உங்கள் நூலை நீங்களே எடிட் செய்யலாம். அல்லது, பிறரிடம் (தொழில்முறை எடிட்டர்கள்) தந்து எடிட் செய்யச்சொல்லலாம். இந்த இரண்டில் எது சரியானது?
உண்மையில், சுய எடிட்டிங், அதாவது, ஒருவர் தன்னுடைய நூலைத் தானே எடிட் செய்வது மிகவும் தேவையான ஒன்று. ஒருவேளை பிறரிடம் எடிட் செய்தாலும், அதற்குமுன் தானே எடிட் செய்துகொண்டால் பல நன்மைகள் உண்டு:
- நம்முடைய எழுத்தில் இருக்கும் பிழைகள் நமக்குத் தெரியும். அடுத்தமுறை எழுதும்போதே அவற்றைத் திருத்தி எழுதுவோம்
- பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை இன்னொருமுறை படிப்பதுகூட இல்லை. எடிட்டிங்குக்காக ஒருமுறை படிக்கும்போது, நூலின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய பிரச்சனைகள், குறைபாடுகள்கூட நமக்குத் தெரியும், இன்னொருவருடைய பார்வையிலிருந்து நம் நூலைப் பார்ப்போம்
- வெளி எடிட்டர்களை முழுமையாக நம்பினால், அடுத்தடுத்த நூல்களை இன்னும் செம்மையாக ஆக்கும் வாய்ப்பை இழந்துவிடுவோம். இதனால், குறைந்தபட்சம் எடிட்டர் எடிட் செய்த பதிப்பை ஒருமுறை வாசித்துக் கற்றுக்கொள்ளவாவது வேண்டும்.
- வெளி எடிட்டிங் என்பது மிகுந்த செலவைக் கோருகிற விஷயம், நாமே எடிட்டிங் கற்றுக்கொண்டால் பணம் பெருமளவு மிச்சமாகும்
- சிறந்த எடிட்டர்கள் பலரிடம் நூல்கள் வரிசையில் காத்திருக்கும். நம் நூலை அவர்கள் ஏற்றுக்கொண்டு எடிட்டிங் செய்து தருவதற்கு நாளாகும். அதனால், நம் நூலின் பதிப்பும் தாமதமாகும்
இப்படிப் பல கோணங்களில் சிந்தித்துப் பார்க்கும்போது, நம் நூல்களை நாமே எடிட்டிங் செய்யக் கற்றுக்கொள்வது சிறப்பாகத் தோன்றுகிறது. ஒருவேளை, அதற்குச் சிறிதும் நேரம் இல்லாத சூழ்நிலையில் முற்றிலும் பிற எடிட்டர்களைச் சார்ந்திருக்கலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் நூல்களை எடிட் செய்வது யார்? நீங்களா? பிறரா? இருவருமா?