நீங்கள் யூட்யூபில் இருக்கிறீர்களா?
நான் எழுத்தாளர், எனக்கு யூட்யூபில் என்ன வேலை என்று சிந்திக்கவேண்டாம். எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்பை வாசகர்களிடம் கொண்டுசெல்கிறவர்களாகவும் இருக்கவேண்டிய இந்த மார்க்கெட்டிங் உலகத்தில் யூட்யூப் என்னும் உலகின் மிகச் சிறந்த மார்க்கெட்டிங் கருவியை எழுத்தாளர்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், வீடியோக்களின்மூலம் தங்கள் வாசகர்களை இன்னும் நெருக்கமாக அணுகவேண்டும்.
பெரும்பாலான யூட்யூப் வீடியோக்கள் இலவசம்தான். ஆனால், எழுத்தாளர்கள் சொந்தமாகச் சானல் வைத்து அதற்குச் சந்தாக் கட்டணம் வசூலிக்கிற வாய்ப்பும் இருக்கிறது. ஒருவேளை அந்தச் சாத்தியத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டாலும், இலவச வீடியோக்களே உங்களுக்கு ஒரு நல்ல மார்க்கெட்டிங் கருவியாகச் செயல்படும், வாசகர்களை உங்கள் பக்கத்துக்கு அழைத்துவரும்.
யூட்யூபில் எழுத்தாளர்கள் என்ன செய்யலாம்?
இதற்கு ஏராளமான யோசனைகள் உள்ளன. அதில் முதன்மையான பத்து யோசனைகளை இங்கு பார்ப்போம்:
- உங்களுடைய புத்தகங்களைப்பற்றிய சிறு அறிமுகக் குறிப்புகளை நீங்களே பேசி வெளியிடலாம். அல்லது, உங்கள் நூல்களைப் படித்த வாசகர்களைப் பேசவைத்து வெளியிடலாம்.
- உங்கள் புத்தகங்களிலிருந்து ஒரு சிறு பகுதியை அல்லது உங்களுடைய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை நீங்களே படித்து வெளியிடலாம், ஒலிப் புத்தகம்போல் இது வீடியோ புத்தகம். அதற்குப் பல வாசகர்கள் உள்ளார்கள்
- உங்களுடைய பேட்டிகளை வெளியிடலாம்.
- எழுதுவதுபற்றிய சிறு குறிப்புகளை நீங்கள் உங்கள் வாசகர்களுக்கு வழங்கலாம்.
- நீங்கள் அடுத்து எழுதும் புத்தகத்தைப்பற்றிய அறிமுகத்தைக் கொடுத்து ஆர்வத்தைத் தூண்டலாம்.
- உங்களுடைய இயல்பு வாழ்க்கையில் நடக்கிய விஷயங்களை உங்கள் கருத்துகளுடன் பதிவு செய்யலாம்.
- நீங்கள் எழுதும் அறையை, அல்லது, எழுதுகிற முறையை வீடியோவாக வழங்கலாம்.
- வாசகர்களுடைய கேள்விகளுக்கு வீடியோவில் பதில் அளிக்கலாம்.
- உங்கள் புத்தகங்களுடன் தொடர்புடைய கூடுதல் தகவல்களை (Extra Materials) வீடியோ வடிவில் வழங்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நாவல் இடம்பெறுகிற இடத்திலிருந்து நீங்கள் பேசலாம், அது நாவலைப் படித்தவர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
- நீங்கள் எந்தத் துறைபற்றி எழுதுகிறீர்களோ, அதில் சிறிய, பெரிய பாடங்களை/வகுப்புகளை யூட்யூப் லைவ் ஸ்ட்ரீமிங் வழியாக நடத்தலாம், அவற்றை நிரந்தரப் பதிவுகளாக யூட்யூபில் வைக்கலாம்.
இப்படி இன்னும் பல வழிகள் உள்ளன. எதுவானாலும் தரமாகச் செய்தால் வாசகர்கள் விரும்புவார்கள், உங்களைக் கொண்டாடுவார்கள்.
இப்படி உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் பயன்படுத்துகிற, விரும்புகிற வீடியோ வழிகளைக் கமென்ட்ஸ் பகுதியில் சொல்லுங்கள். அனைவரும் சேர்ந்து கற்றுக்கொள்வோம்.
***
Keywords: Authors, Author, Writers, Writer, Writing, Author Brand, Writer Brand, Video, Marketing, Video Marketing, Book Marketing, Books, Book, YouTube, Vimeo, YouTube Live Streaming, Live Stream, Live Streaming