உங்களுடைய கட்டுரை, நூல் அல்லது நாவலுக்காக ஆராய்ச்சி செய்கிறீர்கள். பல விஷயங்களைப் படிக்கிறீர்கள். பின்னர் அந்தப் படைப்பை எழுதும்போது இந்த விஷயங்கள் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளும்படி அவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்வது எப்படி? அதற்கான 15 டிப்ஸ் இதோ:
- குறிப்புகளைத் தாளிலும் எடுக்கலாம், ஃபோனிலும் எடுக்கலாம், கம்ப்யூட்டரிலும் எடுக்கலாம், உங்களுக்கு எது வசதியோ அதில் எடுங்கள், ஆனால், அனைத்துக் குறிப்புகளும் ஒரே இடத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
- நல்ல நினைவாற்றல் உள்ளவர்கள் மனத்தில் குறிப்பு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இது சிறு கட்டுரைகளுக்குதான் பொருந்தும். பெரிய நூலுக்கான குறிப்புகள் அனைத்தையும் மனத்தில் வைத்துக்கொள்வது வீண் வேலை.
- கையால் குறிப்பு எடுக்கிறவர்கள் தெளிவான கையெழுத்தில் எழுதப் பழகுங்கள். நீங்கள் எழுதியதைப் பின்னர் உங்களாலேயே படிக்க இயலவில்லை என்றால் அந்தக் குறிப்பு வீண்.
- செல்ஃபோன், கணினியில் குறிப்பு எடுக்கிறவர்கள் அதைப் புகைப்படம் எடுக்காதீர்கள், அல்லது, காப்பி, பேஸ்ட் செய்யாதீர்கள், குறிப்பை நீங்களே உங்கள் சொற்களில் எழுதுவது அல்லது தட்டச்சு செய்வதன்மூலம் அது உங்கள் மனத்தில் பதியும், அது மிகவும் முக்கியம்.
- செல்ஃபோன், கணினியில் குறிப்பு எடுக்கும்போது அந்தக் குறிப்புகள் எழுத்துகளாக இருக்கலாம், அல்லது குறிப்புகளுக்கிடையில் அழகான இணைப்பை உண்டாக்கும் Mindmaps போன்ற உத்திகளைப் பயன்படுத்தலாம். இதிலும் உங்களுக்கு எது வசதியோ அதைத் தேர்ந்தெடுங்கள். (Mindmaps பற்றி மேலும் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.)
- குறிப்புகள் மிகச் சுருக்கமாகவும் இருக்கக்கூடாது; மிக நீளமாகவும் இருக்கக்கூடாது; தேவையான விஷயங்கள் அனைத்தும் அதில் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
- குறிப்புகள் இலக்கணத் தூய்மையுடன் இருக்கவேண்டியதில்லை. ஒரே ஒரு சொல்கூடக் குறிப்புதான்.
- நாள், ஆண்டு, இடம் போன்ற விஷயங்களைக் குறிப்பில் கண்டிப்பாகச் சேருங்கள். இதில் ஒரே ஒரு விஷயம் விடுபட்டாலும் பின்னர் நூல் எழுதும்போது தேடிக் கண்டுபிடிப்பது சிரமம், உங்கள் எழுத்து ஓட்டம் தடைப்படும்.
- நேரத்தை மிச்சப்படுத்த விரும்புகிறவர்கள் குறிப்பு எடுப்பதற்குப் பிறரைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் உதவியாளர் அல்லது Virtual Assistant எனப்படும் மெய்நிகர் உதவியாளர். ஆனால், அந்தக் குறிப்புகளை நீங்கள் ஒருமுறை படித்து உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த முக்கியமான விஷயத்தில் பிறரை முழுமையாக நம்புவது நல்லதில்லை.
- அத்தனைக் குறிப்புகளையும் ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதிவருவதைவிட, துணைத் தலைப்புகளை உண்டாக்கிக்கொண்டு உரிய குறிப்புகளை அதன்கீழ் சேர்ப்பது நல்லது. எடுத்துக்காட்டாக, ஒரு வாழ்க்கை வரலாற்றுக்கு 2000 குறிப்புகள் எடுக்கிறீர்கள் என்றால், அதில் 50 குறிப்புகள், ‘இளமைப் பருவம்’ என்ற துணைத் தலைப்பின்கீழ் வரலாம்; 120 குறிப்புகள், ‘கல்லூரி வாழ்க்கை’ என்ற துணைத் தலைப்பின்கீழ் வரலாம். இப்படித் துணைத் தலைப்புகளின்கீழ் குறிப்பெடுக்கும்போது, அவற்றைத் தொகுத்துப் பார்ப்பதும் எளிதாக இருக்கும்.
- ஒரே குறிப்பை (அல்லது தகவலை) இரண்டு வெவ்வேறு இடங்களில் பார்க்கிறீர்கள் என்றால், முன்பு எடுத்த குறிப்புக்குத் திரும்பச் சென்று “+1” என்று போட்டுக்கொள்ளுங்கள், முழுக் குறிப்பையும் இன்னொருமுறை எழுதவேண்டியதில்லை.
- எந்தக் குறிப்பு எங்கிருந்து வந்தது என்பதையும் அந்தந்தக் குறிப்பின்கீழ் எழுதுங்கள். எடுத்துக்காட்டாக: நூலின் பெயர் அல்லது கட்டுரையின் பெயர் அல்லது பேட்டியின் தலைப்பு போன்றவை. ஒரே நூலிலிருந்து பல குறிப்புகள் வருகின்றன என்றால், அந்த நூல் பெயரைச் சுருக்கி எழுதலாம், அல்லது, அதற்கு ஓர் எண்ணைக் கொடுத்துவிடலாம்.
- படைப்பை எழுதத் தொடங்குமுன் குறிப்புகளை ஒருமுறை பாருங்கள்; அவை உங்களுக்கு ஒரு முழுமையான பார்வையை அளித்தால், அதன்பிறகு எழுதத் தொடங்கலாம்.
- குறிப்புகள் அனைத்தும் உங்கள் படைப்பில் பயன்படவேண்டும் என்று கட்டாயம் இல்லை. தேவையானதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மற்றவை வேறொரு நேரத்தில் பயன்படும்.
- படைப்பை எழுதியதும் குறிப்புகளை அழித்துவிடாதீர்கள், குறைந்தது ஆறு மாதம்வரை அவற்றைச் சேமித்துவைப்பது நல்லது, ஏதேனும் அவசரப் பார்வைக்கு உதவும்.
Keywords: Research, Notes, Note taking, Note-taking, Book Research, Note, Summary, Articles, Mindmaps, Mindmap, Mind Map, Mind Maps, Tony Buzan