வாழ்க்கை வரலாற்று நூல்களுக்குத் தகவல் திரட்டுவது எப்படி?

ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது அதற்கான தகவல்களை எங்கிருந்தெல்லாம் பெறலாம்?

முகம்மது முஸம்மில்

தனி மனிதர்களுடைய வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, நாடுகளின் வரலாறு, சமூக வரலாறு, மொழி வரலாறு என்று எந்த வரலாற்றை எழுதுவதானாலும் சரி, இரண்டுவிதமான மூலங்களைத் தேடிப் போகலாம்: முதன்மை மூலங்கள், துணை மூலங்கள்.

முதன்மை மூலங்கள் (Primary Sources) என்றால், சம்பந்தப்பட்ட நபரோ அவருடன் நேரடியாகப் பழகியவர்களோ எழுதியுள்ள, பேசியுள்ள விஷயங்கள் என்று பொருள். காந்தியைப்பற்றி நீங்கள் ஒரு நூல் எழுதுகிறீர்கள் என்றால், அவரே பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறார், அவரோடு நேரடியாகப் பழகியவர்கள் அதைவிடப் பலமடங்கு எழுதியுள்ளார்கள், இதுபோல் எந்தவொரு நபர்/நிறுவனத்தைப்பற்றியும் முதன்மை மூலங்கள் ஏராளமாகக் கிடைக்கும். இவை நூல்களாக, கட்டுரைகளாக, கடிதங்களாக, பேட்டிகளாக இருக்கலாம், அச்சில், ஒலி வடிவத்தில், வீடியோ வடிவத்தில், இணையத்தில் எழுத்து வடிவத்தில் கிடைக்கலாம். நூலகங்களையும் இணையத்தையும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.

இப்படிப் பொதுவில் கிடைக்காத முதன்மை மூலங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக, நீங்கள் யாரைப்பற்றி எழுதுகிறீர்களோ அவர்கள் எழுதிய தனிப்பட்ட கடிதங்கள் அவர்களுடைய குடும்பத்தினர் அல்லது நிறுவனத்தின் கோப்புகளில் இருக்கலாம். அவற்றைப் பெறுவதற்கு நீங்கள் சிறப்பு அனுமதி பெறவேண்டியிருக்கும்.

மூன்றாவதாக, நீங்கள் யாரைப்பற்றி எழுதுகிறீர்களோ அவரையோ அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்களையோ சந்தித்துப் பேட்டி எடுக்கலாம், களத்துக்குச் சென்று ஆராயலாம், இவையும் முதன்மை மூலங்களாக (உங்கள்மூலம்) பதிவாகும்.

துணை மூலங்கள் அல்லது இரண்டாம் நிலை (Secondary) மூலங்கள் என்பவை அந்த நபர் அல்லது நிறுவனம் அல்லது அமைப்பைப்பற்றிப் பிறர் எழுதியுள்ளவை. செய்திகள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் ஆகியவையும் இந்த வகையில் வரும். இவர்கள் பெரும்பாலும் அந்த முதன்மை மூலங்களை ஆராய்ந்து எழுதியிருப்பார்கள், அவற்றைப் பிறர் மூலங்களாகக் கொள்வார்கள். இங்கும் நூலகங்கள், இணையம், நேரடிப் பேட்டிகள் உங்களுக்கு உதவும்.

இந்த இரண்டுக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. முதன்மை மூலங்கள் பெரும்பாலும் நேரடியாக நம்பக்கூடியவையாக, நம்பிப் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கும். ஆனால், துணை மூலங்களைக் கொஞ்சம் ஆராய்ந்துதான் நம்பவேண்டும். அது ஒரு கலை.

அதற்காக, முதன்மை மூலங்கள் அனைத்தையும் நேரடியாக நம்பிவிடவும் இயலாது. திருவள்ளுவர் ஃபார்முலாதான்:

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இந்தப் பகுதியில் எழுத்துபற்றிய கேள்வி, பதில்கள் இடம்பெறும். உங்கள் கேள்விகள், ஐயங்களையும் ezhudhuvom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

Keywords: Book Research, Research, Researching, Data, Primary Data, Secondary Data, Primary Sources, Secondary Sources, Primary Source, Secondary Source, Books, Interviews, Interviewing, Validation, Verification, Fake News, Online Research, Web Research, Library, Libraries

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s