அசின் என்ற நடிகையை நமக்குத் தெரியும். ஆனால், இங்கு நாம் பார்க்கப்போகும் ASIN வேறு. நம்முடைய நூல்களை அமேசானில் பதிப்பிக்கும்போது நாம் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு சொல் இது.
உண்மையில், ASIN என்பது சொல் இல்லை. Amazon Standard Identification Number (அமேசான் தரநிலைப்படுத்தப்பட்ட அடையாள எண்) என்பதன் சுருக்கம்தான் இது. அதாவது, அமேசான் இணையத் தளத்தில் பொருட்களை எளிதில் கண்டறிவதற்கான ஓர் அடையாள எண்.
பெயரில் ‘எண்’ என்று இருந்தாலும், இதில் எழுத்துகளும் கலந்து இருக்கும். எடுத்துக்காட்டாக, ‘The Seven Habits of Highly Effective People‘ என்ற புகழ் பெற்ற நூலின் கிண்டில் பதிப்பு ASIN இதுதான்: B08KH29CJC. அமேசான் தேடல் பெட்டியில் சென்று இதைப் போட்டுத் தேடினால் சட்டென்று இந்தப் புத்தகத்தைப் பெறலாம்.
இது எதற்கு? நேரடியாக ‘The Seven Habits of Highly Effective People‘ என்று தேடினால் அந்தப் புத்தகம் வராதா?
வரும். ஆனால், அத்துடன் கிட்டத்தட்ட அதே பெயரில் அமைந்த வேறு புத்தகங்களும் சேர்ந்து வரலாம். அந்தக் குழப்பத்தைத் தவிர்க்கதான் இந்த அடையாளம். B08KH29CJC என்பது ஒரு புத்தகத்தைத்தான் குறிக்கும், குழப்பம் குறையும்.
நீங்கள் கிண்டிலில் சொந்தமாக நூல்கள் பதிப்பிக்கும்போது, ஒவ்வொரு நூலுக்கும் ஒரு புதிய ASIN வழங்கப்படும். அதை அந்த நூலின் பெயருக்குப் பக்கத்தில் காணலாம். அல்லது, அந்த நூலின் அமேசான் பக்கத்தில் “ASIN” என்று தேடினால் கிடைக்கும்.
எழுத்தாளர், பதிப்பாளர் என்றமுறையில் ASINஐப் பயன்படுத்தி நீங்கள் இன்னும் பல விஷயங்களைச் செய்யலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் புத்தகத்துக்கு ஒரு விரைவான இணைப்பை உருவாக்கலாம். http://www.amazon.in/dp/ என்று தட்டச்சு செய்து அதற்குப் பின்னால் உங்கள் ASINஐச் சேர்த்தால் இணைப்பு தயார்.
இப்படி ASINக்கு இன்னும் பல பயன்கள் உண்டு. அதனால், உங்கள் புத்தகங்கள் ஒவ்வொன்றின் ASINஐயும் அறிந்துவைத்திருங்கள்.
Keywords: ASIN, Amazon, Kindle, Books, Book, eBooks, eBook, Amazon Standard Identification Number, Publishing, KDP, Kindle Publishing, Searching, Linking, Links, Link, Search, Search Terms