எழுத்தாளர்கள் எழுதும் பெரிய கதைகளை நூலாக வெளியிடும்போது “நாவல்” அல்லது “புதினம்” என்று அழைக்கிறோம். அந்தக் கதைகளில் சில, பத்திரிகைகளில் தொடர்களாகவும் வெளிவருகின்றன. அப்போது அவற்றைத் “தொடர்கதை” என்று அழைக்கிறோம். இந்த இரண்டும் ஒன்றுதானா?
தொடர் என்பது பத்திரிகைகளின் வசதிக்காக அமைந்த ஒன்று. அதாவது, ஒரே கதையை மொத்தமாகத் தந்து சலிப்பை உண்டாக்குவதைவிட, அதை வாரம் கொஞ்சமாகப் பிரித்துத் தருவார்கள், அத்துடன், ஆர்வத்தைத் தூண்டி வாசகரைத் திரும்பத் திரும்பத் தங்கள் பத்திரிகையை வாங்க வைப்பார்கள்.
இவ்வகைத் தொடர்கள் கதைகளுக்குதான் என்று இல்லை, தொடர் கட்டுரைகள் உண்டு, தொடர் கவிதைகள் உண்டு, இன்னும் பலவகைத் தொடர்கள் இருக்கின்றன.
ஆக, ஒரு நாவல் தொடராக எழுதப்படுகிறது, இன்னொரு நாவல் மொத்தமாக ஒரே நேரத்தில் எழுதப்படுகிறது என்கிற காரணத்தால் அவை இரண்டும் வெவ்வேறாகிவிடாது. அவற்றுக்கான அடிப்படை எழுத்து உத்திகள் ஒன்றுதான்.
எனினும், தொடராக வெளியாகும் நாவல்களுக்குச் சில கூடுதல் அம்சங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, தொடர்கதைகளின் ஒவ்வோர் அத்தியாயத்தின் நிறைவிலும் வாசகரைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஓர் அதிர்ச்சியான, வியப்பான, எதிர்பாராத ஒரு விஷயத்தை வைப்பது வழக்கம். ஆங்கிலத்தில் இதை Cliffhanger என்பார்கள். இது நாவல்களுக்குப் பெரும்பாலும் தேவைப்படாது, இருந்தாலும் பிழை இல்லை.
அதேபோல், தொடர்கதைகளில் ஒவ்வோர் அத்தியாயமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கவேண்டும். நாவல்களில் அவை எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.
நீங்கள் ஒரு நாவல் எழுதினாலும் சரி, தொடர்கதை எழுதினாலும் சரி, அதற்கான ஆராய்ச்சி, தயாராதல் என அனைத்தும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான் அமையும். தொடராக எழுதும்போது அந்தப் பத்திரிகையின் தேவைகளை அறிந்து அதற்கேற்பச் சில கூடுதல் விஷயங்களைச் செய்வீர்கள், அவ்வளவுதான். பின்னர் அதைத் தொகுத்து நாவலாக வெளியிடும்போது, தேவைப்பட்டால் அந்த சில அம்சங்களை நீக்கிவிட்டுக்கூட வெளியிடலாம், அப்படியே வெளியிட்டாலும் பிரச்சனை இருக்காது.
உங்களுக்குப் பிடித்த நாவல்கள், தொடர்கதைகளைப்பற்றி Comments பகுதியில் சொல்லுங்கள்!
***
Keywords: Novels, Novel, Serials, Serial, Series, Story Series, Cliffhanger, Chapters, Chapter, Episodes, Episode
1 Comment