புத்தகம் வளர்கிறது #நகைச்சுவை #BookMemes #AuthorMemes #WriterMemes

Keywords: Books, Book, Publishing, Ebooks, Ebook, Contents, Editing, Importance of Editing, Edit, Editor, Humour, Humor, Fun, Jokes, Memes, Meme, Joke, Author Memes, Author Meme, Writer Memes, Writer Meme, Book Memes, Book Meme, Writing Memes, Writing Meme, Author Life, Writer Life, Chapters, Chapter, First Chapter, Last Chapter, Final Chapter

பிழையைக் கண்டுபிடித்தால் பத்துப் பைசா

வரும் நவம்பர் 7 குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களுடைய நூற்றாண்டு தொடங்குகிறது. அதைக் கொண்டாடும்வகையில் ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ இணைப்பிதழில் ஒரு பக்கம் முழுக்க அவருடைய கதை, பாடல்கள், அவரைப்பற்றிய பேட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அழ. வள்ளியப்பா அவர்களுடைய மகள் எழுத்தாளர் தேவி நாச்சியப்பன் ஒரு சுவையான விஷயம் சொல்கிறார்.

அழ. வள்ளியப்பா தன்னைப் பார்க்க வரும் குழந்தைகளிடம் தன்னுடைய படைப்புகளைத் தந்து படிக்கச் சொல்வாராம், அதில் ஏதாவது பிழைகளைக் கண்டுபிடித்தால் ஒவ்வொரு பிழைக்கும் பத்துப் பைசா பரிசு தருவதாகச் சொல்வாராம்.

அன்றைக்குப் பத்துப் பைசா என்பது பெரிய விஷயம். அதனால் குழந்தைகள் ஆர்வத்துடன் பிழைகளைத் தேடுவார்களாம். ஆனால், அழ. வள்ளியப்பா எழுத்தில் பிழைகள் இருக்காது என்பதால், அவர்களுக்கு அந்தப் பத்துப் பைசா எட்டாக் கனிதான். எனினும், அழ. வள்ளியப்பா அவர்களுடைய இந்த விளையாட்டால் நாங்கள் எல்லாரும் தமிழைப் பிழையின்றி எழுதக் கற்றுக்கொண்டோம் என்கிறார் தேவி நாச்சியப்பன்.

***

அழ. வள்ளியப்பா அவர்களுடைய 30க்கும் மேற்பட்ட நூல்களை இலவசமாகப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Writing, Writers, Authors, Editing, Grammar, Errors, Error, Mistakes, Mistake, Corrections, Correction, Editors, Editor, Author, Writer

மொழி சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் தரும் “அருஞ்சொல்” தளம்

புகழ் பெற்ற எழுத்தாளர் சமஸ் தொடங்கியிருக்கும் “அருஞ்சொல்” தளம் செய்திகளின் அடிப்படையில் கருத்துகளை விவாதிக்கும் தளமாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. அதுபற்றிச் சமஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு விஷயம் நம் கவனத்தை ஈர்க்கிறது:

பல்வேறு தரப்பினருக்கும் மொழி சார்ந்து அயல்பணி முறையில் பிரதியை செப்பனிட்டுத் தரும் ‘அருஞ்சொல் எடிட்’

தமிழில் எடிட்டிங் எனப்படும் மொழிச் செப்பனிடுதலுக்குத் தேவையான முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதுதான் உண்மை. அதனால் தமிழில் பிழை மலிந்த எழுத்துகளும் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில் சமஸ் போன்ற எழுத்தாளர்கள் இதற்கு முக்கியத்துவம் தந்து தனிச் சேவை ஒன்றைத் தொடங்குவது இந்த முக்கியப் பணிக்குப் பெரும் ஆதரவாக இருக்கும், பிழை இல்லாத நல்ல எழுத்துக்கு வரவேற்பைக் கொண்டுவரும்.

ஒவ்வொருவரும் தங்கள் எழுத்தைப் பிழையின்றி எழுத முயல்வதுதான் சரி. அதற்கு வாய்ப்பு அல்லது அதற்கேற்ற திறமை இல்லாதபோது, உரிய திறமையாளர்களுடைய சேவையைப் பயன்படுத்திக்கொண்டு திருத்தி வெளியிடவேண்டும். நம் எழுத்து பிழையின்றி இருப்பதுதான் நமக்குப் பெருமை என்ற உணர்வு வரவேண்டும்.

***

நம் “எழுதுவோம்” தளமும் தேவையுள்ள எழுத்தாளர்களுக்குத் தொழில்முறை எடிட்டிங் சேவையை வழங்குகிறது. உங்கள் நூல்களை பிழையின்றி எடிட்டிங் செய்து தர, எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்: ezhudhuvom@gmail.com

***

தொடர்புடைய நூல்கள்:

***

Keywords: Tamil, Thamizh, Tamizh, Thamil, Ilakkanam, இலக்கணம், பிழை, பிழையின்றி, பிழையின்றி எழுதுதல், பிழை திருத்தல், பிழைத் திருத்தல், பிழை திருத்தம், பிழைத் திருத்தம், பிழைத்திருத்தம், பிழைதிருத்தம், பிழைதிருத்தல், பிழைத்திருத்தல், நல்ல தமிழ், நல்ல தமிழ் எழுதுவோம், எடிட்டிங், எடிட், எடிட்டர், Editing, Editor, Professional Editing, Freelance Editing, Freelance Editor, Freelance Editors, Editors

மோசமான எழுத்தும் ஒரு பாடம்தான்!

நல்ல எழுத்து நம்மைச் சிறப்பாக எழுதவைக்கும். ‘அட, நாமும் இவரைப்போல் எழுதணும்’ என்ற ஊக்கத்தை உண்டாக்கும். அதில் என்னென்ன நல்ல அம்சங்கள் உள்ளன, அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்றெல்லாம் சிந்திக்கச்செய்து நம் எழுத்தை மேம்படுத்தும்.

ஒருவிதத்தில், கெட்ட எழுத்துகளும் நமக்குப் பாடம் கற்றுத்தருகின்றன. எப்படி எழுதவேண்டும் என்பதைப்போல், எப்படி எழுதக்கூடாது என்பதும் முக்கியமான பாடம்தான்.

அதனால், மோசமாக எழுதப்பட்ட ஒரு கதை அல்லது கட்டுரையைப் படிக்கும்போது முகம் சுளிக்காமல், அதில் என்ன மோசமாக உள்ளது, அது ஏன் நமக்குப் பிடிக்கவில்லை என்று சிந்திக்கலாம். அதன்மூலம், வருங்காலத்தில் நாம் எழுதும் கட்டுரைகளில் அந்தப் பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

ஆனால் அதற்காக, எல்லாருடைய படைப்புகளிலும் குறை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொள்ளக்கூடாது. அது நமக்கு ஓர் எதிர்மறை மனநிலையை உண்டாக்கிவிடும். நல்லதைப் பாராட்டவேண்டும், அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும், மோசமானதை (மனத்துக்குள்ளாவது) விமர்சிக்கவேண்டும், அந்தப் பிழையை நாம் செய்யாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், இந்த எளிய வழிமுறை நம் எழுத்தை இன்னும் நன்றாக ஆக்கும்.

சொல்லப்போனால், வாழ்க்கை மேம்பாட்டுக்கும் இதுதான் வழி!

***

Keywords: Learning, Learning from errors, Learning from mistakes, Learn from errors, Learn from mistakes, Criticism, Praise, Appreciation, Kudos, Accolades, Analysis, Learning

ஏதேனும், எவையேனும்: இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

Any என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன: ஏதேனும், எவையேனும் ஆகிய இந்த இரு சொற்களும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஒரேமாதிரிதான் உள்ளன. ஆனால், இவற்றினிடையில் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. எழுதும்போது அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்:

 • ஏதேனும் என்ற சொல் ஒருமைக்கு உரியது. எடுத்துக்காட்டாக, ‘ஐந்து பந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.’
 • எவையேனும் என்ற சொல் பன்மைக்கு உரியது. எடுத்துக்காட்டாக, ‘ஐந்து பந்துகளில் எவையேனும் மூன்றைத் தேர்ந்தெடுங்கள்.’

இந்த வேறுபாட்டை நினைவில் வைத்துக்கொள்ள ஓர் எளிய வழி இருக்கிறது:

 • ஏதேனும் என்ற சொல் ‘எது’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. ‘எது’ என்பது ஒருமைக்கு உரிய சொல். அதனால், ‘ஏதேனும்’ என்பதையும் ஒருமையோடு சேர்த்துப் பயன்படுத்தவேண்டும்.
 • எவையேனும் என்ற சொல் ‘எவை’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. ‘எவை’ என்பது பன்மைக்கு உரிய சொல், அதனால், ‘எவையேனும்’ என்பதையும் பன்மையோடு சேர்த்துப் பயன்படுத்தவேண்டும்.

இப்போது, பின்வரும் வாக்கியங்களில் வரும் கோடிட்ட இடங்களை நிரப்பிப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்:

 • சரவணன் விடுமுறைக்கு _________ ஒரு நாட்டுக்குச் செல்வான்.
 • பூனை _______ ஒரு கூரையில் தாவும்.
 • வள்ளி நூலகத்திலிருந்து __________ சில புத்தகஙகளை எடுத்துவந்தாள்.
 • மாடு _________ ஒரு வயலில் மேயும்.
 • அரசியல் தலைவர்கள் __________ சில மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பார்கள்.

***

தொடர்புடைய நூல்: நல்ல தமிழில் எழுதுவோம் by என். சொக்கன்

***

Keywords: Grammar, Tamil, Thamizh

நாவலுக்கும் தொடர்கதைக்கும் என்ன வேறுபாடு?

எழுத்தாளர்கள் எழுதும் பெரிய கதைகளை நூலாக வெளியிடும்போது “நாவல்” அல்லது “புதினம்” என்று அழைக்கிறோம். அந்தக் கதைகளில் சில, பத்திரிகைகளில் தொடர்களாகவும் வெளிவருகின்றன. அப்போது அவற்றைத் “தொடர்கதை” என்று அழைக்கிறோம். இந்த இரண்டும் ஒன்றுதானா?

தொடர் என்பது பத்திரிகைகளின் வசதிக்காக அமைந்த ஒன்று. அதாவது, ஒரே கதையை மொத்தமாகத் தந்து சலிப்பை உண்டாக்குவதைவிட, அதை வாரம் கொஞ்சமாகப் பிரித்துத் தருவார்கள், அத்துடன், ஆர்வத்தைத் தூண்டி வாசகரைத் திரும்பத் திரும்பத் தங்கள் பத்திரிகையை வாங்க வைப்பார்கள்.

இவ்வகைத் தொடர்கள் கதைகளுக்குதான் என்று இல்லை, தொடர் கட்டுரைகள் உண்டு, தொடர் கவிதைகள் உண்டு, இன்னும் பலவகைத் தொடர்கள் இருக்கின்றன.

ஆக, ஒரு நாவல் தொடராக எழுதப்படுகிறது, இன்னொரு நாவல் மொத்தமாக ஒரே நேரத்தில் எழுதப்படுகிறது என்கிற காரணத்தால் அவை இரண்டும் வெவ்வேறாகிவிடாது. அவற்றுக்கான அடிப்படை எழுத்து உத்திகள் ஒன்றுதான்.

எனினும், தொடராக வெளியாகும் நாவல்களுக்குச் சில கூடுதல் அம்சங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, தொடர்கதைகளின் ஒவ்வோர் அத்தியாயத்தின் நிறைவிலும் வாசகரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஓர் அதிர்ச்சியான, வியப்பான, எதிர்பாராத ஒரு விஷயத்தை வைப்பது வழக்கம். ஆங்கிலத்தில் இதை Cliffhanger என்பார்கள். இது நாவல்களுக்குப் பெரும்பாலும் தேவைப்படாது, இருந்தாலும் பிழை இல்லை.

அதேபோல், தொடர்கதைகளில் ஒவ்வோர் அத்தியாயமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கவேண்டும். நாவல்களில் அவை எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.

நீங்கள் ஒரு நாவல் எழுதினாலும் சரி, தொடர்கதை எழுதினாலும் சரி, அதற்கான ஆராய்ச்சி, தயாராதல் என அனைத்தும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் அமையும். தொடராக எழுதும்போது அந்தப் பத்திரிகையின் தேவைகளை அறிந்து அதற்கேற்பச் சில கூடுதல் விஷயங்களைச் செய்வீர்கள், அவ்வளவுதான். பின்னர் அதைத் தொகுத்து நாவலாக வெளியிடும்போது, தேவைப்பட்டால் அந்த சில அம்சங்களை நீக்கிவிட்டுக்கூட வெளியிடலாம், அப்படியே வெளியிட்டாலும் பிரச்சனை இருக்காது.

உங்களுக்குப் பிடித்த நாவல்கள், தொடர்கதைகளைப்பற்றி Comments பகுதியில் சொல்லுங்கள்!

***

Keywords: Novels, Novel, Serials, Serial, Series, Story Series, Cliffhanger, Chapters, Chapter, Episodes, Episode

உங்கள் கதையில் எத்தனைப் பாத்திரங்கள் இருக்கலாம்?

சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் எழுதும்போது அவற்றில் உள்ள கதாபாத்திரங்கள் (கதை மாந்தர்கள்) எண்ணிக்கையைப்பற்றிப் பலருக்கு ஐயம் எழும். ‘ஒருவேளை நான் நிறையப் பேரைக் கதையில சேர்த்துக் குழப்பறேனோ’ என்று யோசிப்பார்கள். அல்லது, ‘இதுல வர்ற ஆளுங்க போதாதோ’ என்று கவலைப்படுவார்கள்.

உண்மையில், ஒரு கதைக்கு ஏற்ற பாத்திரங்களின் எண்ணிக்கையை எப்படித் தீர்மானிப்பது?

இங்கு எண்ணிக்கையைவிடத் தரம்தான் முக்கியம். அதாவது, ஏராளமான கதை மாந்தர்களைச் சேர்த்து அவர்கள் ஒவ்வொருவரையும் வாசகர் மனத்தில் தங்கச் செய்வதும் சாத்தியம், குறைந்த கதை மாந்தர்களை வைத்துக்கொண்டு வாசகர்கள் அவர்களைச் சிறிதும் கண்டுகொள்ளாதபடி ஆக்குவதும் சாத்தியம். தரம் இருந்தால் எல்லாம் சரியாக அமையும்.

அதனால், உங்கள் கதையை இன்னொரு முறை இந்தக் கோணத்தில் பாருங்கள். அதிலுள்ள ஒவ்வொரு பாத்திரத்தைப்பற்றியும் சில கேள்விகளைக் கேளுங்கள்:

 • இந்தப் பாத்திரம் இந்தக் கதைக்கு முக்கியமா?
 • இதை நீக்கிவிட்டால் என்ன ஆகும்? (எதுவும் ஆகாது என்றால், அது தேவையில்லாத பாத்திரம் என்று பொருள்)
 • இந்தப் பாத்திரத்துக்கு இப்போது நான் தந்திருக்கும் முக்கியத்துவம் போதுமா? அதைக் கூட்டவேண்டுமா அல்லது குறைக்கவேண்டுமா?
 • ஒவ்வொரு பாத்திரத்துக்கும் தேவையான அளவு பின்னணி, அழுத்தம் இருக்கிறதா? அந்தப் பாத்திரத்தின் தன்மையை நான் நன்கு புரிந்துகொண்டிருக்கிறேனா? அதைச் சரியாக எழுத்தில் கொண்டுவருகிறேனா? இந்தப் பாத்திரம் வெளிப்படும் தன்மையில் ஏதும் முரண்கள் இருக்கின்றனவா?
 • இந்தப் பாத்திரம் வாசகர் மனத்தில் உருவாக்கவேண்டும் என்று நான் நினைக்கிற உணர்வு என்ன? அதைக் கதை சரியாகச் செய்கிறதா?
 • நான் ஒரே காட்சியில் பல பாத்திரங்களைச் சேர்த்துக் குழப்பம் உண்டாக்குகிறேனா? ஆம் எனில், அவற்றைப் பல காட்சிகளாகப் பிரிப்பது சாத்தியமா? இயலாது என்றால், பாத்திரங்களுக்குள் குழப்பம் வராதபடி எழுதுவது எப்படி?

இப்படிப் பாத்திரங்களைச் சிந்திப்பதற்காகவே உங்கள் கதையை இன்னொருமுறை புரட்டுங்கள். எழுதுமுன்பே இவற்றைச் சிந்தித்துவிட்டு எழுதத் தொடங்கினால் இன்னும் சிறப்பு.

உங்கள் கதையைப் படிக்கும் வாசகர்களிடமும் உங்கள் பாத்திரங்களைப்பற்றிப் பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்த, பிடிக்காத பாத்திரங்கள் எவை, ஏன் என்று விசாரியுங்கள். இதுவும் உங்களுடைய பாத்திரத் தேர்ந்தெடுத்தலுக்கு உதவும்.

நல்ல பாத்திரங்கள் உங்கள் கதைகளைப் பெரிய உயரங்களுக்குக் கொண்டுசெல்லும். வாசகர்கள் அந்தப் பாத்திரங்களை (உங்களையும்தான்) நன்கு கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட பாத்திரங்களை நீங்கள் உருவாக்கி வெற்றிபெற வாழ்த்துகள்.

***

Keywords: Novels, Novel, Short Stories, Short Story, Shortstories, Shortstory, Novelettes, Novelette, Stories, Story, Fiction, Fictional Stories, Fictional Characters, Characters, Character, Fictional Story Characters, Number of Characters, Character Sketch, Balance

சிறுகதைகள், நாவல்களில் உண்மை நிகழ்வுகள் வரலாமா?

எழுத்தைப் புனைவு (Fiction), புனைவற்றவை/அபுனைவு (Nonfiction) என்று பகுக்கிறோம். இதன் பொருள், கதை, நாவல், குறுநாவல், கவிதை, நாடகம் போன்றவை புனைந்து உருவாக்கப்படுகிறவை, அவற்றில் கற்பனை இருக்கலாம், சில நேரங்களில் அவை முழுக் கற்பனையாகக்கூட இருக்கலாம் (எடுத்துக்காட்டு: அறிவியல் புனைகதைகள்). ஆனால், புனைவற்ற/அபுனைவு நூல்களில் எந்தக் கற்பனையும் இருக்கக்கூடாது.

ஆனால், சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்களில் உண்மை நிகழ்வுகள் வரலாமா?

உண்மையில், பெரும்பாலான புனைவுகள் நடந்த ஒரு நிகழ்வு அல்லது மனிதரைப் பின்னணியாகக் கொண்டுதான் எழுதப்படுகின்றன. நேரடியாகப் பார்த்தவை, செய்தித்தாள்களில், நூல்களில் படித்தவை, பிறர் சொல்லக் கேட்டவை, ஆராய்ச்சியின்மூலம் அறிந்தவை, கல்வெட்டுகள், செப்பேடுகளில் கண்டவை என்று பலவிதமான உண்மைகள் புனைவுகளுக்கு அடிப்படையாக இருக்கின்றன. அதில் எந்தப் பிழையும் இல்லை.

அதே நேரம், அந்த உண்மைகளோடு புனைவுகளைக் கலந்து எழுதும்போது, இது புனைவுதான், உண்மை இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடவேண்டும். இல்லாவிட்டால் நேர்மையான மனிதர் ஒருவர் திருட்டுத்தனமான வேலையொன்றைச் செய்தார் என்பதுபோன்ற கற்பனையை நீங்கள் எழுதப்போக, நாளைக்கு அதை மக்கள் உண்மையாக நம்பிவிடக்கூடும், அதனால் அந்த மனிதருடைய பெயருக்கு இழுக்கு ஏற்படக்கூடும்.

அதனால், புனைவு நூல்களுக்கு ஆராய்ச்சி செய்யும்போது உண்மை நிகழ்வுகளைச் சரியானபடி முன்வைக்கவேண்டும், தகவல்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம், ஆனால், எது கற்பனை என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். தேவைப்பட்டால், ‘இந்த நூலில் சில உண்மை நிகழ்வுகள், மனிதர்கள் இடம்பெற்றிருந்தாலும், இது அந்த நிகழ்வுகளின், மனிதர்களின் கதை இல்லை. இதைக் கற்பனைப் படைப்பாகவே கருதுங்கள்’ என்பதுபோல் ஒரு பொறுப்பு துறப்பை (Disclaimer) நூலில் சேர்க்கலாம். அல்லது, அந்த உண்மை நிகழ்வு, மனிதரின் சாயல் தெரியாதபடி கற்பனையைப் பயன்படுத்தலாம்.

உங்களுக்குப் பிடித்த புனைவு நூல்கள் எவை? அவற்றில் உண்மைகள் கலந்திருக்கின்றனவா? ஆம் எனில், எந்த விகிதத்துக்குக் கலந்திருக்கின்றன? எப்படிக் கலந்திருக்கின்றன? அது நூலுக்கு எப்படி உதவுகிறது?… இதையெல்லாம் ஆராய்ந்து பாருங்கள், கற்றுக்கொள்ளுங்கள், அது உங்கள் எழுத்தை இன்னும் சிறப்பாக்கும்.

***

Keywords: Fiction, Short Stories, Shortstories, Short Story, Shorstory, Novel, Novels, Novelette, Novelettes, Research, Researching, Nonfiction, Truth, True, True Story, True Stories, True Novel, True Novels, Novels based on truce incidents, Stories based on true incidents, True incidents, true incident, Fact, Facts, Fact Vs Fiction, Facts Vs Fiction, Facts in Fiction

பயிற்சிகளின்மூலம் எழுதக் கற்றுக்கொள்ள இயலுமா? எழுத்தாளர் பா. ராகவன் பேட்டி

இதே தலைப்பில் இன்னும் சில முக்கியமான பதிவுகள்:

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Art of writing, Writing classes, Writing Class, Writing Workshops, Writing Workshop, Courses, Course, Writing Courses, Writing Course, Pa. Raghavan, Pa. Ragavan, Learn to write, Learn Writing

உங்கள் கதை பத்திரிகையிலிருந்து திரும்பிவந்தால் என்ன செய்வீர்கள்?

நிராகரிப்பு என்பது எல்லாருக்கும் வருத்தமான ஒன்றுதான். குறிப்பாக, எழுத்தாளராகிய உங்களுடைய கதையோ கவிதையோ கட்டுரையோ பத்திரிகையிலிருந்து திரும்பி வந்தால் அது மிகுந்த வருத்தத்தை உண்டாக்கும், சோர்வில் தள்ளும், தொடர்ந்து எழுத இயலாதபடி சிரமப்படுத்தும்.

ஆனால், நிராகரிப்பு என்பதும் எழுத்தின் ஒரு பகுதிதான். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எல்லாரும் இதுபோன்ற நிராகரிப்பைக் கடந்துதான் வந்திருக்கிறார்கள். சிலர் அந்த நிராகரிப்பை ஒரு படிக்கல்லாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறியிருக்கிறார்கள்.

ஒருவேளை, உங்கள் படைப்பு நிராகரிக்கப்பட்டால் என்ன செய்யலாம்?

 • முதலில் வரும் வருத்தம் வரட்டும். அது இயல்பான மனித உணர்ச்சிதான். அதை அப்படியே விட்டுவிடுங்கள், தடுக்கவேண்டாம்.
 • வருத்தம் தீர்ந்தபின், அது ஏன் நிராகரிக்கப்பட்டது என்று யோசிக்கலாம். ஒருவேளை அவர்கள் காரணம் சொல்லியிருந்தால் அதைப் புரிந்துகொள்ள முயலலாம்.
 • அந்தக் காரணம் நியாயமாக இருந்தால், அதைச் சரிசெய்ய முயலலாம், நிராகரிப்பு என்பது கற்றுக்கொள்வதற்கான நல்ல வாய்ப்புதான்.
 • அந்தக் காரணம் நியாயமாக இல்லாவிட்டால், அதை மறந்துவிடலாம். ஏதோ காரணத்தால் இந்தப் படைப்பு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவுதான். (சில படைப்புகள் சில இதழ்களுக்குப் பொருந்தாது. அதுகூட நிராகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்ம், அது உங்கள் படைப்பின் பிரச்சனை இல்லை.)
 • ஒருவேளை, எந்தக் காரணமும் வழங்கப்படவில்லை என்றால், உங்களுக்குத் தெரிந்த சில நண்பர்களிடம் அந்தப் படைப்பைக் கொடுத்துப் படிக்கச் சொல்லலாம், பாராட்டைக் கேட்காமல், ‘இதுல என்ன பிரச்சனைன்னு சொல்லி உதவுங்க’ என்று வெளிப்படையாகக் கேட்கலாம். தேவைப்பட்டால் நுண்ணுணர்வு வாசகர்கள் எனப்படும் Sensitivity Readersஐக்கூடப் பயன்படுத்தலாம்.
 • இப்படிப் படித்தவர்கள் சொல்லும் காரணங்களைச் சிந்தித்துப்பார்த்துப் படைப்பில் தேவையான மாற்றங்களைச் செய்யலாம். அந்தப் பிழைகள் மீண்டும் வராதபடி பார்த்துக்கொள்ளலாம்.
 • திருத்தப்பட்ட படைப்பை அதே இதழுக்கு அல்லது இன்னோர் இதழுக்கு அனுப்பிவைக்கலாம். வெற்றி நிச்சயம்.

உங்களுடைய நிராகரிப்புகளை நீங்கள் எப்படிச் சந்திக்கிறீர்கள்? எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். அவை எல்லா எழுத்தாளர்களுக்கும் பயன்படும்.

***

Keywords: Rejection, Rejected, Handling Rejection, Handling Rejections, Books, Book, Articles, Article, Stories, Story, Novels, Novel, Short Stories, Short Story, Shortstories, shortstory, Returned, Story Returned, Returned Story, Rejected Story, Story Rejected