புனைவல்லாத (நான்ஃபிக்ஷன்) புத்தகங்கள் அடிப்படையில் உண்மைத் தகவல்கள், நிகழ்வுகளைமட்டும் கொண்டிருக்கவேண்டும். இதை உறுதிசெய்வதற்காக நூலின் பிற்பகுதியில் அந்த நூலின் உருவாக்கத்துக்கு உதவிய பிற நூல்கள், ஆவணப் படங்கள், கடிதங்கள், செய்திக் குறிப்புகள், கட்டுரைகள், பேட்டிகள், அறிக்கைகள் போன்றவற்றைச் சான்றுகளாகப் பட்டியலிடும் வழக்கம் உள்ளது.
இந்தப் பட்டியலால் எழுத்தாளருக்கும் நன்மை (அவருடைய நம்பகத்தன்மை கூடுகிறது), வாசகருக்கும் நன்மை (அந்தத் தலைப்பில் கூடுதல் விஷயங்களைப் படிக்கும் வாய்ப்பு அமைகிறது). பல வாசகர்கள் நூலைப் படித்துவிட்டு References பட்டியலைக் கூர்ந்து கவனிப்பார்கள், அதிலிருந்து தாங்கள் படிக்கப்போகும் அடுத்த நூலைத் தேர்ந்தெடுப்பார்கள்.
எழுத்தாளர்கள் தங்கள் Reference பக்கத்தை எப்படி அமைக்கலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன:
- நூலின் பிற்பகுதியில் (பின்னிணைப்பாக) அந்த நூல்முழுவதும் இடம்பெற்ற அனைத்து Reference ஆவணங்களையும் தனித்தனித் தலைப்புகளில் (நூல்கள், கடிதங்கள், செய்திகள், கட்டுரைகள்… இப்படி) தொகுத்து வழங்கலாம்
- நூலின் பிற்பகுதியில் (பின்னிணைப்பாக) அந்த நூல் முழுவதும் ஒவ்வோர் அத்தியாயத்திலும் இடம்பெற்ற Reference ஆவணங்களை அந்தந்த அத்தியாயத் தலைப்பின்கீழ் தொகுத்து வழஙகலாம் (அத்தியாயம் 1 References, அத்தியாயம் 2 References… இப்படி)
- இதையே ஒவ்வோர் அத்தியாயத்தின் நிறைவிலும் செய்யலாம் (அத்தியாயம் 1, அதற்கான References, அதன்பிறகு அத்தியாயம் 2, அதற்கான References… இப்படி)
- அத்தியாயத்துக்குள் அந்தந்த வரியின்கீழ் அடிக்குறிப்பாக (Footnote) அதற்கான சான்றை வழங்கலாம். இது ஒரு மிகச் சிறந்த உத்தி; ஆனால், மிகுந்த நேரம் எடுக்கும், அதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும்
வழி எதுவானாலும் சரி, சான்றுகளின் பட்டியலை நீங்கள் கண்டிப்பாக வழங்கவேண்டும்; அதை உங்கள் வாசகர் எதிர்பார்க்கிறார், அது உங்கள் கடமையும்கூட. அதனால், உங்கள் நூல் ஆய்வின்போது நீங்கள் பயன்படுத்தும் அத்தனை ஆவணங்களையும் முறையாகக் குறித்துவையுங்கள், உங்கள் நூலில் அவற்றைச் சரியாகத் தொகுத்து வழங்குங்கள்.
***
நான்ஃபிக்ஷன் நூல்களை எழுத விரும்புகிறீர்களா? அந்தக் கலையை முறையாகக் கற்றுத்தரும் ஒரு பயிற்சி வகுப்பு இங்கு உள்ளது.
***
Keywords: Nonfiction, Non Fiction, References, Reference, Reference List, References List, Proof, List of References, Appendix