நேற்று, மைக்கேல் போர்ட் என்ற புகழ் பெற்ற எழுத்தாளர், பேச்சாளருடைய ஓர் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தேன், ‘உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் எழுதும்போது ஒரு கும்பலிடம் பேசுவதுபோல் எழுதாதீர்கள், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசுவதுபோல் எழுதுங்கள்’ என்கிறார்.
எடுத்துக்காட்டாக, ‘நீங்கள் அனைவரும் எதிர்பார்த்த மிதிவண்டி வெளியாகிவிட்டது’ என்று எழுதக்கூடாதாம். அதில் ‘அனைவரும்’ என்ற சொல்லை நீக்கிவிட்டால் வாடிக்கையாளருடன் நேரடியாகப் பேசும் உணர்வு வந்துவிடும், சொற்பொழிவாக இல்லாமல் நேரடி உரையாடலாக இருக்கும், அதில் நெருக்கம் இருக்கும்.
இன்று, காந்தியத் தொண்டர் T. D. திருமலையைப்பற்றிப் புது தில்லி தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநர் அ. அண்ணாமலை எழுதிய ‘திருமலை எனும் ஆளுமையின் நூற்றாண்டு’ என்ற கட்டுரையைப் படித்தேன். நேற்றைய வணிக உரைக்கும் இந்த வரலாற்றுக் கட்டுரைக்கும் தொடர்பே இல்லை. எனினும், இங்கும் கிட்டத்தட்ட அதேபோல் ஒரு பாடத்தைப் பார்த்தேன்.
‘கடிதம் எழுதுவது என்பது ஒருவருடன் உறவாடுவதுபோல’ என்கிறார் T. D. திருமலை. ‘உங்கள் கடிதம் நிர்வாகரீதியில் எழுதப்பட்ட சுற்றறிக்கையைப்போல் இருக்கக்கூடாது. கடிதம் எழுதும்போது அன்பும் பாசமும் உறவும் கலந்து இருக்கவேண்டும்.’
வாடிக்கையாளர்களோ உறவினர்களோ மற்றவர்களோ, அன்போடு பேசினால், எழுதினால் நெருக்கம் வரும், செயற்கைத்தனம் கலந்துவிட்டால் விலக்கம் மிகும்.
***
Keywords: Writing, Letters, Emails, Letterwriting, Letter writing, Communication, Marketing, Marketing Communication, Advice, Tips, Connecting with readers, Connection
சிறப்பான பதிவு
LikeLike