Daphne Gray-Grant என்ற எழுத்தாளர், பயிற்சியாளருடைய மின்னஞ்சல் கட்டுரையொன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். நடப்பதன்மூலம் மூளையில் புதிய இணைப்புகள் உருவாகின்றன, சிந்தனையும் படைப்பாற்றலும் பெருகுகின்றன என்கிறார். வரலாற்றின் மிகப் பெரிய சிந்தனையாளர்கள்/வெற்றியாளர்கள்/படைப்பாளர்கள் பலருக்கு நாள்தோறும் நடக்கும் பழக்கம் இருந்திருக்கிறது என்று ஒரு பட்டியல் கொடுக்கிறார். அரிஸ்டாட்டில், பீத்தோவன், சார்லஸ் டிக்கன்ஸ், எர்னென்ஸ்ட் ஹெமிங்வே, நீட்ஷே, வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.
இவர்களெல்லாம் உண்மையில் நாள்தோறும் நடந்தார்களா என்று நான் உறுதிசெய்யவில்லை. நடப்பதன்மூலம்தான் இவர்களுடைய படைப்பாற்றல் பெருகியதா என்பதையும் யாராலும் சொல்ல இயலாது. ஆனால், நாளின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நடப்பதற்காக வழங்கும்போது பல விஷயங்களை முனைந்து சிந்திக்க இயலுகிறது என்பதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். பல கட்டுரைகள், நூல்களின் அத்தியாயங்களை நடையின்போது உருவாக்கியிருக்கிறேன், அவற்றின் கட்டமைப்பை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கிறேன், அலுவலகப் பிரச்சனைகளுக்கும் நடையின்போது தீர்வு கிடைத்ததுண்டு.
ஒருவேளை சிந்தனை பெருகாவிட்டாலும் பரவாயில்லை, சுமார் நூறு கலோரிகளைச் செலவழிக்கலாம். அது உறுதி.
Keywords: Writing, Walking, Walk, Exercise, Creativity