இன்று எங்கள் வீட்டில் நாட்டு மக்காச்சோளம் (அதாவது, உள்ளூர் வகை மக்காச்சோளம்) வேகவைத்திருந்தார்கள். நானும் குழந்தைகளும் அதை ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.
எங்கள் குழந்தைகளுக்கு ‘ஸ்வீட் கார்ன்’ எனப்படும் கலப்பின (ஹைப்ரிட்) மக்காச்சோளமும் பிடிக்கும். எனக்கு அது அவ்வளவாகப் பிடிக்காது. அதனால், அவர்களைக் கொஞ்சம் சீண்டினேன், ‘இந்த நாட்டு மக்காச்சோளம் எவ்ளோ நல்லா இருக்கு, இதை விட்டுட்டு ஏன் ஹைப்ரிட் மக்காச்சோளத்தை விரும்பிச் சாப்பிடறீங்க?’
‘இந்த மக்காச்சோளம் நல்லாதான் இருக்கு. ஆனா, இது எப்பவும் இவ்ளோ நல்லா இருக்காது, சில சமயம் சூப்பரா இருக்கும், சில சமயம் சொதப்பிடும், Consistency இல்லை’ என்றாள் என் மூத்த மகள், ‘ஹைப்ரிட் வெரைட்டியில அது ஒரு வசதி, எப்பவும் ஒரேமாதிரி Consistent சுவை இருக்கும். இது நல்லா இருக்குமோ, இருக்காதோன்னு யோசிக்கவேண்டியதில்லை. நம்பிச் சாப்பிடலாம்.’
என் மகள் சொன்ன இந்தக் கருத்து மக்காச்சோளத்தைப்போலவே எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்:
- சில எழுத்தாளர்கள் நாட்டு மக்காச்சோளத்தைப்போல் அவ்வப்போது மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள், மற்ற நேரங்களில் சுமாராக எழுதுகிறார்கள். அவர்களுடைய படைப்புகளில் சிறந்தவற்றைத் தேடிப் பிடிப்பது வாசகர்களுக்கு ஒரு வேலை.
- வேறு சில எழுத்தாளர்கள் கலப்பின மக்காச்சோளத்தைப்போல் எப்போதும் ஒரேமாதிரி எழுதுகிறார்கள். அது சிறப்பா, சிறப்பில்லையா என்பது வேறு விஷயம். அந்த ‘ஒரேமாதிரி எழுதுவது’ என்கிற Consistencyக்கு வாசகர்கள் மதிப்பு அளிக்கிறார்கள். ‘அவர் எழுதின கதையா? நம்பிப் படிக்கலாம்’ என்று நினைக்கிறார்கள், அந்த நம்பிக்கையை அவர் ஒவ்வொருமுறையும் கண்டிப்பாகக் காப்பாற்றிவிடுகிறார். (திரைப்படத்துறையில் ‘Minimum Guarantee இயக்குநர்கள்’ என்று சிலர் உண்டு. அவர்களும் இந்த வகைதான்.)
எழுத்தாளராக நீங்கள் எந்த வகை? அவ்வப்போது மிகச் சிறப்பாக எழுதுகிறவரா? அல்லது எப்போதும் ஒரேமாதிரி தரத்தைப் பராமரிக்கிறவரா?
***
Keywords: Writing, Writers, Writer, Authors, Author, Consistency, Quality, என். சொக்கன், என்சொக்கன், சொக்கன், N. Chokkan, nchokkan, N. Sokkkan