Any என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகத் தமிழில் இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன: ஏதேனும், எவையேனும் ஆகிய இந்த இரு சொற்களும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ஒரேமாதிரிதான் உள்ளன. ஆனால், இவற்றினிடையில் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. எழுதும்போது அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்:
- ஏதேனும் என்ற சொல் ஒருமைக்கு உரியது. எடுத்துக்காட்டாக, ‘ஐந்து பந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.’
- எவையேனும் என்ற சொல் பன்மைக்கு உரியது. எடுத்துக்காட்டாக, ‘ஐந்து பந்துகளில் எவையேனும் மூன்றைத் தேர்ந்தெடுங்கள்.’
இந்த வேறுபாட்டை நினைவில் வைத்துக்கொள்ள ஓர் எளிய வழி இருக்கிறது:
- ஏதேனும் என்ற சொல் ‘எது’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. ‘எது’ என்பது ஒருமைக்கு உரிய சொல். அதனால், ‘ஏதேனும்’ என்பதையும் ஒருமையோடு சேர்த்துப் பயன்படுத்தவேண்டும்.
- எவையேனும் என்ற சொல் ‘எவை’ என்ற சொல்லிலிருந்து வருகிறது. ‘எவை’ என்பது பன்மைக்கு உரிய சொல், அதனால், ‘எவையேனும்’ என்பதையும் பன்மையோடு சேர்த்துப் பயன்படுத்தவேண்டும்.
இப்போது, பின்வரும் வாக்கியங்களில் வரும் கோடிட்ட இடங்களை நிரப்பிப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்:
- சரவணன் விடுமுறைக்கு _________ ஒரு நாட்டுக்குச் செல்வான்.
- பூனை _______ ஒரு கூரையில் தாவும்.
- வள்ளி நூலகத்திலிருந்து __________ சில புத்தகஙகளை எடுத்துவந்தாள்.
- மாடு _________ ஒரு வயலில் மேயும்.
- அரசியல் தலைவர்கள் __________ சில மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பார்கள்.
***
தொடர்புடைய நூல்: நல்ல தமிழில் எழுதுவோம் by என். சொக்கன்
***
Keywords: Grammar, Tamil, Thamizh