உங்களுடைய கதை, கட்டுரை, நூல் போன்றவற்றை எழுதியதும் பிறரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வீர்கள், அவர்கள் சொல்லும் கருத்துகளைச் சிந்தித்து, தேவையான திருத்தங்களைச் செய்வீர்கள், அதன்பிறகுதான் பதிப்பிப்பீர்கள். அது ஒரு நல்ல பழக்கம், உங்கள் படைப்பைச் சிறப்பாக ஆக்குகிற உத்தி.
ஏனெனில், எழுதுகிற நம்முடைய பார்வையும் வாசகருடைய பார்வையும் ஒரேபோல் இருப்பதில்லை. அதனால், நாம் ஒரு குறிப்பிட்ட வகையில் சிந்தித்த படைப்பைப் பிறர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அதன்படி செயல்படுவது நல்லது.
ஆனால், இப்படிப் பிறருடைய கருத்துகளைப் பொதுவாகக் கேட்பதுமட்டும் போதாது, அதில் ஒருவராவது Sensitive Readerஆக இருக்கவேண்டும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
அதென்ன Sensitive Reader?
Sensitive என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகரமுதலி சொல்லும் பொருள் இது:
Quick to detect or respond to slight changes, signals, or influences
தமிழில் இதை நுண்ணுணர்வு என்று கூறலாம். அதாவது, படைப்பில் நுட்பமாக வெளிப்படக்கூடிய, பிறரை நல்லமுறையில் அல்லது கெட்டமுறையில் பாதிக்கக்கூடிய விஷயங்களை அடையாளம் காண்பது.
எடுத்துக்காட்டாக, உங்கள் கதையில் காது கேட்காதவர்களைக் கேலி செய்து ஒரு வரி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எழுதும்போது நீங்கள் அதை ஒரு நகைச்சுவையாக எண்ணியிருக்கலாம். ஆனால், உண்மையில் காது கேட்காத ஒருவர் அதைப் படிக்கும்போது மனம் வருந்தக்கூடும். இதுபோன்றவற்றை அடையாளம் கண்டு சுட்டிக்காட்டுகிறவர்தான் Sensitivity Reader, அதாவது, நுண்ணுணர்வுள்ள வாசகர்.
இங்கு காது கேளாமை என்பது ஓர் எடுத்துக்காட்டுதான். இதேபோல் பெண்களை, குள்ளமானவர்களை, மெதுவாக நடக்கிறவர்களை, ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களைக் கேலி செய்கிற விஷயங்கள் உங்களையும் அறியாமல் உங்கள் படைப்பில் இடம்பெற்றுவிடலாம். எல்லாருக்கும் எழுதுகிற நீங்கள் இதுபோன்ற விஷயங்களைத் தவிர்ப்பதற்கு ஒரு Sensitivity Reader உதவுவார், பிரச்சனையை உங்களுக்குப் புரியவைத்துத் திருத்துவார்.
அதனால், உங்களுடைய படைப்புகளை வெளியிடுமுன் நுண்ணுணர்வுள்ள வாசகர் ஒருவரிடம் படிக்கக் கொடுங்கள். அப்படி ஒருவர் உங்கள் வட்டத்தில் இல்லை என்றால், அவரைக் கண்டறியுங்கள். அதைவிட முக்கியம், அவர் சொல்லும் கருத்துகளைக் கூர்ந்து கவனித்து, வருங்காலத்தில் உங்கள் எழுத்தில் அந்தப் பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் Sensitive Reader ஆக விரும்புகிறீர்களா? அதைக் கற்றுத்தரும் புத்தகம் ஒன்று இங்கு உள்ளது.
***
Keywords: Readers, Reader, Reviewers, Reviewer, Review, Reading, Reviewing, Comments, Comment, Commenting, Feedback, Feed back, Sensitive, Sensitivity, Sensitive Reader, Sensitivity Reader, Sensitive Reader, Sensitivity Readers, Alpha Reader, Alpha Readers, Beta Reader, Beta Readers