ஒரு கதை அல்லது கட்டுரையில் எத்தனைச் சொற்கள் இருக்கலாம்?

கதை, கவிதை, குறுநாவல், நாவல் என அனைத்துக்கும் சொல் வரையறை அமைப்பது நம்முடைய பழக்கமாக இருக்கிறது. சில பத்திரிகைகளும் “இத்தனைச் சொல்லுக்குள் கட்டுரை அனுப்புங்கள்” என்று விதிமுறைகளை வகுக்கிறார்கள்.

உண்மையில், இதுபோன்ற முன் கட்டுப்பாடுகளை வைத்து ஒரு படைப்பு அமைவதில்லை. அந்தந்த விஷயத்தைச் சொல்வதற்கு எத்தனைச் சொற்கள் தேவையோ அத்தனைச் சொற்களை வழங்கினால்தான் அது முழுமை பெறும். தேவைக்கு மேல் எழுதும் சொற்கள் அதைத் தொய்வாக்கும், தேவைக்குக் குறைவாக எழுதினால் புரியாது.

ஆனால், அந்தத் தேவையை எப்படித் தெரிந்துகொள்வது?

இது பழக்கத்தால் வருகிற பயிற்சிதான். தொடக்கத்தில் நாம் எழுதும் அனைத்தையும் நாமே உரக்கப் படித்துப்பார்ப்பதன்மூலம் அதிலிருக்கும் தேவையில்லாத பகுதிகளை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். ஆனால் ஒன்று, நம் எழுத்தை இன்னொருவருடைய பார்வையிலிருந்து பார்க்கவேண்டும், அப்போதுதான் தேவையற்றவை தெரியும், இல்லாவிட்டால் “எல்லாம் நல்லாதான் இருக்கு” என்று எண்ணிவிடுவோம்.

இப்படித் தேவையானவற்றை வைத்துக்கொண்டு மற்றவற்றை வெட்டிப் பழகினால், அதாவது, நம் எழுத்தை நாமே எடிட் செய்து பழகினால், படைப்பின் நீளத்தைவிட முழுமைதான் முக்கியம் என்பது நமக்குத் தெரியும். அப்போது சொல் கணக்கைப் பொருட்படுத்தமாட்டோம்.

இதே பணிக்கு நாம் நம்முடைய நண்பர்களுடைய உதவியையும் நாடலாம். அதாவது, அவர்களிடம் கதையை, கட்டுரையைத் தந்து படிக்கச் சொல்லலாம், ‘சரியா இருக்கா, எங்கயாவது நீளம் கூடக்குறைய இருக்கறதாத் தோணுதா?’ என்று வெளிப்படையாகக் கேட்கலாம், அவர்களுடைய கருத்துகளைக் கூர்ந்து கவனித்து நம் படைப்பைச் செழுமையாக்கலாம்.

முன்பெல்லாம் அச்சு இதழ்களில் சொல் கணக்கு முக்கியமாக இருந்தது. இப்போது டிஜிட்டல் ஊடகங்களில் அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. எனினும், வாசகர்கள் கவனித்துப் படிப்பார்களா என்பது முக்கியம், அதனால் சொல் கணக்கு எப்போதும் நம் மனத்தில் இருக்கவேண்டும். சுருங்க எழுதுவதும் சரியாக எழுதுவதும் நாம் பயிலவேண்டிய கலைகள்.

ஆனால் ஒன்று, போட்டிகள் போன்றவற்றில் கலந்துகொள்ளும்போது அவர்கள் சொல்லும் சொல் கணக்கை மதிப்பது முக்கியம். 500 சொற்களுக்குள் சிறுகதை அனுப்புங்கள் என்று அவர்கள் சொல்லும்போது நாம் 1200 சொற்களில் அனுப்பினால் அது சரியாகாது.

ஆனால், அந்தக் கதைக்கு 1200 சொற்கள் தேவைப்பட்டால் என்ன செய்யலாம்?

  1. அதை வேறொரு பத்திரிகைக்கு அல்லது போட்டிக்கு அனுப்பலாம் (அல்லது)
  2. மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு எடிட் செய்து 500 சொற்களுக்குக் கொண்டுவரலாம். இது போட்டிக்காகச் செய்யும் சமரசம்தான். பின்னர் கதை வெற்றி பெற்றுப் பிரசுரமானபின் முழு வடிவத்தை உங்கள் வலைப்பதிவில் அல்லது நூலில் வெளியிடலாம். ஏனெனில், 1200 சொற்கள் உள்ளதுதான் சரியான அளவு, சரியான கதை என்று எழுத்தாளராகிய நீங்கள் தீர்மானித்திருக்கிறீர்கள்.

***

Keywords: Stories, Story, Novels, Novel, Articles, Article, Nonfiction, Fiction, Editing, Number of words, Words, Word Size, Wordsize, Word Limit, Wordlimit, Size of a story, Size of an article, Story Size, Article Size

1 Comment

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s