Morton Feldman என்ற இசையமைப்பாளர், John Cage என்ற இன்னொரு (மூத்த) இசையமைப்பாளரைச் சந்திக்கிறார், சில அறிவுரைகள் பெறுகிறார்.
அந்தப் பேச்சில் இசை நிரம்பி வழிந்திருக்குமோ என்றால், இல்லை. ஜானிடம் மார்டன் கேட்ட கேள்விகள் கிட்டத்தட்ட ஸ்டேஷனரிக் கடையில் நடக்கும் உரையாடலைப்போல் இருக்கின்றன:
நீங்கள் இசைக் குறிப்புகளை எழுதுவதற்கு என்ன பேனா பயன்படுத்துகிறீர்கள்? கோடு போடுவதற்கு என்ன ruler பயன்படுத்துகிறீர்கள்? ஏதாவது தவறாக எழுதிவிட்டால் அதை அழிப்பதற்கு என்ன அழிப்பான் (eraser) பயன்படுத்துகிறீர்கள்?
மார்டனுடைய கேள்விகளுக்கெல்லாம் ஜான் பொறுமையாகப் பதில் சொல்கிறார், Rapidograph என்ற துல்லியமான ஜெர்மன் பேனாவை அவருக்கு அறிமுகப்படுத்துகிறார், மார்டன் எழுதிய சில இசைக் குறிப்புகளை எடுத்துக்கொண்டு அவற்றைத் தன்னுடைய கையெழுத்தில் மீண்டும் எழுதிக் காண்பிக்கிறார், இசைக் குறிப்புகள் என்றால் இப்படிதான் ஒழுங்காக, நேர்த்தியாக, பிசிறில்லாமல், தூய்மையுடன் இருக்கவேண்டும் என்று கற்றுத்தருகிறார்.
இவற்றோடு, இசைக் குறிப்புகளை எழுதும்போது உட்கார்கிற இருக்கையும் வசதியாக இருக்கவேண்டும் என்கிறார் மார்டன். ‘சரியான ஒரு நாற்காலி கிடைத்துவிட்டால் நான் மொசார்ட்போல் படைத்துவிடுவேன்’ என்பது அவருடைய நம்பிக்கை.
மார்டன் ஃபெல்ட்மன் 1984ல் நடத்திய ஒரு சொற்பொழிவில் இந்தக் குறிப்புகளைப் படித்தேன். பேனா, கோடு போடுகிற ஸ்கேல், அழிப்பான், நாற்காலி என்று எல்லாம் கச்சிதமாக இருக்கவேண்டும் என்கிற அவருடைய வலியுறுத்தலை முதன்முறை படித்தபோது சிரிப்பாக இருந்தது. ஆனால், கொஞ்சம் யோசித்தால், படைப்போட்டத்துக்கு எந்தவிதத்திலும் தடை இல்லாதபடி ஒரு வசதியான சூழலை உண்டாக்கிக்கொள்வது படைக்கிறவனுக்கு மிக முக்கியம் என்பது புரிகிறது. இதில் அட்ஜஸ்ட் செய்துகொண்டால், படைப்பில் சமரசம் செய்துகொள்வதைப்போல்தான்.
இதே சொற்பொழிவில் இன்னோர் இடத்தில் மார்டன் இதையும் கொஞ்சம் கோடு போட்டுக் காண்பிக்கிறார்: ‘பல நேரங்களில் நான் பென்சிலில் எழுதுவதில்லை; நேரடியாகப் பேனாவில் எழுதுவேன். அதற்குக் காரணம், நான் எழுதுவதுதான் இசை, எழுதியதை அழிக்கமாட்டேன், திருத்தி எழுதமாட்டேன் என்கிற பிடிவாதம் இல்லை, ஓர் இசைக் குறிப்பை எழுதியபின் அழிப்பானைப் பயன்படுத்தி அதைத் திருத்தவேண்டிய தேவை ஏற்பட்டால், எனக்குக் கவனம் போதவில்லை என்று பொருள். எழுதுவதை நிறுத்திவிட்டுச் சாப்பிடப் போய்விடுவேன்.’
***
Keywords: Writing, Creating, Creativity, Creators, Creator, Music, Music Writing