பிழையைக் கண்டுபிடித்தால் பத்துப் பைசா

வரும் நவம்பர் 7 குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா அவர்களுடைய நூற்றாண்டு தொடங்குகிறது. அதைக் கொண்டாடும்வகையில் ‘தி இந்து’ நாளிதழின் ‘மாயாபஜார்’ இணைப்பிதழில் ஒரு பக்கம் முழுக்க அவருடைய கதை, பாடல்கள், அவரைப்பற்றிய பேட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அழ. வள்ளியப்பா அவர்களுடைய மகள் எழுத்தாளர் தேவி நாச்சியப்பன் ஒரு சுவையான விஷயம் சொல்கிறார்.

அழ. வள்ளியப்பா தன்னைப் பார்க்க வரும் குழந்தைகளிடம் தன்னுடைய படைப்புகளைத் தந்து படிக்கச் சொல்வாராம், அதில் ஏதாவது பிழைகளைக் கண்டுபிடித்தால் ஒவ்வொரு பிழைக்கும் பத்துப் பைசா பரிசு தருவதாகச் சொல்வாராம்.

அன்றைக்குப் பத்துப் பைசா என்பது பெரிய விஷயம். அதனால் குழந்தைகள் ஆர்வத்துடன் பிழைகளைத் தேடுவார்களாம். ஆனால், அழ. வள்ளியப்பா எழுத்தில் பிழைகள் இருக்காது என்பதால், அவர்களுக்கு அந்தப் பத்துப் பைசா எட்டாக் கனிதான். எனினும், அழ. வள்ளியப்பா அவர்களுடைய இந்த விளையாட்டால் நாங்கள் எல்லாரும் தமிழைப் பிழையின்றி எழுதக் கற்றுக்கொண்டோம் என்கிறார் தேவி நாச்சியப்பன்.

***

அழ. வள்ளியப்பா அவர்களுடைய 30க்கும் மேற்பட்ட நூல்களை இலவசமாகப் படிக்க, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Writing, Writers, Authors, Editing, Grammar, Errors, Error, Mistakes, Mistake, Corrections, Correction, Editors, Editor, Author, Writer

அன்போடு எழுதுங்கள்

நேற்று, மைக்கேல் போர்ட் என்ற புகழ் பெற்ற எழுத்தாளர், பேச்சாளருடைய ஓர் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தேன், ‘உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் எழுதும்போது ஒரு கும்பலிடம் பேசுவதுபோல் எழுதாதீர்கள், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசுவதுபோல் எழுதுங்கள்’ என்கிறார்.

எடுத்துக்காட்டாக, ‘நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த மிதிவண்டி வெளியாகிவிட்டது’ என்று எழுதக்கூடாதாம். அதில் ‘அனைவரும்’ என்ற சொல்லை நீக்கிவிட்டால் வாடிக்கையாளருடன் நேரடியாகப் பேசும் உணர்வு வந்துவிடும், சொற்பொழிவாக இல்லாமல் நேரடி உரையாடலாக இருக்கும், அதில் நெருக்கம் இருக்கும்.

இன்று, காந்தியத் தொண்டர் T. D. திருமலையைப்பற்றிப் புது தில்லி தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநர் அ. அண்ணாமலை எழுதிய ‘திருமலை எனும் ஆளுமையின் நூற்றாண்டு’ என்ற கட்டுரையைப் படித்தேன். நேற்றைய வணிக உரைக்கும் இந்த வரலாற்றுக் கட்டுரைக்கும் தொடர்பே இல்லை. எனினும், இங்கும் கிட்டத்தட்ட அதேபோல் ஒரு பாடத்தைப் பார்த்தேன்.

‘கடிதம் எழுதுவது என்பது ஒருவருடன் உறவாடுவதுபோல’ என்கிறார் T. D. திருமலை. ‘உங்கள் கடிதம் நிர்வாகரீதியில் எழுதப்பட்ட சுற்றறிக்கையைப்போல் இருக்கக்கூடாது. கடிதம் எழுதும்போது அன்பும் பாசமும் உறவும் கலந்து இருக்கவேண்டும்.’

வாடிக்கையாளர்களோ உறவினர்களோ மற்றவர்களோ, அன்போடு பேசினால், எழுதினால் நெருக்கம் வரும், செயற்கைத்தனம் கலந்துவிட்டால் விலக்கம் மிகும்.

***

Keywords: Writing, Letters, Emails, Letterwriting, Letter writing, Communication, Marketing, Marketing Communication, Advice, Tips, Connecting with readers, Connection

நேரத்தைத் திருடலாம்

என்னுடைய Nonfiction பயிற்சி வகுப்பில் நேர மேலாண்மைக்கென்று ஒரு சிறு பாடத்தை ஒதுக்கியிருக்கிறேன். முழு நேரப் பணி, குடும்ப, சமூகக் கடமைகளுக்கு நடுவில் நூல் எழுத வருகிறவர்கள் எழுதுவதற்கான நேரத்தை எங்கிருந்து பெறலாம், அதை எப்படி நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விரிவாகப் பேசுவதற்குதான் அந்த நேரம்.

இந்தப் பாடத்தைக் கற்றுத்தந்தபிறகு, ‘உங்களுடைய இப்போதைய சூழலின் அடிப்படையில் ஓர் எழுத்துத் திட்டத்தை (Writing Plan/Schedule) உருவாக்குங்கள்’ என்று ஒரு சிறு பயிற்சி அளிப்பேன். அதன்பிறகு, ‘இந்தத் திட்டத்தை இன்னும் மேம்படுத்த இயலுமா, குறைந்தது 20% கூடுதல் நேரத்தை எங்கிருந்தாவது எடுக்க இயலுமா?’ என்று கேட்பேன்.

எடுத்துக்காட்டாக, மாதம் ஒரு திரைப்படத்தைக் குறைக்கலாம், கிரிக்கெட் போட்டிகளை, பிக் பாஸை முழுக்கப் பார்க்காமல் ஹைலைட்ஸ்மட்டும் பார்க்கலாம், நாள்தோறும் மூன்று சானல்களில் செய்திகளைப் பார்க்காமல் அதை இரண்டாகக் குறைக்கலாம், தொலைபேசியில் ஒருவரைப்பற்றி ஐந்து பேரிடம் வம்பு பேசுவதை மூன்றாகக் குறைக்கலாம்… இப்படி எங்கிருந்தாவது கொஞ்சங்கொஞ்சமாக எழுத்துக்குக் கூடுதல் நேரத்தைப் பிடுங்கச்சொல்லிக் கேட்பேன், அதன்மூலம் அவர்கள் தங்கள் நூலை ஓரிரு மாதங்கள் முன்பாகவே முடித்துவிடலாம் என்று ஆசை காட்டுவேன்.

அதே நேரம், மூன்று விஷயங்களிலிருந்துமட்டும் எழுத்துக்காக நேரத்தைப் பிடுங்கக்கூடாது, ஏனெனில் அவை Non negotiable, சமரசம் செய்துகொள்ளக்கூடாதவை என்றும் சொல்வேன்:

1. இரவுத் தூக்கம்

2. உடற்பயிற்சி

3. குடும்பத்தினருடன் செலவிடும் நேரம்

இப்படி உங்களுடைய Non Negotiable நேரங்கள், எதற்காகவும் நீங்கள் குறைத்துக்கொள்ள விரும்பாத விஷயங்கள் எவை?

***

என். சொக்கன் நடத்தும் Nonfiction பயிற்சி வகுப்பில் சேர்ந்து புனைவல்லாத நூல்களை எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். வகுப்பில் சேர, இங்கு க்ளிக் செய்யுங்கள்.

***

Keywords: Time Management, Time Management for Authors, Managing Time, Managing Your Time, Time Management for Writers, Finding Time to Write, Finding Time for Writing

ஏதேனும், எவையேனும்: இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

Any என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன: ஏதேனும், எவையேனும் ஆகிய இந்த இரு சொற்களும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஒரேமாதிரிதான் உள்ளன. ஆனால், இவற்றினிடையில் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. எழுதும்போது அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்:

 • ஏதேனும் என்ற சொல் ஒருமைக்கு உரியது. எடுத்துக்காட்டாக, ‘ஐந்து பந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.’
 • எவையேனும் என்ற சொல் பன்மைக்கு உரியது. எடுத்துக்காட்டாக, ‘ஐந்து பந்துகளில் எவையேனும் மூன்றைத் தேர்ந்தெடுங்கள்.’

இந்த வேறுபாட்டை நினைவில் வைத்துக்கொள்ள ஓர் எளிய வழி இருக்கிறது:

 • ஏதேனும் என்ற சொல் ‘எது’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. ‘எது’ என்பது ஒருமைக்கு உரிய சொல். அதனால், ‘ஏதேனும்’ என்பதையும் ஒருமையோடு சேர்த்துப் பயன்படுத்தவேண்டும்.
 • எவையேனும் என்ற சொல் ‘எவை’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. ‘எவை’ என்பது பன்மைக்கு உரிய சொல், அதனால், ‘எவையேனும்’ என்பதையும் பன்மையோடு சேர்த்துப் பயன்படுத்தவேண்டும்.

இப்போது, பின்வரும் வாக்கியங்களில் வரும் கோடிட்ட இடங்களை நிரப்பிப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்:

 • சரவணன் விடுமுறைக்கு _________ ஒரு நாட்டுக்குச் செல்வான்.
 • பூனை _______ ஒரு கூரையில் தாவும்.
 • வள்ளி நூலகத்திலிருந்து __________ சில புத்தகஙகளை எடுத்துவந்தாள்.
 • மாடு _________ ஒரு வயலில் மேயும்.
 • அரசியல் தலைவர்கள் __________ சில மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பார்கள்.

***

தொடர்புடைய நூல்: நல்ல தமிழில் எழுதுவோம் by என். சொக்கன்

***

Keywords: Grammar, Tamil, Thamizh

நாட்டுக் காய் Vs கலப்பினக் காய்: நீங்கள் எந்த வகை?

இன்று எங்கள் வீட்டில் நாட்டு மக்காச்சோளம் (அதாவது, உள்ளூர் வகை மக்காச்சோளம்) வேகவைத்திருந்தார்கள். நானும் குழந்தைகளும் அதை ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.

எங்கள் குழந்தைகளுக்கு ‘ஸ்வீட் கார்ன்’ எனப்படும் கலப்பின (ஹைப்ரிட்) மக்காச்சோளமும் பிடிக்கும். எனக்கு அது அவ்வளவாகப் பிடிக்காது. அதனால், அவர்களைக் கொஞ்சம் சீண்டினேன், ‘இந்த நாட்டு மக்காச்சோளம் எவ்ளோ நல்லா இருக்கு, இதை விட்டுட்டு ஏன் ஹைப்ரிட் மக்காச்சோளத்தை விரும்பிச் சாப்பிடறீங்க?’

‘இந்த மக்காச்சோளம் நல்லாதான் இருக்கு. ஆனா, இது எப்பவும் இவ்ளோ நல்லா இருக்காது, சில சமயம் சூப்பரா இருக்கும், சில சமயம் சொதப்பிடும், Consistency இல்லை’ என்றாள் என் மூத்த மகள், ‘ஹைப்ரிட் வெரைட்டியில அது ஒரு வசதி, எப்பவும் ஒரேமாதிரி Consistent சுவை இருக்கும். இது நல்லா இருக்குமோ, இருக்காதோன்னு யோசிக்கவேண்டியதில்லை. நம்பிச் சாப்பிடலாம்.’

என் மகள் சொன்ன இந்தக் கருத்து மக்காச்சோளத்தைப்போலவே எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்:

 • சில எழுத்தாளர்கள் நாட்டு மக்காச்சோளத்தைப்போல் அவ்வப்போது மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள், மற்ற நேரங்களில் சுமாராக எழுதுகிறார்கள். அவர்களுடைய படைப்புகளில் சிறந்தவற்றைத் தேடிப் பிடிப்பது வாசகர்களுக்கு ஒரு வேலை.
 • வேறு சில எழுத்தாளர்கள் கலப்பின மக்காச்சோளத்தைப்போல் எப்போதும் ஒரேமாதிரி எழுதுகிறார்கள். அது சிறப்பா, சிறப்பில்லையா என்பது வேறு விஷயம். அந்த ‘ஒரேமாதிரி எழுதுவது’ என்கிற Consistencyக்கு வாசகர்கள் மதிப்பு அளிக்கிறார்கள். ‘அவர் எழுதின கதையா? நம்பிப் படிக்கலாம்’ என்று நினைக்கிறார்கள், அந்த நம்பிக்கையை அவர் ஒவ்வொருமுறையும் கண்டிப்பாகக் காப்பாற்றிவிடுகிறார். (திரைப்படத்துறையில் ‘Minimum Guarantee இயக்குநர்கள்’ என்று சிலர் உண்டு. அவர்களும் இந்த வகைதான்.)

எழுத்தாளராக நீங்கள் எந்த வகை? அவ்வப்போது மிகச் சிறப்பாக எழுதுகிறவரா? அல்லது எப்போதும் ஒரேமாதிரி தரத்தைப் பராமரிக்கிறவரா?

***

Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Consistency, Quality, என். சொக்கன், என்சொக்கன், சொக்கன், N. Chokkan, nchokkan, N. Sokkkan

உங்கள் நூல் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?

நம்முடைய படைப்பு ஒன்று யாராலாவது நிராகரிக்கப்பட்டால், அது ஒரு மாற்றமுடியாத தீர்ப்பு என்று எண்ணவேண்டியதில்லை என்கிறார் திரை எழுத்தாளர், இயக்குநர் Brian Koppelman. அதற்குப்பதிலாக, அந்த நிராகரிப்பையும் நம்முடைய படைப்பையும் எதிரெதிரில் வைத்துச் சிந்திக்கவேண்டும் என்கிறார்:

 • இவர் X என்ற காரணத்தால் என்னுடைய படைப்பை நிராகரிக்கிறார்
 • என்னுடைய படைப்பில் X இருக்கிறதா?
 • இல்லை என்றால், அந்த நிராகரிப்பை நாம் நிராகரித்துவிடலாம்
 • இருக்கிறது என்றால், X ஒரு பிரச்சனையா?
 • பிரச்சனையில்லை என்றால், அந்த நிராகரிப்பை நாம் நிராகரித்துவிடலாம். எடுத்துக்காட்டாக, நாம் காமெடிக் கதை எழுதியிருக்கும்போது “அதில் லாஜிக் இல்லை” என்ற காரணத்தால் ஒருவர் நிராகரித்தால், அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை.
 • பிரச்சனைதான் என்றால், இதை நான் சரி செய்ய இயலுமா?
 • சரி செய்ய இயலும் என்றால், சரி செய்து மீண்டும் அவரிடமோ இன்னொருவரிடமோ சமர்ப்பிக்கலாம்
 • சரி செய்ய இயலாது என்றால், அதை ஓரமாக வைத்துவிட்டு, இந்த அனுபவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம்

இப்படி நிராகரிப்பு என்பது ஒரு (நல்ல) மாற்றத்துக்கு வழிவகுக்கவேண்டும், அதை வெறும் தீர்ப்பாகப் பார்த்து மனம் வருந்துவதில் எந்தப் பயனும் இல்லை என்கிறார் பிரயன்.

‘தோல்விதான் வெற்றிக்கு முதல் படி’ என்கிற நம் ஊர்ப் பொன்மொழிகூட இந்த வகைதான் என்று நினைக்கிறேன். திரும்பத் திரும்ப ஒரேமாதிரி செய்து தோற்றுக்கொண்டே இருந்தால் வெற்றி வந்துவிடாது, அந்தத் தோல்வியைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்துப் பாடம் கற்றுக்கொண்டு வேறுவிதமாக முயன்றால்தான் அது வெற்றிக்கு முதல் படி.

***

Keywords: Rejection, Rejections, Failure, Failures, Success, Handling Rejection, Handling Rejections, Rejection Letter, Rejected Script, Rejected Manuscript, Rejected Book, Book Rejected

மதிப்புள்ள சகோதரன்

புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்காவுடைய தம்பி மிஹைல் அவருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் “இப்படிக்கு, உங்கள் மதிப்பில்லாத, முக்கியத்துவமில்லாத சகோதரன்” என்று எழுதிக் கையொப்பமிடுகிறார்.

இந்த வரி ஆன்டனுக்குப் பிடிக்கவில்லை. “ஏன் அப்படி எழுதுகிறாய்?” என்று தம்பியைக் கடிந்துகொள்கிறார், “கடவுளுக்கு முன்னால் உன்னுடைய முக்கியத்துவமின்மையை உணரலாம்; அழகுக்கு முன்னால், அறிவுக்கு முன்னால், இயற்கைக்கு முன்னால் நாம் முக்கியத்துவமற்றவர்கள் என்று எண்ணலாம். ஆனால், மனிதர்களுக்கு முன்னால் நாம் நம்மை முக்கியத்துவம் இல்லாதவர்களாக எண்ணக்கூடாது.”

“நீ ஏன் உன்னை அப்படி நினைத்துக்கொள்கிறாய்? நீ என்ன பொறுக்கியா? நேர்மையான ஆள்தானே? அப்படியானால், நான் ஒரு நேர்மையான மனிதன் என்று உன்னை நீயே மதிக்கத் தொடங்கு, அப்போது, பிறருக்கு முன்னால் உன்னை மதிப்பற்றவனாக எண்ணமாட்டாய்.”

“பணிவுடன் இருப்பது வேறு, நம்மை நாமே மதிப்பற்றவர்களாக எண்ணிக்கொள்வது வேறு, இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்ளாதே.’

என்ன அழகான அறிவுரை! இந்த உலகத்தில் எல்லாரும் ஒவ்வொரு விதத்தில் மதிப்புள்ளவர்கள்தான் என்பதை உணர்த்தும் “எறும்பும் தன் கையால் எண் சாண்” என்ற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது. தாழ்வு மனப்பான்மை கொண்ட எல்லாருக்கும் செக்காவின் இந்த வரிகளைப் படிக்கக் கொடுக்கலாம்.

***

Keywords: Anton Chekhov, ஆன்டன் செக்காவ், Russia, Russian Literature, Letters, Advice, Advise, Self Improvement, Self Help, Self Belief, தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சுயமுன்னேற்றம்

பேனா, ரப்பர், நாற்காலி

Morton Feldman என்ற இசையமைப்பாளர், John Cage என்ற இன்னொரு (மூத்த) இசையமைப்பாளரைச் சந்திக்கிறார், சில அறிவுரைகள் பெறுகிறார்.

அந்தப் பேச்சில் இசை நிரம்பி வழிந்திருக்குமோ என்றால், இல்லை. ஜானிடம் மார்டன் கேட்ட கேள்விகள் கிட்டத்தட்ட ஸ்டேஷனரிக் கடையில் நடக்கும் உரையாடலைப்போல் இருக்கின்றன:

நீங்கள் இசைக் குறிப்புகளை எழுதுவதற்கு என்ன பேனா பயன்படுத்துகிறீர்கள்? கோடு போடுவதற்கு என்ன ruler பயன்படுத்துகிறீர்கள்? ஏதாவது தவறாக எழுதிவிட்டால் அதை அழிப்பதற்கு என்ன அழிப்பான் (eraser) பயன்படுத்துகிறீர்கள்?

மார்டனுடைய கேள்விகளுக்கெல்லாம் ஜான் பொறுமையாகப் பதில் சொல்கிறார், Rapidograph என்ற துல்லியமான ஜெர்மன் பேனாவை அவருக்கு அறிமுகப்படுத்துகிறார், மார்டன் எழுதிய சில இசைக் குறிப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றைத் தன்னுடைய கையெழுத்தில் மீண்டும் எழுதிக் காண்பிக்கிறார், இசைக் குறிப்புகள் என்றால் இப்படிதான் ஒழுங்காக, நேர்த்தியாக, பிசிறில்லாமல், தூய்மையுடன் இருக்கவேண்டும் என்று கற்றுத்தருகிறார்.

இவற்றோடு, இசைக் குறிப்புகளை எழுதும்போது உட்கார்கிற இருக்கையும் வசதியாக இருக்கவேண்டும் என்கிறார் மார்டன். ‘சரியான ஒரு நாற்காலி கிடைத்துவிட்டால் நான் மொசார்ட்போல் படைத்துவிடுவேன்’ என்பது அவருடைய நம்பிக்கை.

மார்டன் ஃபெல்ட்மன் 1984ல் நடத்திய ஒரு சொற்பொழிவில் இந்தக் குறிப்புகளைப் படித்தேன். பேனா, கோடு போடுகிற ஸ்கேல், அழிப்பான், நாற்காலி என்று எல்லாம் கச்சிதமாக இருக்கவேண்டும் என்கிற அவருடைய வலியுறுத்தலை முதன்முறை படித்தபோது சிரிப்பாக இருந்தது. ஆனால், கொஞ்சம் யோசித்தால், படைப்போட்டத்துக்கு எந்தவிதத்திலும் தடை இல்லாதபடி ஒரு வசதியான சூழலை உண்டாக்கிக்கொள்வது படைக்கிறவனுக்கு மிக முக்கியம் என்பது புரிகிறது. இதில் அட்ஜஸ்ட் செய்துகொண்டால், படைப்பில் சமரசம் செய்துகொள்வதைப்போல்தான்.

இதே சொற்பொழிவில் இன்னோர் இடத்தில் மார்டன் இதையும் கொஞ்சம் கோடு போட்டுக் காண்பிக்கிறார்: ‘பல நேரங்களில் நான் பென்சிலில் எழுதுவதில்லை; நேரடியாகப் பேனாவில் எழுதுவேன். அதற்குக் காரணம், நான் எழுதுவதுதான் இசை, எழுதியதை அழிக்கமாட்டேன், திருத்தி எழுதமாட்டேன் என்கிற பிடிவாதம் இல்லை, ஓர் இசைக் குறிப்பை எழுதியபின் அழிப்பானைப் பயன்படுத்தி அதைத் திருத்தவேண்டிய தேவை ஏற்பட்டால், எனக்குக் கவனம் போதவில்லை என்று பொருள். எழுதுவதை நிறுத்திவிட்டுச் சாப்பிடப் போய்விடுவேன்.’

***

Keywords: Writing, Creating, Creativity, Creators, Creator, Music, Music Writing

ஒரு புத்தகம் எழுதும்போது என்னமாதிரி எதிர்பார்ப்புடன் எழுதவேண்டும்?

கணினி உலகில் டென்னிஸ் ரிட்சி மிகப் பெரிய ஆளுமை. Unix, C என்ற பிரமாண்டமான தாக்கம் கொண்ட இரண்டு படைப்புகளுக்குச் சொந்தக்காரர் இவர். ஒரே மனிதர் இரண்டு நோபல் பரிசுகளை வாங்குவதுபோன்ற சாதனை இது.

அவரிடம் ஒரு பேட்டியாளர் கேட்கிறார், ‘புதிய கணினி மொழிகளை உருவாக்குபவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?’

இதற்கு டென்னிஸ் சொல்லும் பதில் மிகச் சுவையானது, ‘கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் உங்களுடைய புதிய மொழியை உருவாக்குங்கள், அதை யாரும் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.’

இந்த அறிவுரை சற்று முரட்டுத்தனமாகத் தோன்றலாம். ஆனால், அதற்கான காரணங்களை அவரே அழகாக விளக்குகிறார்:

1. புதிய கணினி மொழிகள் ஏற்றுக்கொள்ளப்படுவது ஒரு லாட்டரிப் பரிசுபோலதான். (டென்னிஸ் உருவாக்கிய) Cஐவிட அழகான பல மொழிகள் உள்ளன, ஆனால், அவை புகழ் பெறவில்லை.

2. இதனால், நீங்கள் ஒரு நல்ல மொழியை உருவாக்கிவிட்டு, அதை யாரும் பயன்படுத்தவில்லை என்று புலம்புவதைவிட, இதை உருவாக்கியதன்மூலம் நான் ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொண்டேன் என்று மன நிறைவு அடையலாம். அது இந்தப் பணியின்மூலம் கண்டிப்பாக உங்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மை, லாட்டரிப் பரிசு இல்லை.

3. இந்த எதிர்பார்ப்புடன் நீங்கள் வேலையைத் தொடங்கினால், ஒருவேளை அந்த மொழி வெற்றி பெறாவிட்டால் ஏமாற்றம் குறையும், வெற்றி பெற்றால் மகிழ்ச்சி கூடும்.

இப்போது, மேலே உள்ள குறிப்பில் கணினி மொழி என்பதற்குப் பதில் புத்தகம் என்று மாற்றிப் படியுங்கள், இது எழுத்தாளர்களுக்கான நல்ல அறிவுரையாக மாறிவிடும்!

***

டென்னிஸ் உள்ளிட்ட 20 தொழில்நுட்ப வல்லுனர்களுடைய கதைகளை என்னுடைய ‘கம்ப்யூட்டருடன் பேசியவர்கள்’ நூலில் படிக்கலாம். அதற்கான இணைப்பு இங்கு உள்ளது.

Keywords: Dennis Ritchie, C, Unix, Advice, Programming Language, Books, Book, Authors, Writers, Writing, Results, Success

மொழிபெயர்ப்புக்கு அனுமதி பெறுவது எப்படி?

பிற எழுத்தாளர்களுடைய படைப்புகளை மொழிபெயர்க்கும்போது அவர்களுடைய அனுமதி பெறுவது எப்படி?

டாக்டர் பி. சந்திரமௌலி

பெரும்பாலான எழுத்தாளர்களுக்குச் சொந்த இணையத் தளம் உள்ளது. அல்லது, அவர்களை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பக்கங்களில் கண்டறியலாம். அதன்மூலம் அவர்களுக்கு எழுதி அனுமதி கேட்கலாம். எழுத்தாளர் அல்லது அவருடைய உதவியாளர் ஒருவர் உங்களுக்குப் பதில் அனுப்புவார், அனுமதி வழங்குவார் அல்லது அதற்கான விதிமுறைகளைப் பேசுவார்.

சில எழுத்தாளர்களுடைய மொழிபெயர்ப்புகளை வேறு நபர்கள் (முகவர்கள்) அல்லது அமைப்புகள் கையாளும். அதுபோன்ற நேரங்களில், ‘நீங்கள் அவர்களுடன் பேசுங்கள்’ என்று பதில் வரும்.

ஒருவேளை எழுத்தாளரை இம்முறையில் தொடர்புகொள்ள இயலாவிட்டால், நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் நூலை வெளியிட்ட பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளலாம். ஒருவேளை, உரிமை அவர்களிடம் இருக்கலாம், அல்லது, அவர்கள் எழுத்தாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவலாம்.

எது எப்படியோ, முறைப்படி அனுமதி பெறாமல் எதையும் மொழிபெயர்க்காதீர்கள். நீங்கள் லாபத்துக்காகச் செய்யாவிட்டாலும் அது சட்டப்படி சரியில்லை.

இந்தப் பகுதியில் எழுத்துபற்றிய கேள்வி, பதில்கள் இடம்பெறும். உங்கள் கேள்விகள், ஐயங்களையும் ezhudhuvom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

Keywords: Translation, Translations, Translator, Translation Rights, Translation Right, Copyright, Permission, Authors, Writers, Books, மொழிபெயர்ப்பு