல், அதனால், ‘எவையேனும்’ என்பதையும் பன்மையோடு சேர்த்துப் பயன்படுத்தவேண்டும்.

இப்போது, பின்வரும் வாக்கியங்களில் வரும் கோடிட்ட இடங்களை நிரப்பிப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்:

 • சரவணன் விடுமுறைக்கு _________ ஒரு நாட்டுக்குச் செல்வான்.
 • பூனை _______ ஒரு கூரையில் தாவும்.
 • வள்ளி நூலகத்திலிருந்து __________ சில புத்தகஙகளை எடுத்துவந்தாள்.
 • மாடு _________ ஒரு வயலில் மேயும்.
 • அரசியல் தலைவர்கள் __________ சில மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பார்கள்.

***

தொடர்புடைய நூல்: நல்ல தமிழில் எழுதுவோம் by என். சொக்கன்

***

Keywords: Grammar, Tamil, Thamizh

பயிற்சிகளின்மூலம் எழுதக் கற்றுக்கொள்ள இயலுமா? எழுத்தாளர் பா. ராகவன் பேட்டி

இதே தலைப்பில் இன்னும் சில முக்கியமான பதிவுகள்:

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Art of writing, Writing classes, Writing Class, Writing Workshops, Writing Workshop, Courses, Course, Writing Courses, Writing Course, Pa. Raghavan, Pa. Ragavan, Learn to write, Learn Writing

எழுத்தாளருக்குத் தேவையான திறமைகள் என்னென்ன?

ஓர் எழுத்தாளர்களுக்கு என்னென்ன திறமைகள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? எங்களுக்குத் தோன்றிய சிலவற்றை இங்கு வழங்கியுள்ளோம். உங்கள் கருத்துகளையும் எழுதுங்கள்:

 • தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனிக்கும் திறமை
 • அதை எழுத்தில் பதிவுசெய்யவேண்டும் என்கிற ஆர்வம்
 • நல்லவற்றைச் சொல்லவேண்டும் என்கிற சமூகப் பொறுப்பு, அக்கறை
 • உண்மை, நேர்மை
 • கூர்ந்து கவனிக்கும் திறமை
 • நினைவாற்றல்
 • தன்னுடைய வாசகர் யார் என்கிற தெளிவு
 • வாசகர்மீது அக்கறை
 • நல்ல வாசிப்புத் திறன் (நன்கு படித்தவர்களால்தான் நன்கு எழுத இயலும்)
 • எழுத நினைப்பதை ஒழுங்குபடுத்திக் கட்டமைப்புக்குக் கொண்டுவரும் திறமை
 • ஆராய்ச்சித் திறமை (நூல்கள், ஆவணப் படங்கள், பேட்டிகள், இன்னும் பல வகைகளிலிருந்து)
 • நேரடிக் களப்பணி (தொடர்புடைய நபர்களைச் சந்தித்துப் பேட்டி எடுத்தல், நிகழ்வுகள் நடந்த இடங்களைப் பார்வையிட்டுக் குறிப்பெடுத்தல் போன்றவை)
 • (ஓரளவு) பிற மொழித் திறன் (ஆராய்ச்சிக்கு)
 • பொய்ச் செய்திகளைக் கண்டறிகிற, தகவல்களை உறுதிப்படுத்துகிற திறன்
 • குறிப்பெடுக்கும் திறமை
 • நூலைத் திட்டமிடும் திறன்
 • எழுத்துக் கருவிகளைக் கையாளும் திறன் (பேனா/கணினி/செல்பேசி/மென்பொருள்கள் போன்றவை)
 • எழுத்து, மொழி வல்லமை, சொல் வளம்
 • பல்வேறு எழுத்து உத்திகள்
 • இலக்கணத் திறன்
 • தொடர்ந்து எழுதும் ஒழுங்கு
 • பொறுமை (திரும்பத் திரும்ப வெவ்வேறுவிதமாக எழுதுதல், திருத்துதல் போன்றவை)
 • அழகுணர்ச்சி
 • எளிய எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்திப் புரியவைக்கும் திறன்
 • குழப்பமின்றி விளக்குதல், வாதாடுதல் திறன்
 • தொகுத்துச் சொல்லும் திறன்
 • பிழை திருத்தும் திறன்
 • ஈர்ப்பான தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் திறன்
 • பிறருடைய கருத்துகளைக் கேட்டு, அவற்றில் சரியானவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் திறன்
 • நூலை முன்வைக்கும் (Proposing) திறன், நூலின்மீது பிறருக்கு ஆர்வத்தைக் கொண்டுவருதல்
 • பதிப்பு உலகத்தைப்பற்றிய அறிவு
 • (ஓரளவு) சட்ட, பொருளாதார அறிவு
 • (ஓரளவு) சந்தைப்படுத்தல், விளம்பரத் திறன்
 • (ஓரளவு) இலக்கிய, வணிகத் தொடர்புகள்

இவை அனைத்தும் ஒவ்வோர் எழுத்தாளருக்கு இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை, எனினும், எவ்வளவு கூடுதலாக உள்ளதோ, அவ்வளவு நல்லது.

இதில் எந்தெந்தத் திறமைகள் உங்களுக்கு உள்ளன? எவற்றை வளர்த்துக்கொள்ள விரும்புகிறீர்கள்? எழுத்தாளர்களுக்குத் தேவையான மற்ற முக்கியத் திறன்கள் என்று நீங்கள் நினைப்பவை எவை? கமெண்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள், கற்றுக்கொள்வோம்.

***

Keywords: Writing, Planning, Researching, Authors, Writers, Author, Writer, Books, Book, Skills, Skill, Skillset, Author Skills, Writer Skills, Writing Skills

உங்கள் படைப்புகளின் எடிட்டிங் பணியில் உதவும் இணையத் தளம் : Woord

நாம் எழுதியதை நன்கு எடிட் செய்து பதிப்பிப்பது முக்கியம். இதன்மூலம் நம் எழுத்தில் இருக்கக்கூடிய பிழைகளையெல்லாம் திருத்தி வாசகருக்கு உயர் தரத்திலான ஒரு படைப்பை வழங்கலாம்.

இப்படி நம் எழுத்தை எடிட் செய்யப் பல வழிகள் உள்ளன. அவற்றில் முதன்மையான ஒன்று, அதைப் படித்துப்பார்ப்பது, அந்த ஒலி நமக்குப் பல பிழைகளைச் சுட்டிக்காட்டும், அவற்றைச் சட்டென்று சரிசெய்துவிடலாம்.

Woord என்ற இணையத் தளம் எழுத்து வடிவில் உள்ள நம் படைப்புகளை ஒலி வடிவில் மாற்றி அழகாகப் படித்துக் காண்பிக்கிறது. உரிய திருத்தங்களைச் செய்தபின் மீண்டும் அதை Woordல் ஒலி வடிவில் கேட்டு உறுதிசெய்துகொள்ளலாம்.

ஒரே பிரச்சனை, இந்த வசதி ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் கிடைத்தாலும், தமிழில் இல்லை. வருங்காலத்தில் இந்தச் சேவை தமிழுக்கும் நீட்டிக்கப்படும் என்று நம்புவோம். அதுவரை, நம் ஆங்கில எழுத்துக்கு எடிட்டிங் உதவியாளராக இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொள்வோம்.

Woord இணையத் தளச் சேவையைப் பயன்படுத்த, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Text to speech, TTS, Text to Audio, எழுத்து, ஒலி, எழுத்து ஒலி மாற்றி, Editing, Proofreading, Proof Reading, Edit, Editor, திருத்தம், பிழை திருத்தம், ஒலி வடிவம், ஒலிவடிவம், எழுத்திலிருந்து ஒலி

Intuitive Editing (எடிட்டிங் நுட்பங்களைப் பேசும் நூல்: அறிமுகம்)

‘நம் எழுத்தை நாமே எடிட் செய்வது, நமக்கு நாமே மூளை அறுவைச் சிகிச்சை செய்வதைப்போன்றது’ என்கிறது இந்தப் புத்தகத்தின் அறிமுக வாக்கியம். எவ்வளவு உண்மை!

சிறப்பாக எழுதுகிற பலருக்கு இங்கு நன்கு எடிட் செய்ய வருவதில்லை. இதனால், அரைகுறையான ஒரு படைப்பைப் பிரசுரிக்கிறார்கள். அல்லது, எப்போதும் பிறருடைய எடிட்டிங்கை நம்பியிருக்கிறார்கள். இதன்மூலம், அவர்கள் எப்போதும் எடிட்டிங் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதும் இல்லை.

எடிட்டிங் என்பது வெறும் பிழை திருத்தல் இல்லை. ஒரு நூலை மிகச் செம்மையாக ஆக்கி வழங்கக்கூடிய சிறந்த நுட்பம் அது. சரியான எடிட்டரின் கையில் எந்த நூலும் பலமடங்கு மேம்படும், வாசகர்களை எளிதில் சென்று சேரும், வெற்றி பெறும், இவை அனைத்தும் எழுத்தாளருக்குப் பெருமை தருகிறவைதான்!

இதனால், எழுத்துத் துறையில் செயல்படுகிற எல்லாரும் எடிட்டிங் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் நேரம் முதலீடு செய்யவேண்டும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். எழுதும்போது எடிட் செய்வது சிரமமாக இருப்பினும், எழுதியபின் எடிட்டிங்குக்கென்று நேரம் ஒதுக்கி நூலைச் சிறப்பாக்கலாம்.

ஆனால், அந்த நேரத்தில் என்ன செய்வது? எப்படி எடிட் செய்வது?

25 ஆண்டுகளாகப் பதிப்பகத் துறையில் இயங்கிவரும் Tiffany Yates Martin அவர்கள் இதுபற்றி எழுதியுள்ள Intuitive Editing என்ற புத்தகம் இந்தக் கலையின் நுட்பங்களைப் பொறுமையாகவும் விளக்கமாகவும் அறிமுகப்படுத்துகிறது. தங்கள் எழுத்தைத் தாங்களே எடிட்டிங் செய்பவர்களும் சரி, பிறர் எழுத்தை எடிட் செய்யும் தொழில்முறை எடிட்டர்களும் சரி, இந்த நூலின்மூலம் படிப்படியாக இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். கதை, கட்டுரை என அனைத்துக்கும் இந்த நூல் பயன்படும்.

படிப்போம், கற்றுக்கொள்வோம், இன்னும் சிறப்பாக எழுதுவோம்!

Intuitive Editing நூலை வாங்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Editing, Editor, Editors, Selfediting, Self-editing, Self Editing, Professional Editing, Proofreading, Corrections

Farlex International வழங்கும் (ஆங்கில) இலக்கண நூல் வரிசை

புகழ் பெற்ற Farlex International அமைப்பு இன்றைய எழுத்துக்குத் தேவையான ஆங்கில இலக்கண நூல்களை வெளியிட்டுவருகிறது. The Complete English Grammar Rules, The Complete English Spelling & Pronunciation Rules, The Complete English Punctuation Rules என்ற தலைப்பில் அமைந்த இவர்களுடைய மூன்று நூல்களும் ஆங்கிலத்தில் எழுதுவோருக்கு மிகவும் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றுடன் வேறு சில சிறு நூல்களையும் Farlex International அமைப்பு வெளியிட்டுள்ளது.

தமிழிலும் இதுபோன்ற முழுமையான தொகுப்பு நூல்களுக்கான தேவை உள்ளது. ஏற்கெனவே பல சிறந்த தமிழ் இலக்கண நூல்கள் இருப்பினும், Complete Collection வரிசையில் இவ்வகை Reference நூல்கள் கிடைத்தால் தேவையானவற்றை ஒரே இடத்தில் தேடுவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் வசதியாக இருக்கும். சரியான வல்லுனர்களின்மூலம் இவை தொகுக்கப்பட்டால் தமிழில் எழுத வருகிறவர்களுக்கும் தொழில்முறை மெய்ப்பு திருத்துநர்கள் (Proofreaders), Editors போன்றோருக்கும் மிகவும் பயன்படும்.

Keywords: Grammar, Rules, English, Books, Book Introduction, Editing, Editors, Proofreading, Proofreading, Proof Reading, Proof Readers, Proofreaders