நம்முடைய படைப்பு ஒன்று யாராலாவது நிராகரிக்கப்பட்டால், அது ஒரு மாற்றமுடியாத தீர்ப்பு என்று எண்ணவேண்டியதில்லை என்கிறார் திரை எழுத்தாளர், இயக்குநர் Brian Koppelman. அதற்குப்பதிலாக, அந்த நிராகரிப்பையும் நம்முடைய படைப்பையும் எதிரெதிரில் வைத்துச் சிந்திக்கவேண்டும் என்கிறார்:
- இவர் X என்ற காரணத்தால் என்னுடைய படைப்பை நிராகரிக்கிறார்
- என்னுடைய படைப்பில் X இருக்கிறதா?
- இல்லை என்றால், அந்த நிராகரிப்பை நாம் நிராகரித்துவிடலாம்
- இருக்கிறது என்றால், X ஒரு பிரச்சனையா?
- பிரச்சனையில்லை என்றால், அந்த நிராகரிப்பை நாம் நிராகரித்துவிடலாம். எடுத்துக்காட்டாக, நாம் காமெடிக் கதை எழுதியிருக்கும்போது “அதில் லாஜிக் இல்லை” என்ற காரணத்தால் ஒருவர் நிராகரித்தால், அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை.
- பிரச்சனைதான் என்றால், இதை நான் சரி செய்ய இயலுமா?
- சரி செய்ய இயலும் என்றால், சரி செய்து மீண்டும் அவரிடமோ இன்னொருவரிடமோ சமர்ப்பிக்கலாம்
- சரி செய்ய இயலாது என்றால், அதை ஓரமாக வைத்துவிட்டு, இந்த அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்
இப்படி நிராகரிப்பு என்பது ஒரு (நல்ல) மாற்றத்துக்கு வழிவகுக்கவேண்டும், அதை வெறும் தீர்ப்பாகப் பார்த்து மனம் வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை என்கிறார் பிரயன்.
‘தோல்விதான் வெற்றிக்கு முதல் படி’ என்கிற நம் ஊர்ப் பொன்மொழிகூட இந்த வகைதான் என்று நினைக்கிறேன். திரும்பத் திரும்ப ஒரேமாதிரி செய்து தோற்றுக்கொண்டே இருந்தால் வெற்றி வந்துவிடாது, அந்தத் தோல்வியைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்துப் பாடம் கற்றுக்கொண்டு வேறுவிதமாக முயன்றால்தான் அது வெற்றிக்கு முதல் படி.
***
Keywords: Rejection, Rejections, Failure, Failures, Success, Handling Rejection, Handling Rejections, Rejection Letter, Rejected Script, Rejected Manuscript, Rejected Book, Book Rejected